(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்.,
சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப்
பதிலடிகளும் வழங்கப்படும்)
– கவிஞர் கலி.பூங்குன்றன்
ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் கீழுள்ள என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் பாடப் புத்தகங்களை வடிவமைத்து வருகிறது.
தற்போது, ஆறாம் வகுப்புக்கான சமூக அறிவியல் புத்தகத்தில் சில மாற்றங்கள் என்ற பெயரில் வரலாற்றைத் திரித்துள்ளனர்.
ஹரப்பா என்பது நிலப்பரப்பையும், ஹரப்பர்கள் என்பது, அந்தப் பகுதியில் வாழ்ந்தவர்களையும் குறிக்கும் எனக் கூறி, சிந்து – சரஸ்வதி நாகரிகம் உட்பட இந்தப் பெயர்கள் அனைத்தையும் பயன்படுத்தலாம் என சப்பைக் கட்டு கட்டியுள்ளது.
தவிர, சரஸ்வதி நதி தொடர்பாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. முன்பு சரஸ்வதி என்று அழைக்கப்பட்ட நதி தற்போது இந்தியாவில் காக்கர் என்று அறியப்படுகிறது; பாகிஸ்தானில் ஹாக்ரா என்று அழைக்கப்படுகிறது என்கிறது.
சமூக அறிவியலுக்கு ஒருங்கிணைந்த பாடநூல்
முன்பு வரலாறு, அரசியல் அறிவியல் மற்றும் புவி யியல் பாடங்களுக்கு தனித்தனி பாடப்புத்தகங்கள் இருந்தன. இப்போது சமூக அறிவியலுக்கு ஒரே பாடநூல் உள்ளது. சமூக அறிவியல் பல துணைப் பிரிவுகளைக் கொண்டுள்ளது, ஆனால் மாணவர்கள் இந்த விதிமுறைகளால் பயப்படத் தேவையில்லை என்று புத்தகம் விளக்குகிறது. பாடநூல் அய்ந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: ‘இந்தியாவும் உலகமும்: நிலமும் மக்களும்,’ ‘கடந்த காலத்தின் ஆடை,’ ‘நமது கலாச்சார பாரம்பரியம் மற்றும் அறிவு மரபுகள்,’ ‘ஆட்சி மற்றும் ஜனநாயகம்,’ மற்றும் ‘நம்மைச் சுற்றியுள்ள பொருளாதார வாழ்க்கை’ என்று பிரிக்கப்பட்டுள்ளது.
ஹரப்பா நாகரிகத்தை சரஸ்வதி
நாகரிகமாக மாற்றிய பா.ஜ.க.
பழைய வரலாற்றுப் பாடப்புத்தகத்தில், ‘சரஸ்வதி நதி ரிக்வேத பகுதியில்’ ஒருமுறை மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது,
புதிய பாடப்புத்தகத்தில், இந்திய நாகரிகத்தின் தோற்றம் தொடர்பான அத்தியாயத்தில் “சரஸ்வதி நதி” பலமுறை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அத்தியாயம் ஹரப்பா நாகரிகத்திற்குப் பதிலாக ‘சிந்து-சரஸ்வதி நாகரிகம்’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது என்.சி.இ.ஆர்.டி. பாடப்புத்தகம்.
புதிய பாடப்புத்தகத்தின் புவியியல் பகுதியில் இமய மலையைக் குறிக்கும் வகையில் காளிதாசனின் ‘குமாரசம்பவ’ கவிதை இடம்பெற்றுள்ளது. தமிழ்ச் சங்கக் கவிதைகளையும் நிலப்பரப்புட னான அதன் தொடர்பையும் குறிப்பிடுகிறது.
கிரீன்விச் மெரிடியன் முதல் பிரைம் மெரிடியன் அல்ல என்று புத்தகம் விளக்குகிறது. அய்ரோப்பாவிற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, இந்தியா தனது சொந்த பிரதான நிலநடுக் கோட்டைக் கொண்டிருந்தது, இது மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைனி வழியாக சென்றது.
