சாத்திர சம்பிரதாயங்களை பிள்ளை விளையாட்டு என்று சொன்னவர் வள்ளலார்!
பெரியார் – அம்பேத்கர் – காமராசர் – திராவிடர் இயக்கம்தான்
நாமெல்லாம் படித்து முன்னேறியதற்குக் காரணம்!
நெய்வேலி, ஜூலை 23 சாத்திர சம்பிரதாயங்களை பிள்ளை விளையாட்டு என்று சொன்னவர் வள்ளலார்! பெரியார் – அம்பேத்கர் – காமராசர் – திராவிடர் இயக்கம்தான் நாமெல்லாம் படித்து முன்னேறியதற்குக் காரணம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
மணமக்கள் வே.பா.அமுதினி – பா.பிரதீப்
கடந்த 26.6.2024 அன்று காலை நெய்வேலியில், சென்னை, சோழிங்கநல்லூர் மாவட்ட கழகத் தலைவர் மடிப்பாக்கம் வே.பாண்டு – பா.இராதா இணையரின் மகள் வே.பா.அமுதினிக்கும், நெய்வேலி நகரம் மு.பாலசுப்பிரமணியன் – கோ.செல்வி இணையரின் மகன் பா.பிரதீப் அவர்களுக்கும் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நடத்தி வைத்து வாழ்த்துரையாற்றினார்.
அவரது வாழ்த்துரை வருமாறு:
மிகுந்த எழுச்சியோடும், மகிழ்ச்சியோடும் நடை பெறக்கூடிய அன்புச் செல்வங்கள் கடலூர் மாவட்டம் நெய்வேலி நகரம் ஓய்வு பெற்ற கூடுதல் தலைமைப் பொறியாளர் அய்யா மு.பாலசுப்பிரமணியன் – செல்வி ஆகியோருடைய செல்வன் பா.பிரதீப் அவர்களுக்கும், வே.பாண்டு – இராதா ஆகியோருடைய செல்வி அமுதினி அவர்களுக்கும் நடைபெறக்கூடிய இந்த சிறப்பான வாழ்க்கை இணையேற்பு விழா நிகழ்ச்சிக்கு வருகை புரிந்துள்ள அனைத்து இயக்கங்களைச் சார்ந்த பெருமக்களே, அதிகாரிகளான பெருமக்களே, பணி ஓய்வு பெற்ற தோழர்களே மற்றும் வங்கி அதிகாரிகளே, நண்பர்களே, சான்றோர்களே, கழகப் பொறுப்பாளர்களே, தோழர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாண்டு அவர்களின் குடும்பமே கொள்கையில் ஊறிய ஒரு குடும்பமாகும்!
மணவிழா செல்வங்கள் அமுதினி- பிரதீப் ஆகி யோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவாக இங்கே நடைபெற்றாலும், இம்மணவிழாவில் நான் கலந்து கொள்கின்ற நேரத்தில், தோழர் பாண்டுரங்கன் அவர்கள், நீண்டகாலமாக நம் இயக்கத்தில் இருப்பவர்; அவருடைய குடும்பமே இந்தக் கொள்கையில் ஊறிய ஒரு குடும்பமாகும்.
அவர் வங்கிப் பணியில் இருந்த காலத்திலிருந்து, அவருடைய சகோதரரானாலும், மற்றவர்களானாலும் எல்லோருமே மிகச் சிறப்பான முறையில் படித்தவர்கள், நல்ல நிலைமைக்குத் தங்களை ஆளாக்கிக் கொண்ட வர்கள் என்று சொன்னால், அதற்கு அடித்தளம் தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் போன்ற மிக முக்கியமான வழிகாட்டிகளைக் கொண்டதினால்தான்.
அந்த வகையில், நம்முடைய பாண்டு அவர்கள், இப்பொழுது சென்னை சோழிங்கநல்லூர் மாவட்ட கழகத் தலைவர். அவருடைய இல்லத் திருமணங்களை எல்லாம் நான்தான் நடத்தி வைத்தேன்.
