ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் அரசு ஊழியர்கள் பணியாற்றுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கி, அதில் இணைந்து பணியாற்றுவதற்கான அனுமதியை வழங்கி யிருக்கிறது பாஜக அரசு . வலுவான எதிர்ப்புகள் எழுந்தாலும் ஒரு கலாச்சார அமைப்பின் பணிகளில் பங்கேற்பதற்கு எதற்கு தடை எனும் தர்க்கம், அவர்கள் தரப்பில் முன்வைக்கப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். என்பது கலாச்சார அமைப்பு மட்டும் தானா, அதற்கும் அரசியல் நடவடிக்கைகளுக்கும் தொடர்பேதும் இல்லையா, இந்திய மதச்சார்பின்மை எனும் அடித்தளத்தை தகர்ப்பதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பாத்திரம் என்ன…? தொடர்கிற கேள்விகளுக்கான விடையை வரலாற்றின் பக்கங்களிலிருந்து தேடுவோம்.
பாசிச பாணியிலான கட்டமைப்பு
1925 விஜயதசமியன்று துவங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்ற முக்கியமான அய்ந்து பேரில் ஒருவர் பி.எஸ்.மூஞ்சே. அவர் 1931 இல் இத்தாலிக்கு சென்று முசோலினியை சந்தித்த போது அவர்கள் இருவருக்குமிடையே நடைபெற்ற உரையாடல் முக்கியமானது.
“குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள் என வயது வாரியான அமைப்புகளாக உங்கள் நாட்டில் உரு வாக்கியிருக்கும் ‘பலில்லா’ அமைப்பைப் போன்றே எங்கள் தேசத்திலும் நாங்கள் ஒரு அமைப்பை கட்டமைத்திருக்கிறோம்.
சீருடையோடும், ஆயுதப் பயிற்சியோடும் மாணவர் களையும், இளைஞர் களையும் தனித்தனியாக திரட்டி வருகிறோம். இலக்கை நோக்கிய பயணத்தில் ‘பலில்லா’ அமைப்பு வெற்றி பெற எனது மனப்பூர்வமான வாழ்த் துக்களை பகிர்கிறேன்” என முசோலினியிடம் தனது வாழ்த்துக் களை பகிர்ந்த மூஞ்சே இத்தாலிய பாசிஸ்டுகளோடு நெருக்கமான உறவை பராமரித்தி ருக்கிறார் என்பதிலிருந்தே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நோக்கங்களையும், செயல்முறைகளையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
காணாமல் போன கோப்புகள்
நாடு விடுதலையடைந்த பிறகு பதற்றமான தருணத்தில் அன்றைய உத்தரப்பிரதேச பிரதம அமைச்சர் (அன்று அப்படித்தான் அழைக்கப்பட்டார்கள்) கோவிந்த வல்லப பந்த் அவர்களை மாநில உள்துறை செயலாளர் ராஜேஷ்வர் தயாள், காவல்துறை டிஅய்ஜி பி.பி.எல்.ஜேட்லி என்பவரோடு சென்று அவரது இல்லத்தில் சந்திக்கிறார்.
டிஅய்ஜி கொண்டு வந்த இரண்டு பெட்டிகளில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்களில் கைப்பற்றப்பட்ட ரகசிய ஆவணங்கள் இருக்கின்றன. முஸ்லிம்களுக்கு எதிராக கலவரங்களை தூண்டவும், அவர்களை படுகொலை செய்யவுமான திட்டங்கள் வரைபடங்களோடு விளக்கப்பட்டிருந்தன.
அவற்றையெல்லாம் விளக்கி உடனடியாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்து, கோல்வால்கரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உள்துறை செயலாளர் ராஜேஷ்வர் தயாளின் கோரிக்கையை சரியாக உள்வாங்கிக் கொள்ளாமல், இப்பிரச்சினையை அடுத்த அமைச்சரவையில் விவாதிப்பதாக சொல்லி காலம் கடத்துகிறார் கோவிந்த் வல்லப்பந்த்.