பழைய அரசியல் அறிவியல் பாடப்புத்த கத்தைப் போலவே, புதிய புத்தகத்திலும் பன்முகத்தன்மை பற்றிய அத்தியாயம் உள்ளது. இருப் பினும், அதில் ஜாதி அடிப்படை யிலான பாகுபாடு மற்றும் சமத்துவ மின்மை குறிப்பிடப்படவில்லை. புதிய புத்தகத்தில் ஒருமுறைதான் “ஜாதி” என்ற வார்த்தை வருகிறது. பழைய புத்தகத்தில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், அவர் நடத்திய பட்டியலின மக்கள் உரிமைகளுக்கான போராட்டம், ஜாதி அடிப்படையிலான பாகுபாடு குறித்த அவரது அனுபவங்கள் பற்றிய முழுப் பகுதியும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சரஸ்வதி – சிந்துவெளி நாகரிகம்???
20 ஆண்டுகளுக்கு முன்னால். 1995இல் பேராசிரியர் வி.என். மிஸ்ரா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ‘மாந்தன்’ இதழில் ஒரு கட்டுரை எழுதினார். அதன் தலைப்பு ‘தொலைந்துபோன சரஸ்வதி – ஹரப்பா நாகரிகத்தின் தொட்டில்’. அடுத்த ஆண்டு, இந்தியத் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிக் கழகத்தின் புரவலரான எஸ்.பி. குப்தா, சிந்துச் சமவெளி நாகரிகத்தைப் பற்றி ‘தி இண்டஸ் – சரஸ்வதி சிவிலைசேஷன்’ (சிந்து – சரஸ்வதி நாகரிகம்) என்ற தலைப்பில் ஒரு நூலை வெளியிட்டார்.
ரிக் வேதம் என்ன சொல்கிறது?
சங் பரிவாரத்தைச் சேர்ந்த பண்டிதர்கள் கிட்டத்தட்ட ஒருவர் விடாமல் ரிக் வேதத்திலிருந்து பாடல்களை ஒப்புவிக்கிறார்கள். ரிக் வேதத்தில், சரஸ்வதி நதி மாபெரும் நதியாகவும், மலையில் தோன்றி கடலில் கலக்கும் நதியாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. ரிக் வேதக் கவிஞர்கள் சரஸ்வதியை நதியாகக் கற்பனை செய்திருப்பதைவிட, நதிதெய்வமாகக் கற்பனை செய்திருப்பார்கள் என்றே தோன்றுகிறது. வேறொரு பார்வையும் இருக்கிறது. ருடால்ஃப் வான் ராத், ஹெய்ன்ரிச் ஜிம்மர், கே.சி. சட்டோபாத்யாய போன்றோர் சரஸ்வதி என்பது சிந்து நதியைக் குறிக்கிறது என்ற கருத்தை முன்வைக்கிறார்கள். ஆக, அரியானாவின் இன்றைய சரஸ்வதி இமயமலையில் தோன்றவில்லை என்பதும் கடலில் கலக்கவில்லை என்பதும் தெளிவு!
யமுனையும் சட்லெஜும் சரஸ்வதி நதியில் கலந்தன என்றும், இதனால் சரஸ்வதி நதி இமயமலை நதியாக மாற்றம் பெற்றது என்றும் சொல்கிறார்கள். அப்படியொரு சங்கமத்தை உண்மை என்றே வைத்துக்கொண்டாலும், வரலாற்றுக்கு முந்தைய காலத்தில்தான் அது நடந்திருக்கக் கூடும். அப்போது சரஸ்வதி நதி, யமுனை அல்லது சட்லெஜ் நதிகளில் ஒன்றுடன் கலந்திருக்குமே தவிர, அந்த நதிகள் சரஸ்வதியுடன் கலந்திருக்காது. மேரி-அக்னெஸ் கவுண்டி என்பவரின் குழு 1983-1987 காலகட்டங்களில் காகர் சமவெளியின் நதிப் படிவுகளை அகழ்ந்தெடுத்து மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவு மேற்கண்ட சாத்தியங்களை நிராகரித்தது.