அவருடைய சகோதரிகள், குழந்தைகளுடன் வந்து என்னுடன் ஒளிப்படம் எடுத்துக்கொண்டனர். அப்பொழுது நம்முடைய பன்னீர்செல்வம் அவர்கள், ‘‘அந்தக் குழந்தையைக் காட்டி, இந்தக் குழந்தைக்கும் ஆசிரியர் அவர்கள்தான் திருமணத்தை நடத்தி வைப்பார்” என்று சொன்னார்.
மற்றவர்களுக்குக் கஷ்டத்தைக் கொடுக்காமல் இருக்கவேண்டும்!
அவ்வளவு நாள்கள் நான் இருப்பதைப்பற்றி கவலையில்லை. இருக்கும்வரை மற்றவர்களுக்குக் கஷ்டத்தைக் கொடுக்காமல் இருக்கவேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியம்.
ஆகவே, நீண்ட நாள் வாழுகிறோமா என்பது முக்கியமல்ல; அதற்காகவே அவர் சொன்னார் என்று நான் எடுத்துக்கொள்ளவில்லை. மாறாக, இந்தக் கொள்கை ஆயிரங்காலத்துப் பயிர். அந்தக் குழந்தை வளர்ந்த பிறகும், சுயமரியாதை மண முறைதான் இருக்கும்; இன்னும் வளர்ச்சி அடைந்திருக்கும். இந்தக் கொள்கை மாறாது என்பதுதான் அவர் சொன்னதினுடைய பொருள்.
அந்த வகையில், பாண்டு அவர்களின் குடும்பம் ஓர் அற்புதமான குடும்பமாகும். நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம் என்று சொன்னார் புரட்சிக்கவிஞர் அவர்கள்.
அதுபோன்று, இரண்டு நல்ல குடும்பங்கள் இணை கின்றன. இம்மணவிழாவினை நான் நடத்தி வைப்பதில், உறவோடு, மகிழ்ச்சியோடு, நல்ல உணர்வோடு கலந்துகொள்ளக்கூடிய வாய்ப்பை இன்றைக்கு நான் பெற்றிருக்கின்றேன்.
எங்களுக்கு ரத்த உறவைவிட, கொள்கை உறவுகள்தான் மிகவும் முக்கியம்!
இயக்கத் தோழர்கள் எல்லோரும் எனக்குக் குடும்ப உறவுகள், கொள்கை உறவுகள்.
எங்களுக்கு ரத்த உறவைவிட, கொள்கை உறவு கள்தான் மிகவும் முக்கியம். அந்த உணர்வோடு நாங்கள் இருக்கக் கூடியவர்கள்.
எங்களுக்கு, யார் என்ன ஜாதி? என்ன மதம்? என்பதைப் பற்றியெல்லாம் கவலையில்லை.
இன்றைக்கு எல்லா கட்சிக்காரர்களும்
கருப்புச் சட்டையை அணிகிறார்கள்!
நாங்கள் எல்லோரும் கருப்புச் சட்டை அணிந்தி ருக்கின்றோம். ஆனால், இன்றைக்குக் கருப்புச் சட்டை அணிந்திருக்கின்றோம் என்று சொல்வதுகூட, மிகவும் எச்சரிக்கையாக சொல்லவேண்டி இருக்கிறது.
ஏனென்றால், கருப்புச் சட்டையை ஒரு காலத்தில் திராவிடர் கழகத் தோழர்கள், பெரியார் தொண்டர்கள் மட்டும்தான் அணிவார்கள். ஆனால், இன்றைக்கு எல்லா கட்சிக்காரர்களும் கருப்புச் சட்டையை அணிகிறார்கள்.
நியாயம் வேண்டும், நீதி வேண்டும் என்று போராட்டக் களத்திற்கு வருகின்ற அத்துணைக் கட்சித் தலைவர்களும், இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களும் கருப்புச் சட்டையை அணிகிறார்கள்.
