மேரிலாந்து, ஜூலை 28– ஜூலை 20, 2024 அன்று மாலை வாசிங்டன் அருகே உள்ள மேரிலாந்து மாநிலத்தில், பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் சார்பாக கலைஞர் நூற்றாண்டு விழா சீரும் சிறப்போடும் நடந்தேறியது.
பெரியார் – அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் நிறுவுநர் வழக்குரைஞர் தோழர் கனிமொழி அவர்கள் அனைவரையும் வருக வருக என்று வரவேற்று, குறிப்பாக தமிழ்த்தாய் வாழ்த்தோடு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
தமிழ்த் தாய் வாழ்த்திற்கு முன் இருக்கும் வரலாற்று நிகழ்வை குறிப்பிட்டு கலைஞர் காலத்தில் அவர் எவ்வாறு அதனை மாற்றி காண்பித்தார் என்பதை மறவாமல் குறிப்பிட்டார்.
பெரியார் – அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் ஒருங்கிணைப் பாளர் தோழர் சுபாஷ் சந்திரன் எல்லோரையும் வரவேற்று, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முறைப்படி தொடக்க உரையாற்றி கலைஞரின் பண்புகளை பாராட்டி பேசினார்.
வட அமெரிக்க தமிழ் சங்க பேரவையின் மேனாள் தலைவரும், அமெரிக்க தமிழ் கல்விக் கழகத்தின் மேனாள் தலைவருமான பேராசிரியர் முனைவர் அரசு செல்லையா கலைஞரைப் பற்றி பல்வேறு முக்கிய வரலாற்று விடயங்களை அடுக்கடுக்காக பகிர்ந்து கொண்டார்.
குறிப்பாக கலைஞரின் நெஞ்சு உரம் பற்றி முக்கிய எடுத்துக்காட்டுகளோடு உரையாற்றினார்.
அடக்குமுறை மிசா காலத்தில் (1976) கலைஞர் அதனை எவ்வாறு எதிர்கொண்டார் கலைஞருக்கு எழுதுகோலா செங்கோலா என்பதை பற்றியும், முரசொலி அக்காலத்தில் அது எவ்வாறு தணிக்கை செய்யப்பட்டது என்பதை பற்றியும் மொழி உணர்வோடும் இன உணர்வோடும் கலைஞர் எப்படி நடந்து கொண்டார் என்பதை பகிர்ந்து கொண்டார்.
கலைஞர் தேர்தலில் சில சமயம் தோல்வியுற்ற பிறகு அதாவது அவரது கட்சி தோல்வியுற்ற பிறகும் கூட கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து யாரும் ஜெயிக்கவில்லையே என்று வருத்தப்பட்டதை மறவாமல் நினைவு கூர்ந்தார்.
கலைஞரின் சமத்துவபுரம் – உழவர் சந்தை
கலைஞரின் சமத்துவபுரம், உழவர் சந்தை எல்லாம் இன்றும் பேசப்படும் என்றும் பகிர்ந்து கொண்டார்.
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கனிமொழி அவர்கள் கலைஞர் அவர்களின் நெஞ்சுக்கு நீதி எப்படி இன்றும் பரபரப்பாக இருக்கிறது என்பதையும், தனி மனிதனாக வாழ்க்கையில் அவர் அடைந்த இன்னல்களை பற்றியும், அதனை எவ்வாறு தன்னுடைய கடின உழைப்பால் வென்று காட்டினார் என்பதையும் தனது சிற்றுரையில் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்விற்கு முக்கிய பேச்சாளராக தமிழ்நாட்டில் இருந்து வந்திருந்த திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் துரை சந்திரசேகரன் சிறப்புரை ஆற்றினார்.
கலைஞரைப் பற்றி சொல்வதற்கும் பேசுவதற்கும் எழுதுவதற்கும் ஏராளமான விடயங்கள் இருக்கின்றன என்பதை தன் உரையின் தொடக்கத்திலேயே குறிப்பிட்டார்.
கலைஞரின் மொழிப்பற்றும் இனப்பற்றும் காலம் கடந்தும் இருக்கும் என்பதையும், தன்னுடைய எழுத்தாற்றல் மூலமாக பல்வேறு சிந்தனைகளை, கருத்துகளை சட்டமாக மாற்றியவர் கலைஞர் என்பதை அய்யா அவர்கள் மறவாமல் பகிர்ந்து கொண்டார்.