“அன்று நாங்கள் விடுத்த எச்சரிக்கையை அவர் சரியாக கையாண்டு ஆர்.எஸ்.எஸ் அய் தடை செய்திருந்தால் காந்தியாரின் உயிரை நிச்சயமாக பாதுகாத்திருக்க முடியும்” என பின்னர் ஒரு முறை அச்சம்பவத்தை நினைவு கூர்கிறார் ராஜேஷ்வர் தயாள். ஆனால் காந்தி படுகொலைக்கும் தங்களுக்கும் நேரடியான தொடர்பு எதுவும் இல்லை என ஆர்.எஸ்.எஸ். தொடர்ச்சியாக மறுத்து வருகிறது.
மோடி அரசு முதன்முறை பதவியேற்ற போது உள்துறை அமைச்சகத்திலிருந்து ஆயிரக்கணக் கான கோப்புகள் காணாமல் போனதாகவும், அதில் காந்தியார் படுகொலை தொடர்பான கோப்புகளும் இருந்ததாகவும் வந்த செய்திகளையும் இத்தருணத்தில் நாம் சற்று நினைவுப்படுத்திக் கொண்டால், அதுவொரு தற்செயலான சம்பவம் அல்ல, வரலாற்றின் நீட்சியே அந்த சம்பவம் என்பதையும் கூட எளிதாக புரிந்து கொள்ளலாம்.
விஷமாய் விரியும் ‘சிந்தனைக் கொத்து’
ஆர்.எஸ்.எஸ். வரலாற்றில் அதன் நீண்டகால தலைவராக இருந்தவர் எம்.எஸ்.கோல்வால்கர். அவர் எழுதிய ‘சிந்தனைக் கொத்து’ இதழின் 12 வது அத்தியாயத்தில் ‘உள்நாட்டு எதிரிகள்’ எனும் தலைப்பில் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது.
‘நமது தாய்நாட்டில் நமக்கு மூன்று பிரதான எதிரிகள் இருக்கிறார்கள். முஸ்லிம்கள், கிறித்தவர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகளாகிய அம்மூவரே பாரத தேசத்தின் பிரதான எதிரிகள்’ என தனது எதிரிகளை துல்லியமாக வரையறுத்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ். மேலும் தனது கூர்மையான மதவெறி நிகழ்ச்சி நிரல் மற்றும் கம்யூனிச எதிர்ப்பு ஆகியவற்றிற்கு ஆர்.எஸ்.எஸ். எத்தகைய அழுத்தம் கொடுத்திருக்கிறது என்பதற்கு மேலும் சில உதாரணங்களை பட்டியலிடலாம்:
காந்தியார் படுகொலைக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்படுகிறது. அந்த தடையை விலக்க கோரி கோல்வால்கர் பிரதமர் நேருவுக்கு செப்டம்பர் 27,1948 அன்று ஒரு கடிதம் எழுதுகிறார்:
“உங்கள் தலைமையிலான அரசு ஆர்.எஸ்.எஸ்.சை தடை செய்து விட்டது. இந்த தடையின் காரணமாக ஏராளமான நமது இளைஞர்கள் ‘கம்யூனிச பொறி’க்குள் சிக்கிக் கொள்வதை கண்ணுற்று வருகிறோம். ஏற்கனவே கம்யூனிஸ்டுகள் காந்தியார் படுகொலைக்கு பிறகு ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக அவதூறு பரப்பி வருகிறார்கள்.
எனவே ஆர்.எஸ்.எஸ். மீதான தடையை விலக்கினால் தான் கம்யூனிஸ்டுகள் வளர்வதற்கான வாய்ப்பை தடுக்க முடியும் என கருதுகிறோம்”.
