தகைசால் தமிழர் யார்? என்ற தலைப்பில் ‘துக்ளக்‘ (23.8.2023 – பக்கம் 11) திருவாளர் குருமூர்த்தி அய்யர் பேனா பிடித்திருக்கிறார்.
“தகைசால்” என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்பதற்கு அகராதிகளை எல்லாம் அலசிப் பார்த்திருக்கிறார்.
பொதுவுடைமை இயக்க மூத்தத் தோழர்கள் சங்கரய்யா, நல்லகண்ணு ஆகியோருக்கு தகைசால் தமிழர் விருது அளிக்கப்பட்டபோது – பதறாத பார்ப்பனர்கள் திராவிடர் கழகத் தலைவருக்கு இந்த விருது அளிக்கப்படும்போது, அடிவயிற்றில் அய்யன்மார்கள் அம்மிக் கல்லால் அடித்துக் கொண்டு அலறுவது ஏன்?
எந்த வகையிலும் தோழர்கள் சங்கரய்யா அவர்களோ, நல்லகண்ணு அவர்களோ பாசிச பார்ப்பன மரங்களுக்குத் தண்ணீர் ஊற்றி வளர்த்தவர்கள் அல்லர் – மாறாக அதன் வேர்களுக்கு வேட்டு வைத்தவர்கள்தான்! ஆசிரியருக்கு விருது அளித்தபோது அகமகிழும் பெருமக்கள் அவர்கள்!
ஆனாலும், ஆசிரியர் வீரமணி அவர்களுக்கு அந்த விருது அளிக்கப்படும்போது ஆந்தைகளாக மாறி அலறுகிறார்கள் – அனல் தெறிக்க எழுதுகிறார்கள் -ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார்களோ!
யாருக்கு விருது அளிப்பது என்று முடிவு செய்வது – அரசு அமைத்த ஆலோசனைக் குழு தீர்மானிப்பதாகும். திராவிடர் கழகத் தலைவருக்கு விருது அளிக்கலாமா – கூடாதா என்று குருமூர்த்திகளிடம் கேட்டுதான் முடிவு செய்ய வேண்டுமா?
தீண்டாமை க்ஷேமகரமானது என்ற மனித குல விரோதியை மகா பெரியவாள் என்று அழைக்கும் ஆசாமிகள். அந்தத் தீண்டாமையையும் அதன் ஆணிவேரையும் அழிக்கும் தந்தை பெரியாரின் கொள்கைப் போர்வாள் மானமிகு வீரமணி அவர்களுக்கு விருது அளித்தால் ஆனந்த பைரவியா பாடுவார்கள்?
தகைசால் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள கி.வீரமணி பரிசுப் பணம் பத்து லட்ச ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவார் என்று நினைக்கிறீர்களா? என்று பார்ப்பனர்களுக்கே உரித்தான “குசும்பு”த்தனத்தின் – சிண்டு முடியும் தனத்தின் குடுமி குதித்துக் குதித்துக் கூத்தாடுகிறது.
திராவிடர் கழகத் தலைவருக்கு இதுவரை எத்தனையோ விருதுகளை – நன்கொடைகளை – அவர்தம் தொண்டறம் கருதி அளித்து மகிழ்ந்திருக்கிறார்கள்.
‘எடைக்கு எடை’ தங்கம் அளித்துள்ளார்கள் – ‘எடைக்கு எடை’ வெள்ளி வழங்கியுள்ளார்கள். ‘எடைக்கு எடை’ ரூபாய்கள் – சொல்லி மாளாது. எடைக்கு எடை பல்வேறு பொருள்களையும் கொடுத்து மகிழ்ந்துள்ளனர். அவற்றை எல்லாம் தன் வீட்டுக்கா எடுத்துச் சென்றார்?
அவை எல்லாம் அறக்கட்டளையாக்கப்பட்டு கல்விப் பணி, சமூகநீதிப்பணி, மருத்துவப் பணி, பகுத்தறிவுப் பணி, ஜாதி ஒழிப்புப் பணி, குழந்தைகள் இல்லம், முதியோர் இல்லம், மகளிர் உரிமை உள்ளிட்ட தொண்டறப் பணிகளுக்குத் தூக்கிக் கொடுத்த தூய்மையின் சிகரம் ஆசிரியர் வீரமணி என்பதை அற்பர்கள் அறிய மாட்டார்கள் – அறிந்திருந்தாலும் திரிபுவாதம் செய்வதுதான் இந்தத் திரிநூலார்களின் திட்டமிட்ட விஷமப் பிரச்சாரம்!
நன்கொடைகள் அளிக்கப்பட்டது பற்றி – ஈ.வெ.ரா.வை நூல் பிடித்த மாதிரி பின்பற்றுவார் என்று கேலி செய்கிறது ‘துக்ளக்‘.