குறிப்பாக தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம் எப்படி எவ்வாறு ஏன் துவங்கப்பட்ட? குறிப்பாக ஏழை மக்களுக்கு உணவு பற்றாக்குறை வராமல் தடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட கழகம் – இந்தியாவிலேயே முதன்முறை யாக இது நடந்தேறியது என்பதை பகிர்ந்து கொண்டார்.
தேசியக்கொடியை ஏற்றுகின்ற உரிமையை பெற்றுக் கொடுத்தவர்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சருக்கு சுதந்திர நாள் விழாவில் தேசியக்கொடியை ஏற்றுகின்ற உரிமையை பெற்றுக் கொடுத்த உன்னத தலைவன். அது மட்டுமல்ல ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மாவட்ட தலைநகரில் இந்திய ஆட்சிப் பணியில் இருக்கும் அய்ஏஎஸ் ஆட்சியாளர்கள் கொடியேற்றுவது என்பது மாநில உரிமைக்கும் மாநில சுயாட்சிக்கும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு என்பதை சொன்னார்.
சிறீலங்காவில் இந்திய அமைதிப்படை இருந்துவிட்டு மீண்டும் இந்தியா வரும்பொழுது தமிழ்நாட்டில் சென்று இந்திய ராணுவ வீரர்களை கலைஞர் வரவேற்கவில்லை என்பதையும், அதனைத் தொடர்ந்து நரசிம்ம ராவ் அவர்கள் ஆளுநர் மாளிகையில் இருந்து கொண்டு கலைஞரை அழைத்த பொழுது அந்த அழைப்பையும் மறுத்தவர் கலைஞர் என்பதை மிக குறிப்பாக வரலாற்று இணைத்து பகிர்ந்து கொண்டார்.
தந்தை பெரியாருக்கு மிகப்பெரிய மரியாதையாக அவர் மறைந்த பொழுது அவருக்கு அரசு மரியாதையை செலுத்தியதை மிகப் பெருமையோடு சொல்லி, இதனால் அவருடைய ஆட்சிக்கு சிரமம் வரலாம் என்று சொன்ன பொழுதும் கூட அதைப்பற்றி துளியும் கவலைப்படாமல் தந்தை பெரியாருக்கு அரசு மரியாதை செய்தவர் கலைஞர்.
காந்தியார் இறந்த பொழுது அவருக்கு அரசு மரியாதை செய்ததையும், அவரும் அரசின் எந்த பொறுப்பிலும் இல்லை என்பதையும், அதனைப் போலவே தந்தை பெரியாருக்கும் மரியாதை செலுத்த வேண்டும் என்று கலைஞர் சொன்னதை நினைவு கூர்ந்தார்.
எண்ணற்ற இன்னல்களை…
கலைஞர் கடந்து வந்த பாதையில் எண்ணற்ற இன்னல் களை, கொடிய அரசியல் நிகழ்வுகளை சந்தித்தவர் என்றும், ஏராளமான அவமரியாதையை சந்தித்திருந்தாலும் தன்னுடைய கடின உழைப்பாலும் மொழி உணர்வாலும் இன உணர்வாலும் கலைஞர் தமிழ்நாட்டை அய்ந்து முறை ஆண்டு ஏழை எளிய மக்கள் முன்னேற்றத்திற்கு எண்ணற்ற சட்டங்களை நிறைவேற்றியவர் கலைஞர் என்பதை துரை சந்திரசேகரன் அவர்கள் பகிர்ந்து கொண்டார்.
மொழிப் போராட்டத்தில் பாளையங்கோட்டை சிறையில் கலைஞர் தனிமைச் சிறையில் இருந்ததை பகிர்ந்து கொண்டு அதனைத் தொடர்ந்து அறிஞர் அண்ணா அவர்கள் அன்பு தம்பி கலைஞர் இருந்த பாளையங்கோட்டை எனது யாத்திரை ஸ்தலம் என்று குறிப்பிட்டதை பகிர்ந்து கொண்டார்கள்.
நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் அடக்குமுறை காலத்தில் திமுகவிற்கு வேறு பெயர் வைத்து விடலாம் என்று சொன்ன பொழுது கலைஞர் திமுக அண்ணாவால் தொடங்கப்பட்ட கட்சி ஒரு காலும் அதனுடைய பெயரை மாற்றக்கூடாது என்று துணிச்சலோடு கலைஞர் எதிர்கொண்ட சவால்களை பகிர்ந்தார்.
