பேராசிரியர்
மு.நாகநாதன்
ஒரு நாட்டின் நிதியியல் கொள்கையைச் செம் மைப்படுத்தும் ஒரு கருவிதான் ஆண்டுதோறும் நாடாளு மன்றத்தில் அளிக்கப்படும் நிதி நிலை அறிக்கை. நிதியியல் கொள்கையின் முதன்மையான குறிக்கோள்கள் இரண்டு. (Two objectives of the Fiscal policy are Giving full employment and maintaining price stability) ஒன்று முழு வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், இரண்டு விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தல்.
2024 ஆம் ஆண்டில் தொடங்கிய பாஜக ஆட்சியின் – இது 11ஆவது நிதிநிலை அறிக்கையாகும். கடந்த 10 ஆண்டுகளில் எல்லாப் பொருட்களின் விலைகளும் உயர்ந்து வருகின்றன. வேலைவாய்ப்புகள் கடந்த 10 ஆண்டுகளில் என்றும் இல்லாத அளவுக்குக் குறைந்து, வேலையின்மை ஒரு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. ஒன்றிய அரசின் நேரடி மறைமுகக் கட்டுப்பாட்டில் உள்ள, மய்ய வங்கி,ஸ்டேட் வங்கியின் அறிக்கைகளில் இந்தியாவில் வேலைவாய்ப்பு பெருகி வருவதாகக் குறிப்பிடுகின்றன. புள்ளிவிவரங்களை பாஜக அரசின் கோரிக்கைக்கு ஏற்ப உயர்த்தியும், குறைத்தும், மதிப்பிடுகின்ற புள்ளிவிவரத் தில்லு முல்லுகள் தொடர்கின்றன என்பதைப் பல ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
வங்கிகள் குறிப்பிட்டதற்கு மாறாக இந்தியப் பொருளாதாரக் கள ஆய்வு மய்யம் (Centre for Monitoring Indian Economy-CMIE ) தனது ஜூலை மாத அறிக்கையில் 2024 மே மாதப் புள்ளிவிவரங்கள்படி வேலைவாய்ப்பின்மை 7விழுக்காடாக இருந்தது. இது 2024 ஆம் ஆண்டில் ஜூன் மாதத்தில் 9.2 விழுக்காடாக உயர்ந்துள்ளது. கடந்த 8 மாதங்களில் காணப்படாத வேலையின்மை அளவின் உயர்வாகும். சான்றாக, உத்தரப்பிரதேச மாநிலத்தில், 2022 ஆம் ஆண்டில் தொடர் வண்டி துறையில் தொழில் நுட்பம் சாராத சாதாரணப் பணியாளர் பதவிக்குத் தேர்வு எழுத 1கோடியே 25இலட்சம் இளைஞர்கள் விண்ணப்பம்செய்துள்ளனர்.
இதே மாநிலத்தில் 2024 ஆம் ஆண்டு காவல் துறையில் 60,000 பணிகளுக்கு (Constable post) 47 இலட்சம் இளைஞர்கள் விண்ணப்பம் செய்துள்ளார்கள். இந்தக் கவலை தரும் கலக்கமளிக்கும் நிலையைப் பற்றி பாஜக ஒன்றிய அரசு கவனம் செலுத்தவில்லை. உற்பத்தித் துறைகளில் தொடர்ந்து சரிவை நோக்கிச் சென்று, பொருளாதாரம் தேக்க நிலையில் உள்ளது.
2024 உலக முதலீடு அறிக்கையின்படி இந்தியா வெளிநாட்டு முதலீடுகளைப் பெறுவதில் மிகவும் கவலை அளிக்கக் கூடிய நிலையில் பின் தங்கியுள்ளது. வெளிநாட்டு முதலீடுகள் உலக அளவில் ஒப்பிடும்போது 1990 ஆம் ஆண்டில் 0.1 விழுக்காடாக இருந்த நிலை மாறி 2020 ஆம் ஆண்டில் 6.5 விழுக்காடாக உயர்ந்தது. ஆனால், இந்த வெளிநாட்டு முதலீடு அளவு 2023 ஆம் ஆண்டில் 2.2 விழுக்காடாகச் சரிந்துள்ளது.
வெளிநாட்டு முதலீடுகள் இருப்பிலும் (Stock) இந்தியா பெரும் சரிவை நோக்கிப் பயணம் செய்கிறது. வெளிநாட்டு முதலீடுகள் இருப்பில் அமெரிக்கா 26.1 விழுக்காடு, சீனா- 7.5 விழுக்காடு, இங்கிலாந்து 6.2 விழுக்காடு, நெதர்லாந்து 5.5 விழுக்காடு, சிங்கப்பூர் 5.4விழுக்காடு, இந்தியா 1.09 விழுக்காடு. உலக முதலீட்டு 2023 ஆண்டின் அறிக்கையின் படி வெளிநாட்டு நேரடி முதலீடுகளைப் பெறுவதில் உலகிலேயே கடைசி நாடாக இந்தியா உள்ளது.
இத்தகைய முதலீட்டுச் சரிவுகள் இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருவதை எடுத்துக்காட்டுகின்றன. உள்நாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதில் அதானி, அம்பானிகளுக்கு வரிச்சலுகைகள், பல இலட்சம் ரூபாய் வங்கிக் கடன்கள் தள்ளுபடியை பாஜக அரசு வாரி வழங்கி நாட்டின் வருமானத்தை இழந்து வருகிறது.