கடந்த 10,000 ஆண்டு காலத்தில் இமயமலையிலிருந்து எந்த நதியும் அந்தப் பிரதேசத்தில் பாய்ந்திருக்க வாய்ப்பில்லை என்று அந்த ஆய்வு முடிவு சொன்னது.பிரயாகையை வந்தடையும் சரஸ்வதி என்ற பழம் புராணம், சிந்து நதிக்குச் சவால் விடுக்கும் சரஸ்வதி நதி என்ற சமீபத்திய போட்டி. இரண்டுமே ஒன்றுக்கொன்று சளைக்காதவை. இவற்றில் ஒன்றை அரியானா அரசு தேர்ந்தெடுக்க வேண்டும். சரி, இந்தச் சிரமம் எதுவும் வேண்டாமென்று அரியானா அரசு நினைத்தால், சரஸ்வதி நதி குறித்த இன்னொரு பழைய புராணத்தைப் பரிசீலிக்கலாம்.
ரிக் வேதத்தில் நதிக்கான கீதம் (X. 75.5) யமுனை நதிக்கும் சட்லெஜுக்கும் இடையில் சரஸ்வதியை வைக்கிறது. ச
ரஸ்வதி நதியுடன் இது பொருந்திப்போகிறது. பஞ்சவிம்ஷா பிரமாணம் உள்ளிட்ட தொன்மையான நூல்கள், வினஷனா என்ற இடத்தில் சரஸ்வதி நதி மறைந்ததைப் பற்றிப் பேசுகின்றன. அப்படியென்றால், காகர் நதியுடன் அது இணைந்திருக்க முடியாது. அதற்கு மாறாக இன்னும் தெற்கு நோக்கி, அநேகமாக சிர்ஸா பகுதியின் வழியாக (இடைக்காலத்தில் இந்தப் பகுதியின் பெயர்: சரஸதி) பாய்ந்திருக்கலாம். வினஷனா என்பது அரியானாவில் இன்னும் தெற்குப் பகுதியில் இருந்திருக்கலாம். மனுஸ்மிருதி (2.17) சரஸ்வதி நதி, திருஷத்வதி நதி (சவுதங் நதி?) ஆகிய நதிகள் பாயும் பகுதிதான் பிரம்மவர்த்தம் என்று சொல்கிறது. ஆகவே, மேற்குறிப்பிட்ட வகையில் சரஸ்வதி நதி பாயும் பாதை பிரம்மவர்த்தமாக இருக்கக் கூடும்; அரியானாதான் அந்த பிரம்மவர்த்தம்.
சரஸ்வதியைப் பற்றிய புராணச் சித்தரிப்புகள் புவியியலுடனோ வரலாற்றுடனோ சற்றும் பொருந்திப் போகவில்லை என்பதே தெளிவு. அப்படியென்றால், சரஸ்வதியை உத்தரப்பிரதேசத்தில் அலகாபாத்துக்கோ குஜராத் மேற்கு பாலைவன எல்லையான கட்சின் ரன் பகுதிக்கோ கொண்டுசெல்வதற்கு முயற்சிக்கிறார்கள். இவர்களின் கூற்று எதுவுமே உண்மையல்ல. கட்டுக்கதைகளாகும்
சிந்துவெளி திராவிட நாகரிகம்
சிந்துவெளி நாகரிகம் தமிழ் கலாச்சாரத்தை சேர்ந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது ஆய்விற்குரிய கருத்தாக, உதாரணமாக சிந்துவெளி நாகரிகம் பற்றிய சர். ஜான் மார்ஷல் செய்த ஆராய்ச்சிக் கருத்துகள் இதற்கு உடந்தையாக இருக்கின்ற போதிலும் இன்னும் பலர் நான்கு [உண்மையில் மூன்று , நாலாவது அதிகமாக தனித்தே இருக்கிறது] வேதங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒன்று தான் சிந்து வெளி நாகரிகம் என்றும் அது ஆரியர்களுடையது என்றும் கருதுகின்றனர். மேலும் வேதங்களுள் காலத்தால் முந்திய ரிக் வேதத்தில், வேதகாலத்தவர் வாழ்க்கையின் பிரதிபலிப்புகளை நாம் காணலாம்.
