சென்னை, ஜூலை 28 மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமலும், விற்பனை ரசீது வழங்காமலும் மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்த 106 மருந்தகங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. நோயாளிகள் பயன்படுத்தும், மருந்து, மாத்திரைகளை விற்பனைசெய்யும் மருந்தகங்கள், மருத்துவரின் பரிந்துரை சீட்டு வழங்கினால்மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.
தாங்களாகவே வந்து மாத்திரை, மருந்துகளை கேட்டால்,அதனை பொதுமக்களுக்கு வழங்கக் கூடாது. விற்பனை செய்யப்படும் மாத்திரை, மருந்துகளுக்கு விற்பனை ரசீது வழங்க வேண்டும் என்று மாநில மருந்து கட்டுப்பாட்டு துறை அறிவுறுத்தியுள்ளது.
இதை அதிகாரிகள் திடீர் ஆய்வுசெய்து கண்காணித்து வருகின்றனர்.விதிமுறைகளை பின்பற்றாத மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இதுவரை விதிமீறலில் ஈடுபட்ட 83 சில்லரை மருந்தகங்கள், 23 மொத்த மருந்தகங்கள் என 106 கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநில மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் கேட்டபோது, “தமிழ்நாட்டிலுள்ள 30,000-க்கும் மேற்பட்ட மருந்தகங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். விதிமீறல் கண்டறியப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி, மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்து விற்பனை, விற்பனை ரசீது வழங்காதது, கருத்தடை மாத்திரை மற்றும் துாக்க மாத்திரை போன்றவற்றை விதிமீறி விற்பனை செய்தல் போன்றவற்றால் 106 கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
கருத்தடை மாத்திரை விற்பனை செய்த 8 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில், திருப்பூரில் 3 கடைகள் மூடப்பட்டுள்ளன. விதிமீறல்கள் விழுப்புரம், மதுரை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ளது. தொடர்ந்து, கண்காணித்து வருகிறோம்” என்றனர்.
கருநாடகத்தில் கடும் மழையால்
மேட்டூர் அணை நீர்மட்டம்
100 அடியாக உயர்ந்தது
மேட்டூர், ஜுலை 28 மேட்டூர் அணை நீர்மட்டம் 71-ஆவது முறையாக 100 அடியைத் தாண்டியுள்ளது. அணைக்கு விநாடிக்கு 1.23 லட்சம் கனஅடி வீதம் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், காவிரிக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கருநாடகாவில் கனமழை காரணமாக கபினி, கே.ஆர்.எஸ். அணைகள் பெருமளவு நிரம்பிவிட்டன. இதனால், உபரிநீர் முழுவதும் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு 26.7.2024 அன்று இரவு விநாடிக்கு 81,552 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று (27.7.2024) காலை 93,828 கனஅடியாகவும், இரவு 1,23,184 கனஅடியாகவும் அதிகரித்தது. அதேபோல, அணை நீர்மட்டம் நேற்று காலை 99.11 அடியாக இருந்த நிலையில், நேற்று இரவு 103.13 அடியாக உயர்ந்தது. அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகு பகுதியை தண்ணீர் எட்டியது.
அணை நீர்மட்டம் 100 அடியைத் தாண்டியதால் குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை நீர்இருப்பு 68.96 டிஎம்சி. கடந்த 12 நாட்களில் அணை நீர்மட்டம் 58.48 அடியும், நீர்இருப்பு 53.26 டிஎம்சியும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு ஜூன் 17-ஆம் தேதி மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியாக இருந்தது. 405 நாட்களுக்குப் பின்னர் நேற்று (27.7.2024) 100 அடியைத் தாண்டியுள்ளது. அணை வரலாற்றில் 71-ஆவது முறையாக நீர்மட்டம் 100 அடியைக் கடந்துள்ளது. 2005-2006-இல் அணை நீர்மட்டம் அதிகபட்சமாக 428 நாட்கள் தொடர்ந்து 100 அடிக்கும் மேலாக நீடித்தது குறிப்பிடத்தக்கது. நீர்வரத்து ஒரு லட்சம் கனஅடியைத் தாண்டியுள்ளதால் நீர்வளத் துறை அதிகாரிகள் அணையின் 16 கண் மதகு, வலது கரை, இடது கரை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய 9 மாவட்ட ஆட்சியர்களுக்கு ஒன்றிய நீர்வள ஆணையம் நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில், ‘நாளை (28.7.2024)) மாலைக்குள் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.45 லட்சம் கனஅடியைத் தாண்டும்’ எனத் தெரிவித்துஉள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, “அணையின் மொத்த நீர் இருப்பு 93 டிஎம்சி. தற்போது 69 டிஎம்சி தண்ணீர் உள்ளது. அணைக்கு விநாடிக்கு ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், விரைவில் அணை முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கிறோம். அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது குறித்து அரசு முடிவெடுக்கும்” என்றனர். இதற்கிடையே, சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் காவிரிக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.