சென்னை, ஜூலை 26 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்துக்கு ரூ.360 கோடி நிதி ஒதுக்கி, வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில், இத்திட்டம் குறித்து சமூகநலத் துறை செயலர்ஜெய முரளிதரன் நேற்று (25.7.2024) வெளியிட்ட அரசாணையில் கூறியுள்ளதாவது:
உயர்கல்வியில் பெண்கள் சேர்க் கையை அதிகரிக்கும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ‘மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் திட்டம்’ போல, அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்க ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் அறிமுகம் செய்யப்படும். இவர்களது வங்கிக் கணக்கில் மாதம்தோறும் ரூ.1,000 செலுத்தப்படும்’ என இந்த ஆண்டு தமிழ்நாடு நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அரசுக்கு கல்லூரி கல்வி இயக்குநர் எழுதிய கடிதத்தில், ‘புதுமைப்பெண் திட்டத்தில் 3.28 லட்சம் மாணவிகள் பயன்பெறுகின்றனர். அதே போல, தமிழ்ப் புதல்வன் திட்டத்திலும் 3.28 லட்சம் மாணவர்கள் என கணக்கில் கொண்டால், ஒரு மாணவருக்கு மாதம்ரூ.1,000 வீதம் ஆண்டுக்கு ரூ.393.60 கோடி மற்றும் இத்திட்டத்தை செயல்படுத்த நிர்வாக செலவு ரூ.7.87 கோடி தேவைப்படுவதால், ஓராண்டுக்கு ரூ.401.47 கோடி நிதி வழங்க வேண்டும்’ என்று கேட்டிருந்தார்.
இதை பரிசீலித்த அரசு, இந்த நிதி ஆண்டு முதல், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழ்ப் புதல்வன் திட்டத்தை அறி முகம் செய்துள்ளது. வழிகாட்டி நெறிமுறைகளின் அடிப்படையில் மாதம் ரூ.1,000உதவித் தொகை வழங்க உத்தரவிட்டுள்ளது. இந்த கல்வி ஆண்டில் இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.360 கோடிக்குநிதி ஒப்புதல் அளித்தும் உத்தர விடப்படுகிறது. அடுத்த நிதி ஆண்டில் இத்திட்டத்துக்கு தேவைப்படும் நிதி ஒதுக்கீட்டை, சமூக நலத் துறை மானிய கோரிக்கையில் கோருமாறும் சமூகநலத் துறை ஆணையருக்கு உத்தரவிடப்படுகிறது.
இணையதளம் மூலம் விண்ணப்பம்
‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்துக்கு இணையதளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்க, பிரத்யேக விண்ணப்ப படிவம் பதிவேற்றம் செய்யப்படும். படிவத்தில் மாணவர்கள் அளிக்கும் ஆதார் எண்ணை, சம்பந்தப்பட்ட கல்லூரியில் இருந்து பள்ளிக்கல்வி துறையின் ‘எமிஸ்’ தரவுகள் மூலம் சரி பார்த்து, அரசு, அரசு உதவி பெறும் பள்ளியில் அவர்கள் படித்தது உறுதி செய்யப்படும். இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் மாணவருக்கு பிரத் யேக எண் உருவாக்கி, அவர்களது அலை பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
விண்ணப்பிக்கும் மாணவர், தமிழ் நாட்டில் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி பாடப் பிரிவில் படிப்பவராக இருக்க வேண்டும். உயர்கல்வி என்பது கலை அறிவியல், தொழில்சார் படிப்புகள், இணை மருத்துவம் சார்ந்த படிப்புகள், பட்டயப் படிப்பு, தொழிற்கல்வி, ஒருங்கிணைந்த பட்ட மேற்படிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
இத்திட்டத்தை செயல்படுத்த, மாநில அளவில் தலைமைச் செயலர் தலைமையில், 15 துறைகளின் செயலர்களை உறுப்பினர்களாக கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. சமூகநலத் துறை செயலரை தலைவராக கொண்டுமாநில அளவிலான மேற்பார்வை குழு, மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்டு மாவட்ட அளவிலான செயல்பாட்டு குழு ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.