அதுமட்டும் அல்ல, இந்த ஆரியர்கள் மேய்ச்சல் நிலங்கள் தேடி நாடோடியாக வந்த ஆயர் கூட்டத்தினர். கிராமப் புறக் கலாச்சாரம் கொண்டிருந்த இவர்கள் கி.மு.500 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளி மாதிரி நகர்ப்புறக் கலாச்சாரத்தை, நகரங்களை உருவாக்கவில்லை என்பது வரலாற்று உண்மையும் ஆகும். ஆகவே இந்தப் பின்புலத்தில் சிந்துவெளி நாகரிகத்திற்கும் வேதக் கலாச்சாரத்திற்குமான அடிப்படை வேறுபாடுகளை நாம் அறிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் எது உண்மை எது பொய் என்பதை தீர்மானிக்கலாம்.
ஆரியரைப் பற்றி வேதத்தில் அவர்கள் ஓரளவாக இடையர்களாகவும் ஓரளவாக விவசாயம் சார்ந்த மக்களாகவும் காட்டுகிறது. மேலும் அவர்கள் நகர வாழ்க்கை குறித்து அறியாதவர்கள். அவர்களின் வீடுகள் பொதுவாக மூங்கிலால் கட்டப்பட்டவை. இதற்கு மாறாக மொஹன்சதாரோ. ஹரப்பாவில் உள்ள மக்கள் நகர வாழ்க்கையில் இருந்தனர். நன்கு வசதி பெற்ற செங்கல் வீடுகள் கட்டினர். கிணறுகள், வரிசையாக அமைக்கப் பட்ட வீதிகள், மழை நீர் வடிகால்கள், சாக்கடைகள், மற்றும் குளியலறைகள் கொண்ட வீடுகளால் அவர்களின் நகர்ப்புற நாகரிக நகரம் நிறைந்திருந்தது.
“தனக்குப் படையல் கொண்டு வந்த, வேத கால காசி நாட்டின் மன்னன் “திவோதாச”, விற்காக, நூறு கல் கோட்டைகளை இந்திரன் அழித்தான்” என்ற ரிக் வேதம் மண்டலம் 4 மந்திரம் 30 சுலோகம் 20 இதை மேலும் உறுதிப்படுத்துகிறது, ரிக் வேதத்தில் தஸ்யுக்கள் குறிப்பிட்ட இடத்தில், வலுவான நகரங்களில் அல்லது கோட்டைகளில் வசிப்பவர்களாகக் கூறப்படுகிறார்கள். மேலும் அவர்கள் வசம் 100 கோட்டைகள் இருந்தன. இந்த சுலோகம் மூலம் தெரியவருகிறது. தசியூக்கள் என அழைக்கப் பட்ட, ஹரப்பாவிலிருந்த சாம்பன் என்னும் சம்பரன் எனும் பிற்காலச் சிந்துவெளியில் கோட்டை கட்டி ஆட்சி புரிந்த அரசனை வெற்றி கொள்வதற்கு, சம்பரனின் பழம்பகைவனான, ஆரிய மன்னரான திவோதாச விற்கு இந்திரன் உதவியதை இது கூறுகிறது.