தந்தை பெரியாருக்குக் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு காசும் யாருக்குப் போய்ச் சேர்ந்தது? தன் சொந்தப் பணத்தில் பிரச்சாரகர்களை அமர்த்திப் பாடுபட்டவர் தந்தை பெரியார். சொந்தப் பணம், மக்கள் கொடுத்த கொடைகள் அனைத்தையும் அறக்கட்டளையாக்கி நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தவர் அறிவு ஆசான் தந்தை பெரியார்.
ஆனால், குருமூர்த்தி கூட்டம் மகாபெரியவாள் என்று பீற்றிக் கொள்ளும் திரு. சந்திரசேகரேந்திர சரஸ்வதி, தன்னிடம் குவியும் பணத்தை எல்லாம் அறக்கட்டளை யாக்கினார்தான்.
எல்லாம் பார்ப்பனர்களுக்கான அறக்கட்டளைகள்தானே! மறுக்க முடியுமா?
சமஸ்கிருதக் கல்லூரியைத்தானே உருவாக்கினார். அதனால் பலன் அடைபவர்கள் யார்?
ரிட்டையரான பிராமணர்கள், பார்ப்பன மாணவர் களுக்குக் கல்வியில் உதவிட வேண்டும் என்று கசிந்துருகுபவர் முற்றும் “துறந்த” முனிவரா?
“சில வகுப்பாருக்கு உரியதையும் புறக்கணித்து சர்க்காரே பிற்பட்ட வகுப்பாருக்கு அதிகப்படி சலுகை காட்டுவதால்தான் இந்த விஷயத்தில் மட்டும் நான் கொஞ்சம் கம்யூனல் பேஸிஸில் பேசியாக வேண்டியிருக்கிறது” என்கிறாரே.
கம்யூனல்வாதி என்று தன்னைத் தானே பட்டம் சூட்டிக் கொள்ளும் பேர்வழிதான் ஜெகத்குருவாம்! பார்ப்பனர்கள் எவ்வளவு சாமர்த்தியத்தோடு தூக்கிப் பிடிக்கிறார்கள் பார்த்தேளா? பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அதிகப்படி சலுகைக் காட்டுகிறார்களாம்! – சொல்லுபவர் சங்கராச் சாரியார் – பிற்படுத்தப்பட்ட மக்கள் புரிந்து கொள்வார்களாக!
பார்ப்பனரல்லாதார் காணிக்கையாகக் கொட்டிக் கொடுக்கும் பணமெல்லாம் காஞ்சி சங்கர மட பிதாமகர் ஸ்ரீலஸ்ரீ திருவாளர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்னும் சங்கராச்சாரியார் யாருக்குப் பயன்படுத்துகிறார்? என்ன காரியங்களுக்குப் பயன்படுத்துகிறார்?
இதோ ஆதாரத்தோடு அறைகிறோம்.
1. ஷஷ்டியப்த பூர்த்தி டிரஸ்ட்
இது எதற்காகத் தெரியுமா? வேத பாஷ்யங்களைப் படிப்பதற்கு.
2. கலவை பிருந்தாவன் டிரஸ்ட்
இது எதற்காகத் தெரியுமா? வேத பாடசாலைகளை நிறுவுவதற்கு.
3. வேத ரக்ஷ்ண நிதி டிரஸ்ட்
இது எதற்காகத் தெரியுமா? இந்தியா முழுவதிலும் வேத பாடசாலைகளை நடத்துவதற்கும், வேத பண்டிதர்களைக் கவுரவிப்பதற்கும்.
4. கன்னிகாதான டிரஸ்ட்
இது எதற்குத் தெரியுமா?
“பையன்களுக்கு எப்படி பூணூல் போடுவது உபநயனமோ, இது போல பெண்களுக்கு ஏழு வயதில் திருமணம் செய்து வைக்க வேண்டும்.”
“ஏழெட்டு வயதில் கல்யாணம் பண்ணி வைக்க முடியா விட்டாலும், சட்டம் அனுமதிக்கிற வயசு வந்தவுடனேயாவது கல்யாணத்தைப் பண்ணிவிட வேண்டும் என்பதற்காக.
“கன்னிகாதான டிரஸ்ட்” என்ற ஒன்றை ஆரம்பித் திருக்கிறோம். ருதுவாகாத ஏழைக் குழந்தைகளுக்குப் பணம் இல்லாததால் கல்யாணம் நடக்கவில்லை என்று இருக்கக் கூடாது என்ற உத்தேசத்தோடு டிரஸ்ட்டிலிருந்து இப்படிப்பட்ட வசதியில்லாதவர்களுக்கு பரம சிக்கனமாக செலவுக்குப் பணம் கொடுத்து கல்யாணம் பண்ணி வைக்கிறோம். இதற்கு உபகாரம் பண்ணுவதற்கு பெரிய புண்ணியம் நம்முடைய தர்மத்துக்கு ஸேவை செய்கிற பாக்கியத்தை இது தரும்.
