சென்னை, ஜூலை 27– ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னர் சென்னையில் கடந்த 20 நாட்களில் 200 ரவுடிகள் வரை சிக்கியுள்ளனர். மேலும், கண்காணிப்பு வளையத்துக்குள் 2 ஆயிரம் ரவுடிகள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை, பெரம்பூரில் கடந்த 5ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.தமிழ் நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இந்நிலையில், கடந்த 8ஆம் தேதி சென்னை காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு, புதிய ஆணையராக அருண் நியமிக்கப்பட்டார்.
காவல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்ட அருண், ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்தினார். முதல் கட்டமாக சென்னையில் உள்ள 104 காவல் நிலையங்களிலும் உள்ள ரவுடிகளின் பட்டியலைச் சேகரிக்க உத்தரவிட்டார். பட்டியலில் தற்போது செயல்பாட்டில் உள்ள ரவுடிகளை அடையாளம் கண்டு கைது செய்ய அறிவுறுத்தினார்.
மேலும், தலைமறைவாக உள்ள மற்றும் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஏ, ஏ-பிளஸ், பி, சி வகை ரவுடிகளை கைது செய்து சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார். குறிப்பாக ஏ மற்றும் ஏ-பிளஸ் ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டது. இந்த வகை ரவுடிகள் வெளி மாநிலங் களில் பதுங்கினாலும், அங்கு சென்று கைதுசெய்ய வேண்டும் என காவல் துறையினருக்கு கண்டிப்பு காட்டினார்.
மெத்தனம் காட்டினால் நடவடிக்கை: அதன்படி அனைத்து காவல் நிலைய காவல் துறையினரும்தேடுதல் மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக சென்னையில் கடந்த 20 நாளில் 200 ரவுடிகள் வரை சிக்கி உள்ளனர். இவர்களில் பெரும் பாலானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மீதம் உள்ளவர்கள் எச்சரித்து அனுப்பப்பட்டனர். மேலும், சுமார் 2 ஆயிரம் பேர் காவல் துறையினரின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இதுமட்டும் அல்லாமல் உளவு (நுண்ணறிவு) பிரிவு காவல்துறையினர், களப் பணியாற்றி குற்றச் செயல்கள் நடைபெறும் முன்னரே அதுகுறித்த ரகசியத் தகவல்களை சேகரித்து உயர் காவல் துறையினர் அதிகாரிகளுக்கு தெரிவித்து குற்ற நிகழ்வை முன்கூட்டியே தடுக்கத் துணையாக இருக்க வேண்டும். மெத்தனமாக இருக்கும் நுண்ணறிவுப் பிரிவு காவல்துறையினர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல் ஆணையர் அருண் எச்சரித்துள்ளார்.