பாஜக ஆட்சியில் நிதித்துறையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில், பங்கு சந்தையில் நடைபெற்று வரும் மோசடிகளைத் தடுப்பதற்கு எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
நிதி அமைச்சர் எல்லாவற்றையும் மறைத்தாலும் வரி வருவாய் கடன் அளவு, வட்டி செலுத்தும் நிலை செய்யும் செலவுகளை மறைக்க முடியாது அல்லவா!
நிதி அமைச்சர் கிண்டிய அல்லவா எப்படி உள்ளது என்பதை நிதிநிலை அறிக்கையில் எடுத்துக்காட்டியுள்ள ஒத்த ரூபாய் பட விளக்கம் சரிந்து வரும் நிதிநிலையை அம்பலப்படுத்தியுள்ளதே!
ஒரு ரூபாயில் வருமான வரி மூலம் வரும் வருவாய் 19 விழுக்காடு, நிறுவனம் வரி மூலம் வரும் வருவாய் 17 விழுக்காடு.
இங்கும் தனியார் செலுத்தும் வருமான வரி அளவு அதிகம்.
முதலாளித்துவ நிறுவனங்கள் இலாபத்தில் செலுத்துவது குறைந்த வரி, கடன் அல்லாத மூலதன வருவாய் 1 விழுக்காடு, ஏழை எளியோர் செலுத்தும் மறைமுக வரிகள் ஒரு ரூபாயில் சரக்கு சேவை மற்ற வரிகள் 18 விழுக்காடு, தீர்வை வரி 5 விழுக்காடு, சுங்க வரி 4 விழுக்காடு, கடன் மற்ற சுமைகள் 27 விழுக்காடு, வரி அல்லாத வருவாய் 9 விழுக்காடு.
ஏறக்குறைய 62 வரி மற்ற சுமைகளைத் தாங்க முடியாமல் தாங்குவது ஏழை நடுத்தரக் குடும்பங்கள் தானே!
ஒரு ரூபாயில் ஒன்றிய அரசின் செலவின் பங்கு:
ஓய்வு ஊதியம் 4 விழுக்காடு
ஒன்றிய அரசு நிறைவேற்றும் திட்டங்கள் 8 விழுக்காடு
நிதிக் குழுப் பரிந்துரையின் படி செய்யப்படும் செலவு 9 விழுக்காடு
மாநிலங்களின் வரி பகிர்வு செலவு 21 விழுக்காடு
மற்ற செலவுகள் 9 விழுக்காடு
பாதுகாப்புத் துறைக்கு 8 விழுக்காடு
உதவித் தொகை 6 விழுக்காடு
ஒன்றிய அரசு செலவு செய்யும் நேரடி திட்டங்கள் செலவு 16 விழுக்காடு
ஒன்றிய அரசு வாங்கிய கடனுக்குச் செலுத்தும் வட்டி 19 விழுக்காடு
இந்தச் செலவுத்தொகையில் வட்டியின் பங்கு 19.
இது இந்தியாவின் பெருகி வரும் அச்சுறுத்தும் கடன் அளவை எடுத்துக்காட்டுகின்றது.
மாநிலங்களின் அதிகாரங்களில் குறுக்கிட்டு ஒன்றிய அரசின் நேரடி செலவு16 விழுக்காடு பயனாளர்களுக்குச் சென்று அடையாமல் விழலுக்கு இறைத்த நீர் போன்ற நிலையில் உள்ளது.
ஒன்றிய அரசின் அதிகாரக்குவிப்பும் நெறியற்ற மோசமான நிதி மேலாண்மையை இந்தச் செலவுகள் நமக்குத் தெரிவிக்கின்றன. இந்த நிதிநிலை அறிக்கையில் கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை யானைப் பசிக்குக் கொடுக்கப்பட்ட சோளப் பொரியை ஒத்ததாகும்.
காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை போதுமானது அன்று.
இந்த நிலையில் பீகாருக்கும் ஆந்திராவிற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை நிதியியலின் பொதுத்தன்மையைச் சீர் குலைக்கும் செயலாகும்.
ஆந்திராவின் நிதி கோரிக்கையை 10 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் பாஜக அரசு ஏன் புறந்தள்ளியது?
பீகாரில் பல்டி குமாருடன் இணைந்து, பிரிந்து பாஜக செய்த செய்து வரும் அரசியல் ஆபாசத்தின் உச்சம்.
தமிழ்நாடு உட்படப் பல மாநிலங்களின் நேர்மையான கோரிக்கைகளை ஏற்காமல், தனது அரசிற்கு ஆதரவு அளிப்பதனால் அதிக நிதி ஒதுக்கீடு செய்வது அப்பட்டமான நிதியியல் மோசடியாகும்.
அரசமைப்புச் சட்டத்தின்படி இயங்கும் தன்னாட்சிப் பெற்ற அனைத்து அமைப்புகளையும் மிரட்டிப் பணிய வைத்து ஜனநாயகத்தின் அடிப்படை கூறுகளைக் கடந்த 10 ஆண்டுகளாகச் சிதைத்துச் சீரழிவை ஏற்படுத்திய ஒன்றிய அரசு, நிதி நிலை அறிக்கை மீதும் பாசிசத் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
இதுதான் இந்த நிதிநிலை அறிக்கை எடுத்துரைக்கும் உண்மையாகும்.
இதற்கு ஒரே தீர்வு மாநிலங்கள் எல்லாத் துறைகளிலும் தனது உரிமைகளை மீட்டெடுக்கக் களம் காணவேண்டும் .