மற்ற ஜாதிகள் “பிராம்மணர்களைப் போல இத்தனை கிரிசை கெட்டுப் போவதில்லை. அந்த ஜாதிகளில் இத்தனை வரதக்ஷனைக் கொடுமையோ, இத்தனை பெருவாரியாக காலேஜ் படிப்பு, உத்தியோகம் என்பது போய் ஸ்வேச்சை யாகத் திரியும்படி “தண்ணி தெளித்து” விட்டிருக்கிற நிலைமையோ இல்லை. ஆதலால் ஏழை “பிராம்மண”ப் பெண்களை உத்தேசித்தே இந்த டிரஸ்ட் ஏற்படுத்தப் பட்டிருக்கிறது.
(காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி யின் – “தெய்வத்தின் குரல்” இரண்டாம் பாகம் – 903ஆம் பக்கம்)
அக்கிரகாரப் பெண்கள் படிப்பதை ஏற்காதவர் போல பாவனை காட்டி, கம்யூனல் ஜி.ஓ.வுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதைக் கவனிக்கவும்.
பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது பார்த்தீர்களா?
பார்ப்பனரல்லாதார் கொட்டிக் கொடுக்கும் காணிக்கைகள் எல்லாம் பச்சையாகப் பார்ப்பனர்களின் வயிற்றில் அறுத்துக் கட்டத்தானே பயன்படுகிறது.
‘துக்ளக்‘ கூட்டம் தூக்கிப் பிடிக்கும் இந்த லோகக் குருக்கள் யார்?
மடத்துக்கு வந்த எழுத்தாளர் அனுராதா ரமணன் என்பவரைக் கையைப் பிடித்து இழுத்தவர்தான் லோகக் குருவா?
“லோகக் குருவின்” கேவலமான நடத்தைக்கு முட்டுக் கொடுத்த …. வேலை செய்தவர்கள் எல்லாம் பேனா பிடிக்கலாமா?
பொதுவாழ்வில் புடம்போட்ட தொண்டறத் தலைவர்கள் மீது சேற்றை வாரி இறைக்கும் இந்த இழி தகைகளை நம் மக்கள் அடையாளம் காண வேண்டாமா?
வீரமணி நடத்திய திருமணம் ஒன்றில் தாலி எடுத்துக் கொடுத்துவிட்டாராம்.
“போச்சு – போச்சு – கொள்கைப் போச்சு!” என்று “தாம் தூம்“என்று குதிக்கிறாரே – குருமூர்த்திவா(ல்)ள்.
பார்ப்பனப் புரோகிதர்களை அழைத்து சமஸ்கிருத மந்திரங்களை ஓதி – இந்தப் பெண்ணானவள் முதலில் சோமனுக்கு மனைவி, இரண்டாவதாக கந்தர்வனுக்கு மனைவி, மூன்றாவதாக அக்னிக்கு மனைவி – என்று மணப் பெண்ணை அந்தத் திருமணத்திலேயே விபச்சாரி என்று காசு பறித்து மந்திரங்களை சொல்லி கல்யாணம் நடத்தி வைக்கும் கேவலத்தை வெளிப்படுத்தி, சுயமரியாதைத் திருமணத்தை அறிமுகப்படுத்தி, அரசே சட்டமாக்கிய நிலையைப் கண்டு சிண்டுகள் சினம் கொள்வது புரிகிறதா?
தந்தை பெரியார் காலத்திலும் சரி, தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களின் இந்தக் காலகட்டத்திலும் சரி, தாலி கட்டிய நிகழ்ச்சிகள் நடந்தது உண்டு.
மணமகன் வீட்டாரோ அல்லது மணமகள் வீட்டாரோ சீர்திருத்தத் திருமணத்துக்கு ஒப்புக் கொண்டாலும், தாலி கட்டுவதில் அடம் பிடிக்கும் நிலையில், அதனை அனுமதித்ததுண்டு.
அப்படி கட்டப்பட்ட தாலியை திராவிடர் கழகம் நடத்தும் மாநாடுகளில் அந்த இணையர்களே முன்வந்து தாலியை அகற்றிக் கொண்டது எல்லாம் இந்தப் புரோகிதக் கும்பலுக்குத் தெரியுமா?
அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில் தாலியகற்றும் நிகழ்ச்சி நடந்தபோது – “அத்திரிபாச்சா கொழுக்கட்டை!” என்று மாந்தி மாந்தி இந்தக் கூட்டம் எழுதியது எல்லாம் என்னாயிற்று?
