பாராட்டுகள் தலைகவிழச் செய்கின்றன – எதிர்ப்புகள் தலையை நிமிர்த்துகின்றன!
தமிழர் தலைவர் விடுத்துள்ள நன்றி அறிக்கை
பாராட்டுகள் தலைகவிழச் செய்கின்றன – எதிர்ப்புகள் தலையை நிமிர்த்துகின்றன! எனவே, பாராட்டுவோருக்கும், எதிர்ப்போருக்கும் எமது நன்றி! பயணங்கள் முடிவதில்லை! லட்சியங்கள் தோற்பதில்லை என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
தமிழ்நாடு அரசு சார்பில் நேற்று (15.8.2023) கொண்டாடப்பட்ட விடுதலை நாள் விழாவில் ‘திராவிட மாடல்’ அரசின் ஒப்பற்ற முதலமைச்சர் – சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு அரசின் இவ் வாண்டுக்குரிய ‘தகைசால் தமிழர்’ விருதினை எனக்கு அளித்துப் பெருமைப்படுத்தியுள்ளார்கள்.
எனது உளப்பூர்வமான,தலைதாழ்ந்த வணக்கம், நன்றி!
எனது உளப்பூர்வமான, தலைதாழ்ந்த வணக்கத்தையும், நன்றிகளையும் – தமிழ்நாடு அரசுக்கும், அதன் ஆற்றல் -ஆளுமை மிகு முதலமைச்சருக்கும் உரித்தாக்குகிறேன்.
நேற்றும், முன்பும் ஊடக நண்பர்கள், விருது தொடர்பாக எனது உணர்வுபற்றி கேள்வி கேட்டபோது சொன்ன பதிலில்,
‘‘இவ்விருது என்பது எனக்கு – என் பெயருக்கு அளிக்கப் பட்டிருந்தாலும், உண்மையில் அது தந்தை பெரியாருக்கும், அவர்தம் லட்சியப் பயணத்தில் களம் கண்ட – காணும் எண்ணற்ற தொண்டர்களுக்கும், தோழர்களுக்கும் அளிக்கப்பட்ட விருதாகவே நான் கருதி, எனது லட்சியப் பயணத்தை மேலும் உறுதியுடனும், உற்சாகத்துடனும், ஊக்கத்துடனும், இந்த நம்பிக்கையை நியாயப்படுத்திடும் உழைப்பை, நாணயத்துடன் என்னால் முடியும் வரை செய்வேன்” என்று கூறினேன்.
என்றும் ஆயத்தமான உறுதியுடன் உழைப்பேன்!
‘‘முடியும்வரை களப்பணி செய்யும் கடமையை எனது மூச்சாக, பேச்சாக, எழுத்தாகக் கொண்டு நாட்டில் மனித சமத்துவமும், சமூகநீதியும் பேணப்படவும், மறுக்கப்படும் மனித உரிமை மீட்டெடுப்புக்கும், ‘அனைவருக்கும் அனைத்தும்’ கிட்டும் சமத்துவ, சம வாய்ப்புச் சமூகத்தினை உருவாக்கும் பணியிலும் ஈடுபடுவேன். அந்தப் பணிக்காக எந்த விலையும் தர, என்றும் ஆயத்தமான உறுதியுடன் உள்ளவனாக உழைப்பேன்” என்ற பெரியார் பாடத்தை சுவாசிப்பவன் நான்.
இன எதிரிகளும், கொள்கைப் பகைவர்களும் இரைதேடும் ஓநாய்களைப் போல் திராவிடத்தின்மீது பாய்வதற்குத் தீவிரமாக களமாடுகிறார்கள்!
‘பொய்யும் புரட்டும்’ அவர்களுக்குக் கைவந்த கலை – அந்நாள் முதல் இந்நாள் வரை!
இல்லாவிட்டால், தலைசிறந்த திராவிட நாகரிகத்தினரை ‘‘தஸ்யூக்கள், சண்டாளர்கள், அரக்கர்கள், ராட்சசர்கள், மிலேச்சர்கள், சூத்திரர்கள்” என்று இழிவாக எழுதியும், பேசியும் வரும் நிலை இன்றுவரை தொடருமா?
சனாதன மயக்க மருந்தை நமது ‘மண்டூகங்க’ளுக்குத் தந்து, தாயின் மடியையே அறுக்கக் கூலிப் பட்டாளங்களாக்க முயற்சிப்பார்களா?
சிறப்போடு நடைபெறும் ‘திராவிட மாடல்’ ஆட்சியை, தொடராமல் செய்ய எத்தனை எத்தனை தடைகளும், இடர்களும்!
என்றாலும், அதை அரசு தாண்டும்; திராவிடம் வெல்லும் – பழைய புராணக் கதைகளின் முடிவும், இன்றைய திராவிடத்தில் தலைகீழாக மாறும் என்பது உறுதி!
எங்களைப் பிணைத்திருப்பது கொள்கை!
காரணம், எங்களைப் பிணைத்திருப்பது பதவி ஆசை பவிசு அல்ல; மாறாக கொள்கை! கொள்கை!! கொள்கை!!!
வீழ்த்த நினைத்தவர்கள் வீழ்ந்துபோகும் வீர வரலாற்றை உருவாக்க, நம்மினம் வீறுகொண்டு எழப் போராடி, விழுப் புண்கள் பெற என்றும் தயார் நிலையில் இருப்பவர்களுக்கு அளிக்கப்படும் விருது – இராணுவப் படைத் தளகர்த்தர் களுக்கான வீரதீர விருதுகள் (Gallantry Awards) போன்றவைதான் இவ்விருதுகள் என்று கருதி மேலும் நாளும் உழைப்போம்.
விருது அறிவிப்பு கேட்டு மகிழ்ச்சியுடன் பாராட்டு – வாழ்த்துத் தெரிவித்த பல்துறையைச் சார்ந்தவர்களுக்கும், எரிச்சல் கொண்டு, ஏகடியம் பேசி தங்களது ‘தனித்தன்மையை’ வெளிப்படுத்திய வசவாளர்களுக்கும் என்று நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கொள்கை எதிரிகள் நம்மைப் பாராட்டினால்தான் நாம் யோசிக்கவேண்டும். காரணம், ‘‘எங்கோ சறுக்கல், வழுக்கல் வந்துவிட்டதோ நமக்கு, அதனால்தான் எதிரியின் பாராட்டு மாலை நம் கழுத்தில் விழுகிறதோ” என்று மனதைக் குடைந்து கொள்ளவேண்டியிருக்கும்!
அதற்கு அவசியமின்றி, வழக்கமான வசவுகள் வரவுகளாகும் போதும், நமது உறவுகள் யார்? பகைப்புலம் எவர்? என்று புரிந்து, களமாடி கடமையாற்றிட, எளிதில் நமக்குப் பாதை தெளிவாகத் தெரிகிறதல்லவா – அதைவிட நமக்கு நல்வாய்ப்பு வேறு ஏது தோழர்களே! நமது ஈரோட்டுப் பாதை நன்கு நம் பயணங்களாகட்டும்!
இருநிலையாளர்களுக்கும் எமது நன்றி!
பாராட்டுகள் நம்மை தலைகவிழச் செய்கின்றன – எதிர்ப்புகள் தலையை நிமிர்த்துகின்றன!
எனவே, இருநிலையாளர்களுக்கும் எமது நன்றி!
பயணங்கள் முடிவதில்லை!
லட்சியங்கள் தோற்பதில்லை!!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
16.8.2023