தஞ்சையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டனம்
தஞ்சை, ஜூலை 24 பட்ஜெட்டை அரசியல் ஆயுத மாகப் பயன்படுத்துவதா? என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
நேற்று (23.7.2024) மாலை தஞ்சாவூர் பானகல் கட்டடம் அருகே (ஜூபிடர் திரையரங்கம்) காவிரி நீர் உரிமை கோரி திராவிடர் கழகம் சார்பில் அனைத்துக் கட்சியினர் மற்றும் விவசாய சங்கத்தினர் பங்கேற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமையேற்று கண்டன உரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
இன்றைக்கு மிக முக்கியமான கட்டம் பட்ஜெட். இந்த பட்ஜெட்டில், தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது என்று மிகத் தெளிவாகத் தெரிகிறது. இதற்காக ஒன்று பட்டு குரல் கொடுக்கவேண்டும். இதற்கு என்ன தீர்வு என்பதற்கு, எல்லா கட்சிகளையும் அழைத்து, இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக இருக்கக்கூடிய நம்முடைய ஆற்றல்மிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், உடனடியாக இதில் முடிவு செய்யவேண்டும்.
மோடி, பட்ஜெட்டை ஓர் அரசியல் ஆயுதமாக இன்றைக்குப் பயன்படுத்துகிறார்!
பட்ஜெட் என்பதற்கு என்ன அர்த்தம் என்றால், வரவு – செலவு திட்டம். நான் பொருளாதார மாணவன். ஆனால், இப்பொழுது மோடி அவர்கள் அதனை ஓர் அரசியல் ஆயுதமாக இன்றைக்குப் பயன்படுத்துகிறார்.
தனக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்று பிரித்து, ஓர் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி, தன்னுடைய ஆடுகின்ற நாற்காலியை ஆடாமல் பார்த்துக் கொள்வதற்கும், எதிரிகளைப் பழிவாங்குவதற்கும் பயன்படுத்திக் கொள்கிறார்.
அவர்கள் என்ன எஜமானர்கள்; நாங்கள் என்ன அடிமைகளா?
நாங்கள் என்ன கப்பம் கட்டுகிற சிற்றரசர்கள்; அவர்கள் பேரரசர்களா? என்று கேள்வி கேட்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள்.
தமிழ்நாட்டு மக்கள் வரி கொடுத்துத்தானே ஒன்றிய பட்ஜெட் போடப்படுகிறது. தமிழ்நாடு வருவாய் இல்லாமல், ஒன்றிய அரசுக்குப் பணம் வருமா?
விற்பனை வரி என்பதை சொல்லிக் கொடுத்ததே தமிழ்நாடுதான்!
இன்னுங்கேட்டால், விற்பனை வரி என்பதை சொல்லிக் கொடுத்ததே தமிழ்நாடுதான். 1938 ஆம் ஆண்டில் இராஜகோபாலாச்சாரியார் முதலமைச்சராக இருந்தபொழுது, அவர் உண்டாக்கியதுதான் விற்பனை வரி.
அப்பொழுதே பெரியார் கேட்டார், ‘‘பெயர் விற்பனை வரி; ஆனால், அந்த வரியைக் கொடுக்கின்றவர்கள் எல்லாம் வாங்குகிறவர்கள்தான்” என்றார்.
உண்மையாகப் பார்த்தீர்களேயானால், வாங்குகிற வர்கள் கொடுப்பதுதான்; வாங்குகிறவர்கள் கொடுக்கிற வரிதான். ஆனால், அதற்குப் பெயர் விற்பனை வரி!
அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வளர்ந்து, இப்பொழுது மிகப்பெரிய அளவிற்கு வந்து, ஜி.எஸ்.டி.யாக வந்திருக்கிறது.
என்னுடைய பிணத்தின்மீதுதான் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்தவேண்டும் என்று சொன்னவர்
என்னுடைய பிணத்தின்மீதுதான் ஜி.எஸ்.டி.யை குஜராத்தில் அமல்படுத்தவேண்டும் என்று சொன்னவர் அல்லவா இந்த மோடி!
ஆகவே நண்பர்களே! இப்பொழுது நீர்ப் பிரச்சி னையும் மிக முக்கியம்; நிதிப் பங்கீடு பிரச்சினையும் மிக முக்கியமாகும்.
