எனது பெட்டியையோ, அதனுள் இருந்த சலவைத் துணியையோ (ஒரு செட்தான்) எனக்குத் தரப்படாமல், மற்றவர்களுக்கும் அதே நிலையில் இரு வாரங்கள் முன்பு, போட்டிருந்த அதே சட்டை, வேட்டி உள் பகுதி ஆடைகள் எல்லாவற்றையும் இரண்டு நாள்களுக்கு ஒரு முறையாவது துவைத்து உடலிலேயே காய வைத்துக் கொள்ளும் புதிய ‘கலை’யையும் கற்றுக் கொண்டவர்களாகி விட்டோம் அங்கே!
(மிக மோசமான அதிகாரிகள் – அக்கால சென்னை சிறை வாழ்வு – ‘மிசா’ அரசியல் கைதிகளான நாங்கள் எப்படி குரூரமாக நடத்தப்பட்டோம் என்பது ஜஸ்டிஸ் இஸ்மாயில் கமிஷன் அறிக்கையைப் படிப்போருக்கு தெற்றென விளங்கும்.)
புத்தகம் பற்றிக் கேட்டால் பதிலே இல்லை. அதன் பிறகு ‘கையூம்‘ என்ற மனிதநேயமற்ற அந்த ஜெயிலர் மாற்றப்பட்டு, மணி என்ற புதிய நல்ல அதிகாரி, ஜெயில் சூப்பரின்டென்டென்ட்டாக ‘மகா நடிகனை’ மிஞ்சும் வேடதாரி வித்தியாசாகரன் என்பவர் மாற்றப்பட்டு பகவதி முருகன் என்ற மனிதாபிமான கடமை வீரர் சூப்பரின்டென்டென்ட்டாக வந்த பிறகு 3,4 மாதங்கள் கழித்துத்தான், ஜெயில் முறைப்படி ‘சென்சார்’ முடிந்து ஜெயிலர் கையெழுத்து ‘Passed’ என்ற சொற்றொடர் ஆணையோடு என்னிடம் வழங்கப்பட்டது.
அதற்குமுன் படிப்புத் தாகம் –ஏக்கத்தை போக்கிக் கொள்ள சிறைச்சாலை நூலகத்தில் உள்ள தமிழ், ஆங்கில புத்தகங்களை படித்துக் காலத்தைக் கழித்தோம் – பயனுறுவகையில்!
‘Freedom at Midnight’ ஆங்கில புத்தகம் பல பக்கங்களைக் கொண்ட பெரிய புத்தகம் என்றாலும், அன்றாடம் ஒரு நேரத்தை அதற்கென ஒதுக்கி படிக்கத் துவங்கினேன் – படிக்கப் படிக்க ஒரு தொடர் புதினம் போன்ற ஈர்ப்பு எனக்கு அதில் உண்டாகியது.
திராவிடர் கழகத்து ‘மிசா’க்காரர்கள் நாங்கள் 12 பேர்கள் – நடிகவேள் எம்.ஆர். ராதா அவர்களையும் சேர்த்து 13 பேர்! ராதா அவர்களை (அவர் முன்பு எம்.ஜி.ஆரைச் சுட்ட வழக்கில் தண்டிக்கப்பட்டு அதே சிறையிலிருந்து வெளியே வந்து சில மாதங்கள்தான் ஆகிய நிலையில் மீண்டும் அவரை) ‘மிசா’வில் கைது செய்தது அர்த்தமற்றது; அப்பட்டமான அநியாயம்.
அரசியல் கூட்டங்களிலோ, மற்ற பொதுக் கூட்டங்களிலோகூட அவர் ஏன் நாடகங்களைக்கூட மீண்டும் முன்பு போல தொடர்ச்சியாக நடத்தாது இருந்தும் வேண்டுமென்றே உடல் நலக் குறைவுடன் இருந்த அவரையும் அழைத்து வந்தது அதீத அக்கிரமம் – சிறைக்குள்ளே அவருக்கு தொடர் இருமல் – ஆஸ்த்மா மாதிரி இருந்ததால், துவக்க முதலே அவர் சிறையில் உள்ள மருத்துவமனை அறையில் ‘மிசா’ கைதியாக தொடர்ந்து வைக்கப்பட்டிருந்தார்.
மதிய உணவு இடைவேளையில் நாங்கள் எங்களது சாப்பாட்டை வாங்குவோம். சிற்சில நாள்களில் அவரே எங்களது கோட்டாவை தனித்தனி எங்கள் தட்டுக்களில் வாங்கி வைத்து, வெங்காயம் உரித்து வைத்து, குவளைத் தயிரையும் வைத்துத் தருவார்.
அப்போது பல செய்திகளைப் பேசி கலகலப்பாக்குவார் நடிகவேள் அவர்கள்!
நான் ‘Freedom at Midnight’ புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தபடியே கையில் புத்தகத்துடன் சாப்பிட ‘ஆஜர்’ ஆனேன். அவர் என்னைப் பார்த்து – என்னப்பா ‘புக்’ படிக்கிறே? என்று கேட்டார்.
இதன் விவரத்தைக் கூறி விளக்க சற்று ‘‘நள்ளிரவு சுதந்திரத்தை’’ப் பற்றி எழுதப்பட்ட சில ஆங்கில பகுதியைப் படித்து தமிழில் விளக்கிச் சொன்னேன்.
அவருக்கு மிகவும் பிடித்து விட்டது! ‘‘இதை தினமும் எனக்குப் படித்துக் காட்டி சொல்லுப்பா! ரொம்ப ரொம்ப இன்ட்டரஸ்டிங்காக இருக்கே!’’ என்றார்.
பல நாட்கள் படிப்பேன் – விளக்கி தமிழில் சொல்வேன் அவரைச் சுற்றி நமது தோழர்கள் உணவுடன் பேசிக் கொண்டு சாப்பிட புத்தக வாசிப்பு – தமிழுரை விளக்கத் தொடர, ரசித்து, ரசித்து குறுக்குக் கேள்வியோடு கேட்பார்கள்.
ராதா அவர்களது உள்வாங்கும் திறமை அபாரம்! அடுத்த நாள் மிக ஞாபகமாக, ‘‘என்னா வீரமணி நேற்று ஜின்னாவை ரயிலில் டாக்டர் சந்தித்ததைப் பற்றி சொன்னியேப்பா – அது ரொம்ப ரொம்ப பிரமாதம். உம் உம் பார் ஒரு கதை அரசியல் எப்படியோ போய் இருக்கு பார்த்தியா? நல்லா இருக்கு’’ – என்று வியந்தவர் – ‘‘நாம் வெளியே போனவுடன் நான் ஒரு திட்டம் போட்டுள்ளேன்’’ என்றார். அது என்ன? (திங்களில் சந்திப்போம் – சொல்கிறேன்!)
(தொடரும்)