பார்ப்பனர்கள் கூறும் விவாஹம் என்ற சொல்லுக்குத் தூக்கிக் கொண்டு ஓடுதல் என்றுதானே பொருள்! இந்தக் கேவலத்தின் மலத்தில் புழுத்த புழுக்கள் சுயமரியாதைத் திருமணம் பற்றி வாய் திறக்கலாமா?
தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைக் குறித்து பெரியார் சொன்னதை எடுத்துக் காட்டுகிறது ‘துக்ளக்‘! பரவாயில்லை – பெரியார் நூல்களை அப்படியாவது படிக்கிறார்களே!
பணம் கொடுப்பவர்களை மட்டுமா பெரியார் சாடினார்?
பணம் பெற்றுக்கொண்டு வாக்களிப்பவர்களையே, தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டங்களையே, கண்டித்துப் பேசியவர் பெரியாராயிற்றே! அதெல்லாம் ‘துக்ளக்‘ கும்பலுக்குத் தெரியாதா? கோயிலில் பணம் கொட்டிக் கொடுப்பவனுக்கு ஒருவகை தரிசனம். பணமில்லாதவர்கள் பல நாட்கள் காத்திருக்கும் கேவலத்தைப் பற்றி எழுதுமா துக்ளக்?
ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். எதற்கெடுத்தாலும் பார்ப்பன ஊடகங்கள், பாசிச பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கும்பல் ஆசிரியர் வீரமணியை நோக்கி, திராவிடர் கழகத்தை நோக்கிப் பாணம் தொடுப்பது ஏன்?
அதனை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். ‘தகைசால் தமிழர்’ வீரமணி அவர்கள் மிகச் சரியான பாதையிலேயே பயணிக்கிறார் என்பதற்கான நற்சான்று பத்திரமாகவே அவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
சந்யாசியானவன் பணத்தை கையால் தொட்டால் கூட அது மிகப் பெரிய பாவம் என்கிறது சன்யாச ஸ்மிருதி. (அக்னிஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சார்யார் எழுதிய “இந்துமதம் எங்கே போகிறது?” பக்கம் 58)
இந்த நிலையில் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திர சேகரேந்திர சரஸ்வதி பணத்தைத் திரட்டுகிறார். பார்ப்பனர் களுக்கான டிரஸ்டுகளை உருவாக்குகிறாரே – இதுபற்றி குருமூர்த்திகள் என்ன சொல்லுவார்கள்?
மாலைக்குப் பதில் கொடுக்கும் தொகை ஒரு ரூபாயாக இருந்தாலும் அதனை இயக்கத்திற்கு அளிக்கக் கூடியவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி.
90 வயதில் 80 ஆண்டு பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரர். 61 ஆண்டு காலம் ஒரு ஏட்டுக்கு ஆசிரியராக இருக்கக் கூடிய சாதனையாளர்.
உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடி 50க்கும் மேற்பட்ட முறையில் கைதானவர் – சிறை சென்றவர். ஆனால், கொலைக் குற்றம் சாட்டப்பட்டு கம்பி எண் ணியவர்கள்தான் குருமூர்த்திகளுக்குக் குருநாதர்.
திராவிட இயக்கத்தில் இன்றைய மூத்த தலைவர். “தகைசால் தமிழர் விருது” இவருக்கன்றி வேறு யாருக்குக் கொடுக்க முடியும்?
நன்றாக வயிறு எரியட்டும் நரிகளுக்கு – அங்கேதான் நம் வெற்றியின் கொடி வானில் பறக்கிறது என்று பொருள்!
வாழ்க பெரியார்! வெல்க திராவிடம்!
அய்யா பாதையில்தான்!
தமிழ்நாடு அரசால் – அதன் ஒப்பற்ற முதலமைச்சரால் “தகைசால் தமிழர்” விருது அளித்ததோடு, அளிக்கப்பட்ட ரூபாய் 10 லட்சத்தை பெரியார் உலகத்துக்கு அளித்து விட்டாரே ஆசிரியர் பெருந்தகை!
அந்த வகையில் தந்தை பெரியார் பாதையில் நூலிழைப் பிறழாமல் தான் அவர் சீடர் பீடுநடை போடுகிறார் – நினைவிருக்கட்டும்.
அய்யோ பாவம் அக்கிரகார குடுமிகள் – குருமூர்த்திகள்!
செருப்புக்குப் பூஜை
காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை கிராமத்தில் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி பெயரால் மணிமண்டபம் ரூபாய் மூன்று கோடி செலவில் 151 தூண்கள், முழுக்க முழுக்க கிரானைட் கற்கள் அவரது செருப்பு வைத்து பூஜிக்கப்படும்.
(‘ஆனந்த விகடன்’, ஜூன் 1997)
இந்த வெட்கம் கெட்டவர்கள்தான் தந்தை பெரியார் பற்றியும் தமிழர் தலைவர் ஆசிரியர் பற்றியும் ஊத்தை வாயால் உளறுகிறார்கள்.