தந்தை பெரியாருக்கு சிலை
தந்தை பெரியாருக்கு சிலை வைப்பதில் பெரிய உடன்பாடு இல்லை – ஆனால் தந்தை பெரியார் அவர்கள் கலைஞருக்கு சிலை வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததை மிக மிக முக்கிய வரலாற்று நிகழ்வாக பார்க்கப்படுகிறது என்றார்.
கலைஞரின் பன்முக ஆற்றல். எழுத்தாற்றல். பேச்சாற்றல். கவிதை எழுதும் திறம் வாசிப்பின் மீது உள்ள காதல், தொல்காப்பிய பூங்காவிற்கு உரை எழுதியது திருக்குறளுக்கு உரை எழுதியது, குமரி முனையில் திருவள்ளுவருக்கு சிலை அமைத்ததை பற்றி மறவாமல் பகிர்ந்து கொண்டார்.
தந்தை பெரியார் அவர்கள் அறிஞர் அண்ணா மீதும் கலைஞர் மீதும் காமராசர் மீதும் வைத்திருந்த நட்பும் நம்பிக்கையும் பற்றியும் துரை.சந்திரசேகரன் பகிர்ந்து கொண்டார்.
ஓர் எளிய குடும்பத்தில் ஓர் எளிய பின்புலத்தில் இருந்து வந்து வாழ்க்கையில் போராடி தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்து எண்ணற்ற சட்டங்களை ஏழை எளிய மக்களும் பலனடைவதற்காக இயற்றியவர் கலைஞர் அவர்கள்.
தொடர்ச்சி என்பது மிக முக்கியம்
கலைஞரைத் தொடர்ந்து கலைஞருடைய எண்ணங்களை சிந்தனைகளை தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை அறிஞர் அண்ணா அவர்களின் கனவுகளை தொடர்ந்து நிறைவேற்ற ஆளுகின்ற முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் தொடர்ச்சி என்பது மிக மிக முக்கியம் என்பதும் அதனை சீரோடும் சிறப்போடும் இந்த திராவிடம் அதன் அரசு செய்து கொண்டிருக்கிறது என்பதையும் மிக மிக முக்கியம் என்பதை மறவாமல் அய்யா அவர்கள் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது.
கலைஞர் அறக்கட்டளையின் நிறுவநர் வாசிங்டன் சிவா கலைஞரைப் பற்றி எல்லோரும் மிகப் பெருமையாகவும் அவருடைய சாதனைகளை பலரும் பேசி விட்ட காரணத்தால் தன்னுடைய உரையில் கலைஞருக்கும் மற்ற அரசியல் தலைவர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் உள்ள நட்பை பற்றி மிக மிகப் பெருமையோடு பகிர்ந்து கொண்டார்.
பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ்., நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன், தொழிலதிபர் மதுரை கருமுத்து கண்ணன், எழுத்தாளர் பிரபஞ்சன், கவிஞர் அறிவுமதி அவர்களுக்கும், கலைஞர்களுக்கும் உள்ள தொடர்பினை பற்றியும் அவர்கள் கலைஞரிடத்து கேட்ட உதவிகள், சமுதாயம் சார்ந்த உதவிகளை எடுத்துக்காட்டுகளோடு வாசிங்டனின் சிவா அவர்கள் பகிர்ந்து கொண்டார்.
செம்மொழி மாநாட்டில் கலைஞரின் உயரம் பற்றி கவிஞர் பழனி பாரதி அவர்கள் எழுதிய கவிதையை வாசிங்டன் சிவா பகிர்ந்து கொண்டது பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
கலைஞரின் நீண்ட நாள் சிறைவாசம், ஆயிரக்கணக்கான பொதுக்கூட்டங்கள் கணக்கிடலங்காத அவரது உரைகள் எண்ணற்ற நாடகங்கள், திரைப்படங்கள் என்பதையும் மறவாமல் சிவா பகிர்ந்து கொண்டார்.
அம்பாள் என்றைக்கடா பேசினாள்?
