“தமிழர்கள் தம் தாய்மொழியான தமிழுடன் சேர்த்து ஹிந்தியையும் கற்க வேண்டும், உலகம் முழுவதிலுமாக ஓர் அறிவுக்களஞ்சியம் உள்ளதென்றால் அது, நம் உபநிடதங்களும், வேதங்கள் மற்றும் சமஸ்கிருதம் மட்டுமே” என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தி உள்ளார். குஜராத்தின் அகமதாபாத்திலுள்ள இந்திய ஆசிரியர்கள் கல்வி நிறுவனத்தின் (அய்அய்டிஇ) பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கடந்த 2010இல் குஜராத்தின் முதலமைச்சராக இருந்த நரேந்திரமோடி, காந்தி நகரில் சிறப்பு பல்கலைக் கழகமாக அய்அய்டிஇயை நிறுவினார். இதன் பட்டமளிப்பு விழா வில்தான் ஒன்றிய உள்துறை அமைச்சரான அமித்ஷா கலந்து கொண்டார்.மொத்தம் 2,927 மாணவர்கள் இந்த விழாவில் பட்டம் பெற்றனர்.
இந்த விழாவில் உள்துறை அமைச்சர் பேசியது: “நான் ஆங்கிலத்துக்கு எதிரானவன் அல்ல. ஏனெனில், எந்த வகையிலான அறிவையும் புறக்கணிக்காத நாடாக இந்தியா உள்ளது.
நம் வரலாறு, இலக்கணம், இலக்கியங்கள் தாங்கியுள்ள தாய்மொழியை பாதுகாப்பது மாணவர்களாகிய உங்களின் கடமை. இதனால், புதிய கல்விக் கொள்கை 2020இல் தாய்மொழியை குழந்தைகளுக்குப் புகட்ட முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.ஆங்கிலத்துடன் சேர்த்து ஜெர்மன், பிரெஞ்சு போன்ற மொழிகளையும் குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால், குஜராத்தின் குழந்தைகள் குஜராத்தியுடன் ஹிந்தியையும் கற்க வேண்டும்.
அசாமியர்கள் அசாம் மொழியுடன் ஹிந்தியை கற்க வேண்டும். தமிழர்கள் தமிழுடன் சேர்த்து ஹிந்தியையும் கற்பது அவசியம். இது நடந்தால் நம் நாடு முன்னேறுவதை எவராலும் தடுக்க முடியாது.இங்கு நான்கு பாடங்களில் ஒன்றாக சமஸ்கிருத மொழியும் கற்றுத்தரப்படுகிறது. இங்கு கிடைக்கும் அடிப்படை சமஸ்கிருதக் கல்வியை கூடுதலாகக் கற்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இந்த உலகம் முழுவதிலுமாக ஓர் அறிவுக்களஞ்சியம் உள்ளதென்றால் அது, நம் உபநிடதங்களும், வேதங்கள் மற்றும் சமஸ்கிருதம் மட்டுமே. இதைக் கற்பவர்கள் வாழ்க் கையில் எந்த பிரச்சினைகளும் ஒரு பிரச்சினையாகவே இருக்காது.
அறிவு எங்கிருந்து வந்தது என்பதைப் பற்றி சிந்திக்காமல் நல்ல எண்ணங்களை உள்வாங்க வேண்டும் என வேதங்கள் போதிக்கின்றன. அறிவு எங்கிருந்து வந்தாலும் அது நம் சமுதாயம், மக்கள், உலகம் மற்றும் பிரபஞ்சத்தின் நலனுக்கானதா எனப் பார்க்க வேண்டும்.அதில் நவீன பரிமாணத்தையும் சேர்க்க வேண்டும். அறிவு மற்றும் அறிவியல் துறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த மாற்றங்களைப் புரிந்துகொண்டு இரண்டையும் ஒருங்கிணைத்து முழுமையானக் கல்வி முறையை உருவாக்க வேண்டும். கல்வியின் பொருள் என்பது குழந்தைக்குச் சரியான பாதையைக் காட்டி, வழிகாட்டியாக மாறுவது ஆகும்” என்று அவர் பேசி யுள்ளார்.
வேதங்களைப் பற்றி கொட்டி அளக்கிறாரே அமைச்சர் அமித்ஷா – வேதங்களில் இவர்கள் கூறும் கடவுள்கள் உண்டா? கடவுளுக்கு உருவம் கிடையாது. உருவம் இல்லாததுதான் உண்மையான உருவம் என்கிறதே உபநிஷத்.
இந்த நிலையில் செத்துப்போன சமஸ்கிருதத்தை ஏன் படிக்க வேண்டும்; மக்கள் பணத்தை ஏன் பாழாக்க வேண்டும்?
உத்தரப் பிரதேசத்தில் தமிழ் கற்பிக்கப்படுமா? கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் உண்டா? எவ்வளவுதான் குட்டிக்கரணம் போட்டாலும் தமிழ் நாட்டு மக்களிடம் அமித்ஷாக்களின் பாச்சா பலிக்காது.
வேதங்களை சூத்திரர்கள் படிக்கக்கூடாது படித்தால் நாக்கை அறுக்க வேண்டும் என்று கூறிய கூட்டம் – இப்பொழுது சமஸ்கிருதத்தைப் படிக்கச் சொல்வானேன்?
அது செத்து சுண்ணாம்பு ஆனதற்கு யார் காரணம்? அமித்ஷாக்கள் சிந்திக்கட்டும்!