ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காத ஒன்றிய பிஜேபி அரசை எதிர்த்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

viduthalai
3 Min Read

சென்னை, ஜூலை 28 ஒன்றிய அரசு தாக்கல் செய்த 2024-2025 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டிருப்பதாக கூறி தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் நேற்று (27.7.2024) கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
ஆர்ப்பாட்டத்தில், திமுக நாடாளு மன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட் டோர் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டங்களின் போது ஒன்றிய அரசைக் கண்டித்து கண்டன முழுக்கங்கள் எழுப்பப்பட்டன.

நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தை கக்கும் வகையில் இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது. மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் தமிழ்நாடு சந்தித்த 2 பேரிடர் இழப்புகளுக்கு நிதி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கைகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு, சில மாநிலங்களுக்கு மட்டும் பேரிடர் நிதி அள்ளி வழங்கப்பட்டுள்ளது.

நிதிநிலை அறிக்கையில் மாற் றாந்தாய் மனப்போக்குடன் தமிழ் நாட்டை வஞ்சித்த ஒன்றிய பாஜக அரசை கண்டித்து 27.7.2024 அன்று தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

சென்னை

அதன்படி, சென்னையில் பாரிமுனை மற்றும் கிண்டி உள்ளிட்ட இரண்டு இடங்கள் உட்பட தமிழ்நாடு முழுவதும் நடந்த இந்த ஆர்ப்பாட்டங்களில், ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கென எவ்வித சிறப்பு திட்டங்களும், புதிய அறிவிப்புகளும் வெளியிடப்படாததைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.சென்னை ஆளுநர் மாளிகை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய அரசுக்கு எதிரான முழுக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் மயிலை பாலு, பிரபாகர் ராஜா, துணை மேயர் மகேஷ்குமார் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். சின்னமலை பகுதியில் நடந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் காரணமாக அப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

இதேபோல், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், திமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மேயர் பிரியா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காத ஒன்றிய அரசைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. “ஒன்றிய நிதிநிலை அறிக்கையில், இந்தி பேசாத மாநிலங்களுக்கு நிதி ஒதுக்காமல் ஒன்றிய பாஜக அரசு வஞ்சித்துள்ளது” என்று தயாநிதி மாறன் பேசினார்.

திருச்சி

திருச்சியில், திமுக ஒன்றிய மாவட்ட செயலாளர் வைரமணி மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், திருச்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் கதிரவன், ஸ்டாலின் குமார், பழனியான்டி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி பேசு கையில்: “மைனாரிட்டி மக்களுக்கு எதிராக இருக்ககூடியவர்கள் மைனாரிட்டி பாஜக. அந்த மைனாரிட்டி ஆட்சியில், பிரதமராக நரேந்திர மோடி நீடிக்க வேண்டும் என்றால், பாஜக ஆட்சிப் பொறுப்பில் நீடிக்க வேண்டும் என்றால், பீகார், ஆந்திரா என்ற இரண்டு மாநிலங்கள், அந்த மாநிலங்களைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் அக்கட்சிகளின் தலைவர்கள் அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்.இந்த இரண்டு மாநிலங்களின் மேல் அவர்களுக்கு அக்கறை இருப்பதற்கு வேறு எந்த காரணமும் இல்லை. பாஜக ஆட்சியில் இருக்க அந்த இரு மாநிலங்களின் தயவு தேவை. அந்த தயவுக்காக பாஜக, அவர்கள் எதைக் கேட்டாலும் கொடுக்க தயராக இருக்கிறது. இப்படி தன்னுடைய ஆட்சியை நிலைநிறுத்திக் கொள்வதற்காக, ஒரு நிதிநிலை அறிக்கைடை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்திருக்கிறார்.” என்று பேசினார்.

இதேபோன்று, மதுரை, கோவை, நெல்லை, சேலம் உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கைடைக் கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *