சமூக நீதி காத்த ‘தகைசால் தமிழர்!’
கலைஞருக்குப் பிறகான தி.மு.க. பற்றி அய்ந் தாண்டுகளுக்கு முன் பல கருத்துகள் வெளிப் பட்டன. அவரது மறைவுக்குப் பிறகு, இயக்கம் எந்தவித பாதிப்புமில்லாமல் முழுமையாக ஒரு தலைமையின் கீழ் அணிவகுத்துப் பயணிக்கிறது.
பெரியாருக்குப் பிறகான திராவிடர் கழகம் பற்றி அய்ம்பதாண்டுகளுக்கு முன் பலரும் பல கருத்துகள் சொன்னார்கள். பெரியாரைப் போல பதவி நாட்டமில்லாமல் பொதுத் தொண்டாற்றுவது கடினமானது. அதில் ஈடுபாடு காட்ட யாரும் வரமாட்டார்கள் என நினைத்தார்கள். 1973இல் பெரியார் மறைந்ததும், மணியம்மையார் அந்த இயக்கத்திற்குத் தலைமையேற்றார். ஒரு நாத்திக-பகுத்தறிவு இயக்கத்தைத் தலைமையேற்று நடத்திய முதல் பெண்மணி என்ற பெயரையும் பெற்றார்.
வடமாநிலங்களில் இராம லீலா நடத்தப்படு வதற்கு எதிர் நிலையாக, பெரியார் திடலில் ’இரா வண லீலா’ நடத்தி இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி வரை கவனத்தை ஈர்த்தவர் மணியம்மையார். இந்திரா காந்தி அம்மையார் ஆட்சிக்கால நெருக் கடி நிலையையும் மணியம்மையார் தலைமையிலான திராவிடர் கழகம் எதிர்கொண்டது. தி.மு. க.வினர், மார்க்சிஸ்ட்டுகள், ஸ்தாபன காங்கிரசார், ஜனசங்கத்தினர் மிசா சிறையில் கைது செய்யப் பட்டது போல, திராவிடர் கழகத்தினரும் கைது செய்யப்படுகின்றனர்.
சென்னை மத்திய சிறையில் இன்றைய முதல மைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அன்று ஒரே சிறைய றையில் அடைக்கப்பட்டவர் திராவிடர் கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘விடுதலை’யின் ஆசிரியர் கி.வீரமணி. பெரியாருக்குப் பிறகும் தி.க. வலிமையாக செயல்பட்டதன் அடையாளமே ஆசிரியர் மீதான கைது நடவடிக்கையாகும். 10 வயதில் பள்ளிச் சிறுவனாக பெரியார் இயக்கத்தின் மேடையில் முழங்கத் தொடங்கியவர் அவர்.
இயக்கத்தில் பற்றுக் கொண்ட தனது பள்ளி ஆசிரியரின் வழிகாட்டுதலில், மேடையேறி, தலை வர்களின் பாராட்டுகளைப் பெற்று, பெரியாரின் அரவணைப்பில் சட்டப்படிப்பு முடித்து, விடுதலை நாளேட்டிற்கு ஆசிரியராக அவர் பொறுப்பேற்றார். ‘விடுதலை’க்கு அண்ணா ஆசிரியராக இருந்திருக் கிறார். குத்தூசி குருசாமி ஆசிரியராக இருந்திருக் கிறார். எழுத்தாற்றலில் வலிமைமிக்க அவர்கள் இருந்த இடத்திற்கு கி.வீரமணியைப் பெரியார் தேர்ந்தெடுத்தார்.
சட்டப்படிப்பு முடித்திருந்த கி.வீரமணி, பெரியாரின் விருப்பப்படி ‘விடுதலை’ ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். 60 ஆண்டுகளாக அந்தப் பணியைத் தொய்வின்றித் தொடர்ந்து, ஆசிரியர் என்பதையே தனது சிறப்பு அடையாளமாக ஆக்கிக்கொண்டார். பெரியாரின் தொண்டறத் திற்கு இறுதி வரை துணை நின்றது போலவே, பெரியாருக்குப் பிறகான இயக்கத்திற்கு மணியம் மையார் தலைமைப் பொறுப்பேற்ற போதும் தனது பணியை மேற்கொண்டார். நெருக்கடி நிலைக்காலத்தில் சிறையில் சித்ரவதைகளை எதிர்கொண்ட போதும் அவரது கொள்கை உறுதி தளரவில்லை. 1978இல் மணியம்மையார் இறந்த பிறகு, திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளராக வும் பின்னர் தலைவராகவும் பொறுப்பேற்று வழிநடத்தி வரும் ஆசிரியர் வீரமணி அவர்களின் வயது 90. அவரது பொதுவாழ்வுக்கு வயது 80.
பகுத்தறிவு-சுயமரியாதை-சமூக நீதிக்கானப் பயணத்தில் பெரியாருக்குப் பிறகான திராவிடர் கழகம் அரை நூற்றாண்டு காலத்தை கடந்து வந் திருப்பதற்கு காரணம், ஆசிரியரின் அரும்பணியே. பெரியார் உருவாக்கி வைத்த கல்வி நிலையங்கள், அறக்கட்டளைகள் ஆகியவற்றை பல மடங்கு வளர்த்தெடுத்தவர் ஆசிரியர். அதே நேரத்தில், சமுதாய மாற்றத்திற்கானப் பிரச்சார இயக்கமான திராவிடர் கழகத்தின் பரப்புரையைத் தமிழ் நாட்டைக் கடந்து பல மாநிலங்களுக்கும் கொண்டு சென்றார். பிற மாநிலங்களிலும் பல நாடுகளிலும் உள்ள பகுத்தறிவு-நாத்திக இயக்கங்களுடன் இணைந்து கருத்தரங்குகள்- மாநாடுகளை நடத்தி பெரியாரின் சிந்தனைகளை அங்கெல்லாம் விதைத்தார்.
மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரத்தை இன்ற ளவும் ஒவ்வொரு மாநாட்டிலும் மேற்கொண்டு வருகிறது திராவிடர் கழகம். மொட்டை கடுதாசி மிரட்டல்கள், வழி மறித்து தாக்குதல்கள், கொலை முயற்சிகள் எனப் பலவற்றையும் எதிர்கொண்ட போதும் ஆசிரியரின் பயணம் தடைப்படவில்லை. இயக்கத்தில் கருத்து வேறுபாடுகள், பிரிவுகள், பிளவுகள் ஏற்பட்டபோதும் பெரியார் பணியைத் தொடர்ந்து தொய்வின்றி மேற்கொள்வதில் திராவிடர் கழகமே முதன்மையானது என்பதை ஆசிரியர் இன்றளவும் நிரூபித்து வருகிறார்.
திராவிடர் கழகம் தேர்தலில் பங்கெடுக்கும் அரசியல் இயக்கமல்ல. ஆனால், தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கக்கூடிய வாய்ப்புள்ள பெரிய கட்சிகள் திராவிடர் கழகத்தின் பங்களிப்பைப் புறந்தள்ள முடியாது என்ற நிலையை, பெரியா ரைத் தொடர்ந்து ஆசிரியரும் தக்க வைத்தது, அரசியல் களத்தில் அவரது வியூகம் நிறைந்த செயல்பாட்டுக்கு சான்றாகும்.
இந்தியாவில் உள்ள ஓ.பி.சி. எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை வழங்கப் பரிந்துரைத்த மண்டல் ஆணைய அறிக் கையை 1980 முதல் 1990 வரையிலான காலகட்டத் தில் ஒன்றிய காங்கிரஸ் அரசு நடைமுறைப்படுத்த வில்லை. அந்த 10 ஆண்டுகளும் இடைவிடாமல் திராவிடர் கழக மாநாடுகளில் மண்டல் ஆணை யத்திற்கு ஆதரவானத் தீர்மானம் நிறைவேற்றப் படும். அதனை நிறைவேற்றவேண்டும் என வலி யுறுத்திப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
பிரதமர் வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி ஆட்சியில் 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் நாள் மண்டல் ஆணையப் பரிந் துரைகளின்படி இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27% இடஒதுக்கீடு வழங்கப்படும் என நாடாளு மன்றத்தில் அறிவிக்கப்பட்டது. அதற்கு அடிப் படை காரணம் தேசிய முன்னணியின் அங்கமாக விளங்கிய கலைஞரும், தேசிய முன்னணியை ஆதரித்த ஆசிரியரும்தான். நாடாளுமன்றத்தில் பெரியாரின் பெயரை பெருமையுடன் உச்சரித்தார் வி.பி.சிங். ஓ.பி.சி. இடஒதுக்கீட்டிற்கு எதிராகத் திட்டமிட்டு கலவரங்கள் உருவாக்கப்பட்டபோது, தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு ஆதரவுப் பேரணி களை வெற்றிகரமாக நடத்தியது திராவிடர் கழகம். இடஒதுக்கீட்டிற்கு எதிரான சட்டரீதியானத் தடைகளைத் தகர்ப்பதிலும் அது முன்னின்றது.
50 விழுக்காட்டிற்கு மேல் இடஒதுக்கீடு கூடாது என்கிற உச்சநீதிமன்றத் தீர்ப்பினால், 1989இல் கலைஞர் ஆட்சிக் காலத்திலேயே 69 விழுக்காடு என்கிற அளவை எட்டிவிட்ட தமிழ்நாட்டின் சமூக நீதிக் கொள்கைக்கு ஆபத்து வந்தது. தீர்ப்பு வந்தபோது, தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் ஜெயலலிதா. 69% இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க வேண்டும் என தி.மு.க தலைவர் கலைஞர், பா.ம.க நிறுவனர் ராமதாஸ், பிற சமூக நீதி இயக்கத் தலைவர்கள் போராடினர். அதனை ஆரம்பத்தில் ஜெயலலிதா அலட்சியப்படுத்திய நிலையில், இடஒதுக்கீட்டின் தேவையையும் அது அரசியல் களத்தில் ஏற்படுத்தக் கூடிய தாக்கத்தை யும் ஜெயலலிதாவுக்குப் புரிய வைத்தவர் ஆசிரி யர்தான்.