2. ரிக் வேத காலத்தில் இந்தோ-ஆரியர் பாவித்த உலோகங்கள் பொதுவாக பொன், செம்பு அல்லது வெண்கலம் ஆகும். அதன் சற்று பின் அதாவது யசுர்வேத, அதர்வணவேத காலத்தில் இந்த உலோகங்கள் வெள்ளி, இரும்பு போன்றவற்றால் அதிகப்படுத்தப் பட்டன. ஆனால் சிந்து சம வெளி மக்களிடம் வெள்ளி, பொன்னை விட முதன்மையாக உபயோகத்தில் இருந்து உள்ளது. மேலும் கற்களால் செய்யப்பட்ட பாத்திரங்கள் அவர்களிடம் பயன்பாட்டில் இருந்தன. ஆனால் இரும்பு பயன்பாட்டில் இருக்கவில்லை. ஆனால், இந்த ஆரியர்கள் இரும்பின் பயனை அறிந்திருந்தார்கள். இரும்பு ஆயுதங்களை உபயோகித்து ஆற்றங்கரைகளில் உள்ள காடுகளைத் திருத்திக் குடியிருப்புகளை உருவாக்கினவர்கள் என்பதும் குறிப் பிடத்தக்கது. இரும்பு வேதத்தில் அயஸ் [ayas] என்று அழைக்கப்பட்டது என பொதுவாக அறிஞர்கள் கூறுகிறார்கள். பொன் என்றால் இரும்பு, தங்கம், அய்ந்து உலோகங்களில் எதையும் குறிக்கலாம். இதனால்தான் கோவிலில் உள்ள சிலைகளை அய்ம்பொன் சிலைகள் என்று கூறுகிறோம். அதே போலத்தான் அயஸ் என்ற சொல்லும் ஆகும். இதனால்தான் போலும் வேதத்திலேயே கறுப்பு அயஸ் (இரும்பு), சிவப்பு அயஸ் (செம்பு) என்ற சொற்களும் உண்டு.
3. வேதங்கள் மூலம் இந்தோ ஆரியன் வில், அம்பு, ஈட்டி, குத்துவாள், கோடாரி போன்ற தாக்குதலிற் பயன் படுத்துகிற ஆயுதங்களும் தடுப்பு நடவடிக்கைக்கு தலைக் கவசங்களும் உடல் கவசங்களும் பயன்பாட்டில் இருந்தமை அறியப் படுகிறது. ஆனால் சிந்து சமவெளி மக்களிடம் மேல்கூறிய ஆயுதங்களுடன் தண்டாயுதமும் இருந்தன. ஆனால் தற்காப்புக் கவசங்கள் காணப்படவில்லை. உதாரணமாக ‘ரிக் வேத’த்தின் பத்தாம் மண்டலத்தில் [மண்டலம் 10 மந்திரம் 95 சுலோகம் 03] புரூரவா: “நீ இல்லாவிட்டால் என் அம்புப் பொதியிலிருந்து அம்பு எய்ய முடியாது. செல்வம் கிடைக்காது. நூற்றுக்கணக்கான பசுக்களை வெற்றி கொண்டு நான் கொண்டு வர இயலாது. வீரர்களில்லாமல் என் செயல்கள் சோபிக்காது. நீ இல்லா விட்டால் என் வீரர்கள் வீர முழக்கமிடவும் தயங்குகிறார்கள்.”] என்ற புரூரவா-ஊர்வசியின் காதல் உரையாடலைக் காண்கிறோம்.