இது அக்கடிதத்தின் உள்ளடக்கமாகும். அதன் பிறகு நவம்பர் 2, 1948இல் விரிவானதொரு அறிக்கையை ஆர்.எஸ்.எஸ் வெளியிடுகிறது. அவ்வறிக்கையில், ‘பண்பு தூய்மை’ எனும் தலைப்பில் பின்வரும் வரிகள் இடம் பெற்றுள்ளன: “கெட்ட வாய்ப்பாக அனைத்து தனி நபர்களுக்கும், குழுக்களுக்கும் சுதந்திரமாக செயல்பட அனுமதி அளித்து விட்டமையால் பல மதங்களும், பல்வேறு மதக்குழுக்களும் இங்கே உருவாகி விட்டன. அதை தடுக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது”. அப்படியெனில் இனிமேல் பிற மதங்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கக் கூடாது என்பது தானே அர்த்தம். இவ்வளவு வன்மத்தோடு சிறுபான்மையினருக்கு எதிராகவும், கம்யூனிஸ்டுகளுக்கு எதிராகவும் எழுதியும், பேசியும் வந்த ஆர்.எஸ்.எஸ். என்பது வெறும் கலாச்சார அமைப்பு மட்டும் தானாம். நாம் அதை நம்ப வேண்டுமாம்.
காவிக் கொடியும் மனு(அ)நீதியுமே
அவர்கள் பாதை
விடுதலைக்குப் பிறகு அமைந்த நேருவின் முதல் அமைச்சரவையில் ஷியாம பிரசாத் முகர்ஜி அங்கம் வகித்தார்.
டில்லியில் உள்ள அவரது வீட்டில் மூவர்ணத்தால் ஆன தேசியக் கொடிக்கு பதிலாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் காவிக்கொடி பறக்கிறது. அதை கண்டித்து பிரதமர் நேரு அவருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்.
“நீங்கள் இந்துமகா சபாவின் சித்தாந்தத்தை ஏற்றுக் கொள்வதில் எனக்கு ஒன்று ஆட்சேபமில்லை. ஆனால் தேசிய கொடிக்கான மரியாதை அளிக்க வேண்டாமா, காவிக்கொடியை கழற்றி தேசிய கொடியை பறக்க விடுங்கள்” என்று நேரு எழுதினார்.
இக்கடிதத்தின் மூலம் ஆர்.எஸ்.எஸ். நபர்களின் தேசப்பற்றை புரிந்து கொள்ள முடியும். 1939இல் நிறைவேற்றப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்புச் சட்டத்தின் பிரிவு 5, 1972இல் திருத்தப்பட்ட பிறகும் கூட தேசியக் கொடியை விடவும் காவிக்கொடியைத்தான் உயர்ந்த இடத்தில் வைத்து போற்றுகிறது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆங்கிலப் பத்திரிகை யான ஆர்கனைசர், அம்பேத்கர் உள்ளிட்டவர்களால் நிறைவேற்றப்பட்ட அரசியல் சாசனத்தை விட மனுஸ் மிருதி தான் பாரத தேசத்திற்கு உகந்தது என பகிரங்கமாக எழுதியது. மூவர்ண தேசியக் கொடிக்கு பதிலாக காவிக்கொடியையும், அரசியல் சாசனத்திற்கு பதிலாக மனுஸ்மிருதியையும் கொண்டாடுகிற ஆர்.எஸ்.எஸ். தனது வகுப்புவாத மூளையை மறைத்துக் கொண்டு, கலாச்சார முகத்தை முன்னிறுத்தி ஆதாயம் தேட விழைகிறது.
ஆட்சியை வழிநடத்தும் ‘அரசியல் கருவி’
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு எப்போதெல்லாம் தடை செய்யப்பட்டதோ அப்போதெல்லாம், ‘இனி நாங்கள் நேரடியான அரசியலில் ஈடுபடாமல் கலாச்சார நடவடிக்கைகளில் மட்டுமே பங்கேற்போம்’ எனும் விளக்கத்தையும், மன்னிப்பையும் கோரித்தான் மீண்டும் தங்கள் நடவடிக்கையை துவக்குவார்கள். ஆனால் நிலைமை தற்போது முற்றாக மாறியுள்ளது. பாஜக எனும் கட்சி ஆட்சியதிகாரத்தில் அமர்ந்திருந்தாலும் அதை வழிநடத்துவதற்கான அரசியல் கருவியாக ஆர்.எஸ்.எஸ். தான் இருக்கிறது என்பது அனைவரும் அறிந்த உண்மையே.