இதற்கு வேண்டியதை நம்முடைய முதலமைச்சர் அவர்களும் சரி, எதிர்க்கட்சித் தலைவர்களாக இருந்தா லும் சரி ஒருமித்த குரல் கொடுக்கவேண்டும்.
கருநாடகாவில், பி.ஜே.பி. உள்பட அனைத்துக் கட்சியினரும் ஒன்றாக இருக்கிறார்கள்.
ஆனால், தமிழ்நாட்டில் உள்ள பா.ஜ.க கட்சி அரைவேக்காட்டுத் தலைவர்கள் என்ன செய்கி றார்கள்? எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு தெரிவிப்பது. ஒன்றிய நிதியமைச்சரே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அதேபோன்று இன்னொரு ஒன்றிய இணையமைச்சர், வேலை கொடு, வேலை கொடு என்று நம்முடைய இளைஞர்கள் கேட்டால், ‘வேல்’ ஒன்றை அவர்களு டைய கைகளில் கொடுத்தார்.
தேர்தல்களில் தோற்றவர் ஒன்றிய அமைச்சர்!
ஜனநாயகத்தில் பூத்த மலர்கள் அவர்கள்(?). தேர்தலில் வெற்றி பெற்று அவர்கள் அமைச்சர்களாக மாட்டார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றார்; அதற்கு முன்பு சட்டமன்றத் தேர்தலில் ஒருமுறை தோற்றார். பிறகு ஒன்றிய அமைச்சராக வந்து, தி.மு.க.வை குறை சொல்வார்.
இதுதான் அவர்களுடைய ஜனநாயகத்தினுடைய பார்வை – அரசமைப்புச் சட்டத்தை மதிக்கின்ற நிலை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஒன்றிய அமைச்சர்களாக உள்ளவர்கள் கேட்கவேண்டாமா? ‘‘எங்கள் மாநிலம் தமிழ்நாடு ஆயிற்றே – நாங்கள் எப்படி அங்கே செல்லுவோம்; பட்ஜெட்டில் தமிழ்நாடு என்றே பெயர்கூட இல்லையே!” என்று.
தமிழ்நாட்டை கொதிநிலைக்குக் கொண்டுவர நினைக்கிறார்கள்!
அடுத்தகட்டத்தை நாம் சிந்திக்கவேண்டும். தமிழ்நாடு ஒன்று சேரவேண்டும். அறப்போராட்டத்தை மேற்கொள்ளவேண்டும். எங்களுடைய தமிழ்நாட்டை கொதிநிலைக்குக் கொண்டு வந்து வைத்திருக்கிறீர்கள்.
அமைதிப் பூங்காவாக இருக்கின்ற தமிழ்நாட்டை ஒருபோதும் நீங்கள் மாற்ற நினைக்கக் கூடாது. அதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
திராவிட முன்னேற்றக் கழகம்தான் வழிகாட்டியாக இருக்கிறது
தமிழ்நாட்டில் உள்ள நாங்கள் பிரிவினை கேட்க வில்லை; இந்தியாவிற்குள்தான் தமிழ்நாடு இருக்கிறது. அதனால்தான், இந்தியா கூட்டணி என்று தெளிவாக உருவாகியிருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம்தான் அதற்கு வழிகாட்டியாக இருக்கிறது.
அந்த இந்தியா கூட்டணியில், பிரிவினைவாதத்தை நடைமுறையில் காட்டியிருப்பது இன்றைய ஒன்றிய பட்ஜெட். அதிலொன்றும் சந்தேகமேயில்லை.
எனவேதான், நீங்கள் பிரிவினைவாதிகள்; நாங்கள் இந்தியாவை, ஒன்றுபட்ட இந்தியாவை, சமதர்ம இந்தியாவை உருவாக்க நினைக்கின்றோம்.
நீர் ஆதாரமாக இருந்தாலும், நிதிப் பங்கீடாக இருந்தாலும், போராடுவோம், வெற்றி பெறுவோம்!
நீங்கள் குலதர்மத்தை முன்னால் வைத்து, மனு தர்மத்தை முன்னால் வைத்து, அனைவருக்கும் அனைத்தும் என்கிற தத்துவத்தைத் தவிர்த்து, இன்னாருக்கு இதுதான் என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.
எனவே, நீர் ஆதாரமாக இருந்தாலும், நிதிப் பங்கீ டாக இருந்தாலும், போராடுவோம், வெற்றி பெறுவோம்!