4. வேத கால ஆரியர்கள் இறைச்சி உண்பவர்கள். மேலும் பொதுவாக மீனை வெறுப்பவர்களாகவும் இருந்தார்கள். இதனால் மீன் பிடிப்பதைப் பற்றி நேரடியாக வேதத்தில் குறிப்பிடப்படவில்லை. ஆனால் சிந்து சம வெளி மக்களுக்கு மீன் பொதுவான உணவு. அங்கு மீன் அதிக அளவில் உள்ளது. அது போல மிக மெலிதான ஓடுகளைக் கொண்ட மெல்லுடலி, ஆமை போன்ற மற்ற கடல் உணவுகளும் அங்கு காணப்படுகின்றன. சோமா என்பது ஒரு பானத்தின் பெயர் மட்டு மல்ல. அது ஒரு கடவுளின் பெயராகவும் விளங்கியது. அந்தக் கடவுளுக்கு கால் நடைகள் உட்பட விலங்கினங்கள் உணவாகப் படைக்கப்பட்டன. அக்னிக்குக் குதிரைகள், எருமைகள், காளைகள், பசுக்கள் பலியிடப் பட்டன என்று ரிக்வேதம் 10.91.14 சொல்கிறது. மேலும் மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 4, பாடல் (சுலோகம்) 9 இதை உறுதிப் படுத்துகிறது. அதாவது, “இந்திரனே! போர் செய்வதிலே வல்லமை படைத்த உனக்கு நாங்கள் (ஆரியர்கள்) அவியை (ஆட்டைக்கொன்று அதன் கறியைச் சமைத்துச் செய்யும் விருந்து) அளிக்கிறோம்” என்கிறது. ஆரியர்கள் கிழக்கு பாரசீகத்தில் (Persia) இருந்து இந்தியா வந்தவர்கள் என்பதால் அவர்களின் முக்கிய உணவாக மாமிச உணவே இருந்தது என்பது இதனால் மேலும் உறுதிப்படுத்தப்படுகிறது.
5. வேத காலத்தில் குதிரைகள் பயன்பாட்டில் இருந்தமை வேதங்களில் குறிக்கப்பட்டு உள்ளது. ஆனால் சிந்து சமவெளி மக்களுக்கு குதிரை பற்றி ஒன்றுமே தெரியாது. அவர்களது முத்திரைகளில் குதிரை காணப்படவில்லை. மேலும் மண்டலம் 10, அதிகாரம் (சூக்தம்) 96,பாடல் (சுலோகம்) 8 இப்படி கூறுகிறது: ‘சோமக் குடியனான இந்திரன், நீண்ட கழுத்தை யுடையவன். அகன்ற மார்பையும் பெற்றவன். அவனும் மஞ்சள். அவன் தாடியும் மஞ்சள். அவன் குடுமியும் மஞ்சள். அவன் இதயம் செம்பு போன்றது. அவன் குடிக்கும் சோமக்கள்ளும் மஞ்சள். அந்த மஞ்சள் நிறக்கள்ளை ஒரே மடக்கில் குடித்து விடுவான். அந்தக் கள்ளோ அவனைப் போதை ஏறிய வெறியனாக்கும். அந்த வெறியோடு குதிரையில் ஏறி, துரிதமாகச் சென்று, அளவற்ற யாகப் பொருளைக் கொண்டு வருவான். குதிரை அந்தப் பாவிகளால் (தமிழர்களால்) தடைப்படுத்தப்படாமல், மஞ்சள் வண்ணத்தானைப் பாதுகாப்புடன் கொண்டு வரட்டும்’ அது மட்டும் அல்ல, ரிக் வேதத்தில் குதிரைகள் பற்றியும் அவற்றை வளர்த்தவர் பற்றியும் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்கள் உள்ளன. அந்தச் சமூகத்தவர்க்கு குதிரை ஒரு முக்கியமான வளர்ப்பு மிருகம் என்பதால் அது கடவுளுக்கு பலியாகவும் கொடுக்கப்பட்டது.
