சென்னை, ஜூலை 26 பிரதமர் தமிழ்நாட்டிற்குள் வந்தால் கருப்புக்கொடி காட்டுவோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சென்னை, அண்ணாசாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற கட்சி நிர்வாகிகள், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அவர் முகம் மாதிரி கொண்ட முகமூடியை அணிந்து, அல்வா கிண்டுவது போல் எதிர்ப்பை பதிவு செய்தனர். தொடர்ந்து, வேலைவாய்ப்பின்மை மற்றும் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடுபுறக்கணிப்புக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் இரா.முத்தரசன் கூறியதாவது: நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக பேட்டியளித்த பிரதமர், கட்சி அரசியலைக் கடந்து நாடாளுமன்றத்தைப் பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தார். ஆனால், தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டோ பிரதமரின் கருத்துக்கு நேர்மாறான முறையில் அமைந்துள்ளது. தேச விரோத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மீதான இந்த நிலைமையை பாஜக அரசு மாற்றிக் கொள்ள வேண்டும்.இல்லாவிட்டால், பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்குள் வந்தால் கருப்புக் கொடி காட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படும். அவர் தமிழ்நாட்டை புறக்கணிக்கும்போது, அவர் எங்களுக்கான பிரதமரும் அல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார்
சென்னையில் ரவுடிகள் வேட்டை
பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியவர் கைது
சென்னை, ஜூலை 26 சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர் நண்பர்களுடன் கைது செய்யப்பட்டார்.
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பனையூரில் இளைஞர்கள் சிலர், கடந்த 5-ஆம் தேதி இரவு சாலையில் கேக் வைத்து அதை பட்டாக்கத்தியால் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், அதே பட்டாக் கத்தியை சாலையில் உரசி தீப் பொறி பறக்க விட்டவாறு காரில் அதிவேகமாக சென்றனர். இது தொடர்பான காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், சைதாப்பேட்டை காவல்துறையினர் நேற்று முன்தினம் (24.7.2024) சைதாப்பேட்டை, ஆடுதொட்டி பாலம் அருகில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்தப் பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த இளைஞர்கள் 5 பேரை விசாரிக்க முயன்றனர். காவலர்களைக் கண்டதும் அவர்கள் தப்பி ஓடினர். காவலர்கள் அவர்களை துரத்திச் சென்று பிடித்தனர்.
மேலும், தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் கடந்த 5-ஆம் தேதி பனையூரில் தற்போது கைதான எழிலரசனின் பிறந்தநாளை தாம்பரம் காவல் ஆணையரகம், கானத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிழக்கு கடற்கரை சாலையில் பட்டா கத்தியால் கேக் வெட்டியும், கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் காரில் சென்றது தொடர்பாகவும் கானத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.
இது ஒருபுறம் இருக்க சாலையில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய எழிலரசனின் இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரை விரட்டிச் சென்று பிடிக்க முயன்றபோது பாலத்திலிருந்து கீழே விழுந்த எழிலரசனின் இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டதாக காவல்துறையினர் விளக்கம் அளித்தனர்.