31(சி) பிரிவின்படி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றச் செய்து, அதனை நாடாளுமன்றத்தின் ஒப்புதலையும், குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்று, இந்திய அர சியல் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் இடம் பெறச் செய்யும் ஆலோசனையை வழங் கியவரும் அவர்தான். ஜெயலலிதா அரசு அந்த ஆலோசனையை செயல்படுத்தி, 69 சதவீத இடஒதுக் கீட்டினைப் பாதுகாத்தது. அதற்காக திராவிடர் கழகத்தின் சார்பில், ஜெயலலிதாவுக்கு சமூக நீதி காத்த வீராங்கனை என்ற பட்டத்தை ஆசிரியர் வழங்கினார். அது தொடர்பாக, அரசியல் களத்தில் விமர்சன அலைகள் எழுந்தன.
சமூக நீதியைக் காப்பாற்றுவதற்கான ஆலோ சனை, அதற்கான சட்ட வரைவு எல்லாவற்றையும் ஆசிரியரே முன்னெடுத்த நிலையில், ஜெய லலிதாவுக்கு எதற்கு சமூக நீதி காத்த வீராங்கனைப் பட்டம் என்ற கேள்விக்கு ஒரு கூட்டத்தில் தன் பதிலை அளித்தார் ஆசிரியர். திராவிடர் கழகம் பதவிக்கு வருகின்ற இயக்கமல்ல.
பதவியில் இருப்பவர்களை சமூக நீதியை நிலைநாட்டச் செய்கின்ற இயக்கம். அன்றைக்கு முதலமைச்சராக இருந்தவர் ஜெயலலிதா. பிரதமராக இருந்தவர் நரசிம்மராவ், குடியரசுத் தலைவராக இருந்தவர் சங்கர் தயாள் சர்மா. இந்த மூன்று பார்ப்பனத் தலைமையினையும் பிற்படுத் தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக் களுக்கான இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக செயல் பட வைத்தோம். இதுதான் திராவிடர் கழகத்தின் சாதனை. ஏற்கெனவே தமிழ்நாட்டில் இருந்த சமூக நீதியைப் பாதுகாத்ததால் ஜெயலலிதா அம்மையாருக்கு சமூக நீதி காத்த வீராங்கனை என்ற பட்டம் அளித்தோம். சமூக நீதி தந்த வீராங்கனை என்று சொல்லவில்லையே என்றார் ஆசிரியர்.
ஒருகாலத்தில், இடஒதுக்கீட்டை எதிர்த்த இயக்கங்களும் இன்று சமூக நீதியின் பக்கம் நிற்கின்றன என்றால், அதில் முக்கிய பங்களிப்பு ஆசிரியருக்குரியது. பொதுவுடைமை இயக்கங்கள் உள்பட பலவற்றின் சமூக நீதிப் பார்வை தெளி வடைந்திருப்பதற்கு ஆசிரியரின் பரந்துபட்ட முயற்சி ஒரு காரணியாக விளங்குகிறது.
சமூக நீதிப் பார்வையின் காரணமாக உத்தரப் பிரதேசத்தில் பெரியார் மேளா கொண்டாடப் பட்டது. டில்லியில் பெரியார் மய்யம் உருவானது. வங்கத்திலும், மராட்டியத்திலும் மற்ற பல மாநிலங் களிலும் பெரியாரின் கருத்துகள் பெரும் வரவேற் பைப் பெற்றுள்ளன. பல பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டங்கள் உருவாகியுள்ளன. அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் அய்ரோப்பிய நாடுகளிலும் பெரியாரியல் கருத்துகள் சார்ந்த நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப இணைய தளம், செயலிகள், காணொலிக் கூட்டங் கள் எனப் பெரியாரை எல்லாத் திசைகளிலும் சுமந்து செல்கிறார் ஆசிரியர். பெரியார் உலகம் உருவாக்குவதும், பெரியாரை உலகமயமாக்கு வதும் அந்த 90 வயது இளைஞரின் இலட்சியமாக உள்ளது.
80 ஆண்டுகாலத் தொண்டறமும், இன்றும் தொடரும் சளைக்காத உழைப்பும், இளைஞர் களுக்கு வழிகாட்டும் சுறுசுறுப்பும் கொண்ட ஆசிரியருக்கு தமிழ்நாடு அரசு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கி சிறப்பித்துள்ளது. விருதுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார் தமிழ்நாட்டின் முதல மைச்சர்.
நன்றி: “மின்னம்பலம்” இணையதளம், 17.8.2023