வேத காலத்திற்கும் முற்பட்ட சிந்துவெளி நாகரிகத்தில் வணிகர் பயன்படுத்திய சுடுமண், மாவுக்கல் முத்திரைகளில் ஆடு, மாடு, யானை, காண்டாமிருகம், பன்றி, ஒட்டகம், மயில் போன்ற உயிரினம் சித்தரிக்கப் பட்டதைக் காணலாம். அவற்றில் இல்லாத விலங்கு குதிரை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதாவது சிந்து வெளி நாகரிகத்துடன் தொடர்புடைய தொல்லியல் தடயங்களில் குதிரைகளோ குதிரை வண்டிகளோ இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. சிந்து வெளியில் 1920இல் கண்டெடுக்கப்பட்ட ஒரு பாதி உடைந்த முத்திரையின் பதிவைக் காட்டி சிலர் அது குதிரையின் உருவம் என்றும், சிந்துவெளி நாகரிகத்தவர் குதிரைகளை வளர்த்தனர் என்பதைத் தாம் கண்டு பிடித்து விட்டதாகவும் அறிவித்தனர். சிந்துவெளி நாகரிகத்தில் குதிரைகள் வளர்க்கப்பட்டன என்பதற்கு அவர்கள் காட்டிய ஆதாரங்கள் போலியானவை என்பதை ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர் மைக்கேல் விட்ஸலும் (Michael Witzel), வரலாற் றாய்வாளர் ஸ்டீவ் ஃபார்மரும் (Steve Farmer) திறம்பட விளக்கித் தம் கடுமையான மறுப்புகளை ப்ரண்ட்லைன் (Frontline, அக். 13, 2000) இதழில் தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. மேலும் தன் வாழ்நாள் முழு வதையும் சிந்துவெளி ஆய்விற்கு அர்ப்பணித்திருக்கும் அஸ்கோ பர்ப்போலா (Asko Parpola) குதிரையின் பின்பாகம் என சித்தரித்த அந்த படம் உண்மையில் ஒற்றைக் கொம்புடன் சித்தரிக்கப்பட்ட மாட்டின் உருவமே என்பதைக் உறுதிப்படுத்தினார்.
6. வேதத்தில் பசுவிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது; பசுவிற்கு, சிந்துசமவெளியில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை; எருது முக்கிய இடம் பெற்றது. ரிக் வேதத்தில் சில மந்திரங்கள் எங்களுக்கு நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பசுக்களைக் கொடு என வேண்டுகின்றன. ஓரிடத்தில் ரிஷி தனக்கு அறுபதினாயிரம் பசுக்கள் தானமாகக் கொடுக்கப்பட்டதைக் கூறுகிறார் [Horses of dusky colour stood beside me, ten chariots, Svanaya’s gift, with mares to draw them. Kine [cows] numbering sixty thousand followed after. Kaksivan gained them when the days were closing] (1.126.3). இவை வேத காலத்தில் பசுவிற்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்பதைக் காட்டுகிறது.
7. வேதத்தில் புலி பற்றி சொல்லப்படவில்லை; யானை பற்றி மிகச் சிறிதளவே சொல்லப்பட்டுள்ளது. சிந்து வெளியில் இவை இரண்டும் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன. உதாரணமாக, ரிக் வேதத்தில் இரண்டு பாடல்களில் [சுலோகங்களில்] ஒரு கை கொண்ட மிருகம்-Mrga Hastin-என யானை குறிக்கப்பட்டுள்ளது. பாடல், 1.64.7 “Mighty, with wondrous power and marvellously bright, self strong like mountains, ye glide swiftly on your way. Like the wild elephants ye eat the forests up when ye assume your strength among the bright red flames” என்று கூறுகிறது. யானையை சங்க காலத்தில் இதே மாதிரி ஒரு கை கொண்ட மிருகம் “கைம்மா” என்று கலித்தொகை 23 “இலங்கு ஒளி மருப்பின் கைம்மா” – பளபளப்பான பிரகாசமான தந்தங்களைக் கொண்ட யானை என்றும், புறநானுறு 368 “ஒளிறுமழை தவிர்க்கும் குன்றம் போலக் கைம்மா எல்லாம் கணையிடத் தொலைந்தன” – ஒளியுடன் கூடிய மேகங்களைத் தடுக்கும் மலை போன்ற யானைகளெல்லாம் அம்பு பட்டு இறந்து கிடக்கின்றன என்றும் கூறுகிறது.