மீண்டும் சொல்கிறோம், நாங்கள் உங்களிடம் பிச்சைக் கேட்கவில்லை; நாங்கள் உங்களின் அடிமையல்ல.
எங்களுடைய உரிமை அது. எங்கள் பணம், எங்களுடைய வரிப் பணம் – தமிழ்நாட்டு மக்களு டைய வரிப் பணம். அந்தப் பணத்தைத்தான் நீங்கள் மற்றவர்களுக்கு வாரிக் கொடுக்கிறீர்கள்.
வாக்கு அளித்தவர்களுக்கும் முதலமைச்சர் – வாக்கு அளிக்காதவர்களுக்கும் முதலமைச்சர் அவர்தான்!
எனவே, அதற்கான திட்டத்தை நம்முடைய முதலமைச்சர் அவர்கள், இந்தக் கூட்டணியினுடைய தலைவர் என்ற முறையில் அல்ல – தமிழ்நாட்டின் முதலமைச்சர் – வாக்கு அளித்தவர்களுக்கும் முதல மைச்சர் – வாக்கு அளிக்காதவர்களுக்கும் முதலமைச்சர் அவர்தான்.
முதலமைச்சராக அவர் பொறுப்பேற்றவுடன், ‘‘எங்களுக்கு வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து நன்மையை செய்வேன்” என்று சொன்னார்.
அதுதான் இந்த அணியினுடைய வெற்றி!
ஆகவே, தேர்தலோடு வன்மும் முடிந்து போயிற்று. நாம் எல்லோரும் சகோதரர்கள்.
தமிழ்நாட்டைக் காட்டிக் கொடுப்பவர்கள் யார் என்பதை அடையாளம் காணுங்கள்!
எனவே, தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்க முன்வருவோம். இளைஞர்களே, நீங்கள் தமிழ்நாட்டைக் காட்டிக் கொடுப்பவர்கள் யார் என்பதை அடையாளம் காணுங்கள்.
தமிழ்நாட்டின் உரிமைக் குரல் எங்கே இருக்கிறது என்று அடையாளம் காணுங்கள்.
‘‘உறவுக்குக் கை கொடுப்போம் – உரிமைக்குக் குரல் கொடுப்போம்!’’
கலைஞர் அவர்கள் அழகாக ஓர் அற்புதமான வாசகத்தை வழிகாட்டியிருக்கிறார், தந்தை பெரியார் வழியில்!
‘‘உறவுக்குக் கை கொடுப்போம் –
ஆனால், உரிமைக்குக் குரல் கொடுப்போம்!” என்று.
நாம் உறவை முறித்துக் கொள்ளமாட்டோம்; அதேநேரத்தில், உரிமைக்குக் குரல் கொடுப்போம்!
அனைவரும் ஒன்று சேர்வோம்; போராடுவோம் – வெற்றி பெறுவோம்!
அந்த உரிமை நீர் உரிமையாக இருக்கலாம்; நிதி உரிமையாக இருக்கலாம். அல்லது மாநில உரிமை களாக இருக்கலாம். எந்த உரிமைகளாக இருந்தாலும், அந்த உரிமைகளுக்காக கட்சி இல்லை, ஜாதி இல்லை, மதம் இல்லை – அனைவரும் ஒன்று சேர்வோம்; போராடுவோம் – வெற்றி பெறுவோம், தயாராகுங்கள்!
தமிழ்நாட்டிற்கு தனியே பட்ஜெட் போடவேண்டிய அவசியம் வரும்!
இது ஒரு ஒத்திகை – இனிமேல் தமிழ்நாடு முழுக்க நமக்குரிய நிதி ஆதாரங்கள் வருகின்ற வரையில், வரும் – இல்லையானால், இதை இப்படியே நீங்கள் நீட்டிக்கொண்டு போனால், தனியே பட்ஜெட் போடவேண்டிய அவசியம் தமிழ்நாட்டிற்கு வந்தே தீரும் – அந்த இடத்திற்கு எங்களை நெருக்கி நெருக்கித் தள்ளுகிறீர்கள்.
முடிவு செய்வது உங்கள் கைகளில்!
பந்து எங்களிடத்தில் இல்லை. உங்கள் தோட்டத்தில் இருக்கிறது. பந்தை எப்படி அடிப்பது என்பது உங்களுடைய முடிவு.
அடியுங்கள், சந்திப்போம்! சந்திப்போம்!! சந்திப்போம்!!! நன்றி, வணக்கம்!
இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கண்டன உரையாற்றினார்.