புதுடில்லி, ஆக.16 இந்திய குடியுரிமை வேண்டாமெனக் கூறி விட்டு, வெளிநாடுகளில் குடி யேறும் இந்தியர்களின் எண் ணிக்கை, கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக ஆட்சியில் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, 2018 ஜனவரி முதல் 2023 ஜூன் வரை, கடந்த அய்ந்தரை ஆண்டுகளில், சுமார் 8.40 லட்சம் இந்தியர்கள் தங்கள் குடியுரிமையைத் துறந்து, பல்வேறு வெளி நாடுகளில் குடியுரிமையைப் பெற்றுள்ளனர். அதிலும், நடப்பு 2023ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும், 87 ஆயிரத்து 026 பேர், இந்திய குடியுரிமை வேண்டாமெனக் கூறிவிட்டு, வெளிநாடுகளில் குடியேறியுள் ளனர்.
2022 ஆம் ஆண்டில், இந்தியக் குடியுரிமையைத் துறந்த வர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 25 ஆயிரத்து 620-அய் எட்டியது, இது கடந்த 12 ஆண்டுகளில் மிக அதிக மான எண்ணிக்கையாகும்.
வெளிநாடுகளில் குடியுரிமையை பெறும் இந்தியர்களின் முதன்மை தேர்வாக அமெரிக்கா உள்ளது. இதைத் தொடர்ந்து, கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் நாடுகள் உள்ளன. கடந்த 6 ஆண்டு களில் மட்டும் 3 லட்சத்து 29 ஆயிரம் பேர் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர்.
ஒரு லட்சத்து 62 ஆயிரம் பேர் கனடா குடியுரிமை பெற்றுள்ளனர். ஒரு லட்சத்து 32 ஆயிரம் பேர் ஆஸ்திரேலிய குடியுரிமையைப் பெற்றுள்ளனர். இவர்கள் தவிர, வளைகுடா நாடுகளில் அய்க்கிய அரபு அமீரகத்தில் 1,865 இந்தியர் கள், கத்தாரில் 384 இந்தியர்கள், குவைத்தில் 295 இந்தியர்கள், பஹ் ரைனில் 275 இந்தியர்கள், ஓமனில் 174 இந்தியர்கள் குடியுரிமை பெற்றுள்ளனர்.
2 ஆயிரத்து 442 இந்தியர்கள், இந்தியக் குடியுரிமையை துறந்து விட்டு சீனாவிலும் குடியேறியுள் ளனர். இந்திய பாஸ்போர்ட்டை (கடவுச் சீட்டை) ஒப்படைத்தவர்களில் பெரும்பாலா னோர் அதிகம் படித்தவர்கள் என்றும், இவர் களின் இடம்பெயர்வுக்கு தொழில் வாய்ப்புகள், மேம்பட்ட வாழ்க்கைத் தரம், கல்வி வாய்ப்புகள், சுகாதாரம், தூய்மையான காற்று உள்ளிட்டவை காரணமாக கூறப்படுகிறது.
சிலர் திருமணம் முடித்த காரணங்களால் வெளிநாடுகளில் குடியேறுவதாகவும் காரணம் கூறப் படுகிறது.