உலக வரலாற்றில் பல்வேறு முக்கியச் சம்பவங்களின் நிகழ்விடமாக இருந்திருக்கிறது ஜெர்மனி. சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய தந்தை பெரியா ருக்கும், ஜெர்மனிக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. பார்வையாளராக 1932-ஆம் ஆண்டு ஜெர்மனி சென்றிருந்தார் பெரியார். அங்கு 27 நாள்கள்வரை தங்க நேர்ந்தபோது, அந்நாட்டைச் சிலாகித்திருக்கிறார். அவரது எண்ணத்தில் அந்நாட்டிற்கு தனியிடம் இருந்திருக்கிறது. அதே ஜெர்மனியில் 2017 ஜூலை 27,28,29 ஆகிய மூன்று நாள்களில் பெரியார் சுயமரியாதை இயக்க பன்னாட்டு மாநாடு நடைபெற்றது
தந்தை பெரியாரின் தத்துவமும், சிந்தனைகளும் பல நாடுகளில் பரவியிருக்கும் சூழல் தற்போது உருவாகியுள்ளது. அமெரிக்காவில் பெரியார் பன்னாட்டு அமைப்பு ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ளது. பல நாடுகளில் தனித்தனி அமைப்புகளாகவும் செயல்பட்டு வருகின்றன. ஜெர்மன் சேப்டர், யூ.கே சேப்டர் என உலகம் முழுக்க பிரிவுகளும் உள்ளன. இதுபோன்ற அமைப்புகளும், பெரியார் சிந்தனைவாதிகளும், கல்வியாளர்களும் இணைந்து இந்த மாநாட்டை நடத்தினார்கள். ஜெர்மன் கொலோன் பல்கலைக் கழகத்தில் தொடங்கிய இந்த மாநாடு ஜூலை 29-இல் நிறைவடைந்தது. கொலோன் பல்கலைக் கழகப் பேராசிரியரும், தமிழ், ஜெர்மனி உட்பட பல மொழிகளில் ஆராய்ச்சியாளருமான உல்ரிக் நிக்லஸ் இந்த மாநாட்டில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
இம்மாநாட்டில் பெரியாரின் இயக்கத்தைப் பற்றிய ஆய்வுகள், அவரின் தத்துவம், சிந்தனைகள் பற்றிய விரிவாக்கம், இந்த இயக்கத்தை உலகளாவிய இயக்கமாக விரிவுப்படுத்திச் செல்வது தொடர்பான ஆய்வுகள், விவாதங்கள் உள்ளிட்டவை நடைபெற்றன.பன்னாட்டு அளவில் நடந்த இந்த மாநாட்டுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.
திருமாவளவன் உள்பட தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். இந்த மாநாடு குறித்த முக்கிய தகவல்கள் இதோ…
தொடக்க விழா 2017 ஜூலை 27 அன்று மாலை நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மாநாட்டிற்குத் தலைமை ஏற்றார். பிரிட்டனின் கிராய்டன் துணை மேயர் மைக்கேல் செல்வநாயகம் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். பெரியார் பன்னாட்டு மய்யத்தின் ஜெர்மனி கிளைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் உல்ரிக் நிக்லஸ் வரவேற்றார்.
பெரியார் எழுதிய “கடவுளும் மனிதனும்” உள்ளிட்ட சில நூல்களின் மொழிபெயர்ப்புகள் வெளியிடப்பட்டன. இதில் சோம. இளங்கோவன், சித்தானந்தம் சதாசிவம் ஆகியோர் பங்கேற்றனர். மாநாட்டின் ஒரு பகுதியாக ‘பெரியார்’ தமிழ்த் திரைப்படம் திரையிடப்பட்டது.
ஆய்வுக்கட்டுரை அரங்கின் முதல் அமர்வுக்கு கி.வீரமணி தலைமை தாங்கினார். “சுயமரியாதை. சமூக மற்றும் மனித விடுதலைக்கான சிறந்த தனித்துவக் கருவி – ஒரு வரலாற்று ஆய்வு” உட்பட மூன்று பிரிவுகளில் பேராசிரியர்கள் எஸ்.எஸ்.சுந்தரம், பீட்டர் ஸால்க், டாக்டர் சரி.உன்ரா ஆகியோர் பங்கேற்றனர்.
சோம. இளங்கோவன் தலைமையிலான அமர்வில், ஸ்வென் வொர்ட்மன், உல்ப்காங்க் லைட்டோல்டு, எஸ்.ஜே. சாமுவேல், முனைவர் டி.ஜெயக்குமார் பங்கேற்றனர். முனைவர் லட்சுமணன் தமிழ் தலைமையிலான அமர்வில் சரோஜா இளங்கோவன், எஸ். தேவதாஸ், வீ. குமரேசன் பங்கேற்றனர்.
“சமூகப் புரட்சி – 1929 சென்னை மாகாண முதல் சுயமரியாதை மாநாட்டு தீர்மானங்களும் நடைமுறை ஆக்கங்களும்” என்ற தலைப்பில் ஆசிரியர் கி.வீரமணி, கவிஞர் கலி.பூங்குன்றன், லதாராணி ஆகியோர் பங்கேற்ற ஆய்வரங்கம் நடைபெற்றது.
உல்ரிக் நிக்லஸ் தலைமையிலான ஆய்வுக்கட்டுரை அமர்வில் வழக்குரைஞர் அ.அருள்மொழி, எம்.விஜயானந்த், கே. ஒளிவண்ணன், கோபாலகிருஷ்ணன் பங்கேற்றனர். மைக்கேல் செல்வநாயகம் தலைமை யிலான அமர்வில் லதாராணி பூங்காவனம், பி.கலைச்செல்வன் ஆகியோர் பங்கேற்றனர்.
இறுதியாக சமூகநீதி விருது வழங்கும் விழாவுடன் பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாடு நிறைவடைந்தது. கிராய்டன் துணை மேயர் மைக்கேல் செல்வநாயகத்திற்கு கி.வீரமணி பெயரிலான சமூகநீதி விருது வழங்கப்பட்டது. ஆசிரியர் கி.வீரமணி உள்ளிட்ட 41 பேர் பங்கேற்ற இந்த மாநாட்டில் பல ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இந்த மாநாட்டுடன் சுயமரியாதை இயக்கத்தின் 90-ஆவது ஆண்டு நிறைவு விழாவும் நடைபெற்றது.
பெரியார் என்ற சாம்ராஜ்யம் உடலால் மறைந்து 51 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், அவரது தத்துவங்களும், கொள்கைகளும் இன்றும் தொடர்ந்து முன்னணியில் நிற்கின்றன. ஜாதி, மதம், பெண்ணடிமைத்தனம், மூடநம்பிக்கைகள் மற்றும் பல அடக்குமுறைகளுக்கு எதிராக தடியெடுத்த அவரின் ஆளுமை இன்று கடல்கடந்தும் தலைநிமிர்ந்து நிற்கிறது. 92 ஆண்டுகளுக்குமுன் ஒரு பார்வையாளராக ஜெர்மனி சென்றுவந்த பெரியாரின் சீரிய சிந்தனை தற்போது உருமாற்றம் பெற்று அங்கும் வியாபித்திருக்கிறது என்றால் மிகையல்ல.