செப்டம்பர் 22, 2013 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியான முக்கியமானதொரு செய்தியை நாம் நினைவு கூர்வது அவசியமாகிறது. மகாராட்டிரா மாநிலத்தின் புலிகள் காப்பகம் ஒன்றின் நடுவில் அமைந்திருக்கும் “ தி ராயல் டைகர்” எனும் விடுதியில் சக்தி வாய்ந்த அய்ந்து நபர்கள் ஒன்றாக கூடுகிறார்கள்.
மோகன் பாகவத், பண்டாரு தத்தாத்ரேயா, பைய்யா ஜோஷி, சுரேஷ் சோனி, மதன் தாஸ் ஆகிய அய்வர் கூடி நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வென்றால் பிரதமர் பொறுப்புக்காக நரேந்திர மோடியின் பெயரை தேர்வு செய்தார்கள் எனும் செய்தியை வெளியிட்டது அந்நாளிதழ். நரேந்திர மோடியை தேர்வு செய்ததன் மூலம் ஆர்.எஸ்.எஸ். விடுக்க விரும்பிய செய்தி ஒன்று தான். ஆம். மொத்த இந்தியாவும் குஜராத்தாக மாற்றப்பட வேண்டுமென்பதே அது.
நவம்பர் 26, 2006 இல் பாஜகவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜ்நாத்சிங் அக்கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் பேசுகிறார்: “ பாஜகவிற்கு தொடர்ச்சியாக பத்து ஆண்டுகள் ஆட்சி செய்யும் வாய்ப்பை வழங்குங்கள். அப்படி வழங்கி னால் முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் அரசி யலுக்கு எங்களால் முற்றுப் புள்ளி வைக்கமுடியும்.”
இதோ பத்து ஆண்டுகளை கடந்து மீண்டும் ஒரு அய்ந்து ஆண்டுகள் அவர்கள் ஆட்சியில் தொடர்கிறார்கள். மக்கள் விருப்பத்திற்கு எதிரான அவர்களின் குறுகிய விருப்பங்கள் அனைத்தும் அடுத்தடுத்து அரங்கேற்றப்பட உள்ளன என்பதற்கான முன்னோட்டங்களில் ஒன்றாகத்தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இணைய அரசு ஊழியர் களுக்கான அனுமதியை பார்க்க வேண்டியுள்ளது.
இந்தியாவில் உள்ள அறுபதாயிரம் வருவாய் வட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் . அமைப்பின் செயல்பாடு சுமார் 25,000 வருவாய் வட்டங்களில் தற்போது இருக்கிறது. அனைத்து வருவாய் வட்டங்களிலும் அமைப்பின் விரிவாக்கத்தையும், அதன் செயல்பாட்டையும் நாம் விரைவில் எட்ட வேண்டும் எனும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் விருப்பத்திற்கு செயல் வடிவம் கொடுக்க பாஜக தயாராகி விட்டது என்பதையே ஒன்றிய அரசின் உத்தரவு உணர்த்துகிறது.
தகவல்கள் ஆதாரம்: ஏ.ஜி. நூரணி எழுதி ஆர்.விஜயசங்கர் மொழிபெயர்ப்பில் பாரதி புத்தகாலயம் வெளியிட்ட ‘ஆர்.எஸ்.எஸ். இந்தியாவிற்கு ஓர் அச் சுறுத்தல்’ நூல்
– ஆர்.பத்ரி, மாநிலக்குழு உறுப்பினர், சிபிஅய்(எம்)
நன்றி: ‘தீக்கதிர்’, 24.7.2024