கலைஞர் அறக்கட்டளையின் இயக்குநர் நியூ ஜெசி பாலா கலைஞரைப் பற்றி உணர்வுபூர்வமாக பல்வேறு வரலாற்று நிகழ்வுகளையும், பராசக்தி திரைப்படத்தின் மூலம் சமூக நீதியை கலைஞர் எவ்வாறு நிலைநாட்டினார் என்பதையும் அம்பாள் என்றைக்கடா பேசினாள்? ராமர் எந்த கல்லூரியில் படித்தார்? என்று கலைஞர் எழுப்பிய பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார் தன்னுடைய உரையில்.
நியூஜெர்சி பாலா கலைஞருக்கு நன்றிக் கடனாக நாம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதையும், அவருக்கு நூற்றாண்டு நிறைவு விழா மூன்று ஊர்களில் நடத்தினோம் என்பதையும் பகிர்ந்து கொண்டார். டெக்ஸஸ் மாநிலத்தில், நியூ ஜெர்சி மாநிலத்தில் வாசிங்டன் மாநிலத்தில் என்பதை பெருமையோடு பேசினார் பாலா.
நிகழ்வில் கலந்து கொண்ட பார்வையாளர்களில் முனைவர் சங்கரபாண்டி சென்னை அய்அய்டியில் படிக்கும் பொழுது கலைஞரை கல்லூரியில் பேச அழைக்க சென்று சந்தித்த நினைவுகளை உணர்வுபூர்வமாக பகிர்ந்து கொண்டார்.
தமிழ்நாட்டின் மிகப் பெரும் தலைவர் கலைஞர் அய்ந்து முறை நாட்டை ஆண்டவர் – மாணவர்களிடத்தில் எளிமையோடும் அன்போடும் பழகியதை நினைவு கூர்ந்தார்.
நான் வந்து கல்லூரியில் பேசினால் உங்களுக்கு ஒன்றும் பிரச்சினை வராதா? என்று மாணவர்களோடு அக்கறையோடு கேட்டு இருக்கிறார் கலைஞர்.
மற்றொரு பார்வையாளர் மெய்யப்பன் கலைஞர் தன்னுடைய திரைப்படங்களில் எழுதிய எழுத்துக்கள் மூலமாக பின் நாள்களில் அது சட்டமாக எப்படி மாறியது என்பதை எடுத்துக்காட்டுகளோடு பகிர்ந்து கொண்டார்.
மனிதனை மனிதன் இழுத்துச் செல்வது சரியா? என்று திரைப்படத்தில் வந்த வசனத்தை பிற்காலத்தில் கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகு அதனை சட்டமாக மாற்றி கை ரிச்சா திட்டத்தை ஒழித்ததை நினைவு கூர்ந்தார்.
வாசிங்டன் வட்டார தமிழ்ச்சங்கு இயக்குநர் மோகன்ராஜ் பேசும்பொழுது கலைஞர் 1989 ஆம் ஆண்டில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை சம பங்கு கிடைத்த சட்டத்தைப் பற்றி பெருமையாக பேசினார்.
சமுதாயத்தில் மாற்றம்
வாசிங்டன் வட்டார மேனாள் தலைவர் ஜான் அகஸ்தியன் பேசும் பொழுது நமக்கு நினைவு தெரிந்த காலம் முதல் கலைஞர் அவர்கள் போராடி போராடி சமுதாயத்தில் மாற்றத்தை எவ்வாறு ஏற்படுத்தினார் என்பதை சிற்றுறையில் குறிப்பிட்டார். நிகழ்வில் இரு குழந்தைகள் இனியாள், இலக்கியா கிழவன் அல்ல அவன் கிழக்கு திசை என்ற பாடலை மிக நன்றாக பாடினார்கள்.
நிகழ்ச்சியின் முடிவில், யார் யார் என்னென்ன பேசினார்கள், யார் யார் இந்த நிகழ்விற்கு உறுதுணையாக இருந்தார்கள் என்பதை அழகு தமிழில் நிதானமாக தோழர் அறிவு பொன்னி பெரியார் பன்னாட்டு மய்யத்தின் சார்பாக நன்றி தெரிவித்தார்.
பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவிற்கு, வெர்ஜினியா வாஷிங்டன், மேரிலேண்ட், நியூஜெர்சியில் இருந்து பல்வேறு நண்பர்கள் கலந்து கொண்டார்கள்.
விழா மற்றும் கட்டுரை தொகுப்பு
மயிலாடுதுறை சிவா