காவிரியில் வினாடிக்கு 17 ஆயிரம் கன அடி நீர் திறப்பு
ஒகேனக்கல், ஆக. 17– தமிழ்நாட்டிற்கு கருநாடகம் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி ஜூன், ஜூலை மாதங்களுக்கான 44 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி) தண்ணீரை திறக்க வில்லை. இதையடுத்து தமிழ்நாடு அரசு, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. காவிரியில் தண்ணீர் திறக்கும்படி கருநாடகத்திற்கு உத்தர விடுமாறு தமிழ்நாடு கோரியுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
21,964 கன அடி தண்ணீர் திறப்பு
இந்த நிலையில் காவிரியில் தமிழ் நாட்டிற்கு தண்ணீர் திறக்கப்படுவது அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் (15.8.2023) கருநாடக அணை களில் இருந்து காவிரியில் கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படும் அந்த மாநில அரசு அறிவித்தது. இதையடுத்து கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 14 ஆயிரத்து 136 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
நேற்று முன்தினம் (15.8.2023) திறந்து விடப்பட்ட இந்த தண்ணீர் நேற்று (16.8.2023) மதியம் ஒகேனக்கல்லை வந் தடைந்தது. மதியம் 2 மணி நிலவரப்படி வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண் ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்தது.
இதற்கிடையே நேற்று (16.8.2023) இரவு கருநாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு வினாடிக்கு 21 ஆயி ரத்து 964 கன அடியாக அதிகரிக்கப் பட்டது.
நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் ஒகேனக்கல் மெயின் அருவி, அய்ந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால் தமிழ்நாடு -கருநாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் ஒன்றிய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது. இதனால் நேற்று ஒகேனக்கல் வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத் துடன் திரும்பி சென்றனர்.
கருநாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் மேட்டூர் அணையை இன்று (17.8.2023) வந்தடைய வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 53.38 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 1,452 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலையில் வினாடிக்கு 552 கனஅடியாக குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.