நாங்கள் மட்டும்தான் நிரந்தரமாகக் கருப்புச் சட்டை அணிகிறவர்கள். அவர்கள் எல்லாம் தற்காலிகமாக கருப்புச் சட்டை அணிபவர்கள்.
ஆகவே, நான் நிரந்தரக் கருப்புச் சட்டைக்காரர்களைச் சொல்கிறேன்.
தந்தை பெரியாருடைய இயக்கம் என்ன செய்தது? என்று கேட்டால், இதோ மணமக்கள் இங்கே மகிழ்ச்சியாக அமர்ந்திருக்கின்றார்களே, அதைப் பார்த்தாலே அந்தக் கேள்விக்கான விடை தெரியும்.
என்றைக்கும் நிரந்தரமாக அவர்களுக்குக் கிடைக்கவேண்டும்!
இங்கே மணமக்கள் மட்டுமல்ல, சம்பந்திகள் மகிழ்ச்சி யாக இருக்கிறார்கள்; நாம் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கின்றோம். இந்த மகிழ்ச்சி என்றைக்கும் நிரந்தரமாக அவர்களுக்குக் கிடைக்கவேண்டும் என்பதுதான் நம்முடைய ஆசை, நம்முடைய வாழ்த்துகள்!
பாண்டு அவர்களின் உடன் பிறந்தவர்கள் பன்னீர்செல்வம் பி.காம்., பி.எட்., அதேபோன்று விஜய லட்சுமி எம்.ஏ., எழிலரசி எம்.ஏ., பி.எல்., செந்தளிர் பாரதி எம்.ஏ.,
இந்தக் குடும்பத்திற்கு ஒரு நல்ல வாய்ப்பு என்று சொன்னால், இவர்கள் பெருமைப்பற்றி பேசுவது முக்கி யமல்ல; இப்பொழுது இக் குடும்பத்திற்கு மணமகனாக வரக்கூடிய பிரதீப் அவர்களுடைய தந்தை அவர்கள், அரசுப் பணியில் கூடுதல் தலைமைப் பொறியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். மணமகனுடைய தாயார் அவர்கள் . என்.எல்.சி.,யில் அதிகாரியாக பணிபுரிகிறார்.
ஒரு காலத்தில் நாமெல்லாம் படிக்கக்கூடாத ஜாதி என்று ஒதுக்கி வைத்திருந்தார்கள்!
ஒரு காலத்தில் நாமெல்லாம் இதை நினைத்துப் பார்க்க முடியுமா? இந்தக் குடும்பத்தில் பார்த்தீர்க ளேயானால், அழைப்பிதழைப் பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கெல்லாம் தெரியும் – எவ்வளவு பேர் படித்திருக்கிறார்கள் என்று.
இவ்வளவு படித்திருக்கின்றார்கள் என்றால், ஒரு நூறாண்டுக்கு முன்பு, தயவு செய்து எண்ணிப்பாருங்கள்.
பெரியார் என்ன செய்தார்?
கருப்புச் சட்டை என்ன செய்தது?
திராவிடர் கழகம் என்ன செய்தது?
காமராஜர் என்ன செய்தார்?
திராவிட இயக்கம் என்ன செய்தது?
நூறாண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட நீதிக்கட்சி –
ஒரு காலத்தில் நாமெல்லாம் படிக்கக்கூடாத ஜாதி என்று ஒதுக்கி வைத்திருந்தார்கள். அதே போன்று சரி பகுதியாக இருக்கக்கூடிய பெண்கள். இம்மணவிழாவிற்கும் ஏராளமான மகளிர் வந்திருக்கிறார்கள்.
நம்முடைய பாட்டிமார்கள் யாராவது படித்தி ருக்கிறார்களா? என்றால், கிடையாது.
நம்முடைய தாத்தாக்கள் யாராவது படித்தி ருக்கிறார்களா? என்றால், கிடையாது.
நாம்தான், நம்முடைய தலைமுறையில்தான் படித்திருக்கின்றோம்.
பெரியார்- அம்பேத்கர் – காமராஜர் –
திராவிட இயக்கம்தான் காரணம்!
இதற்கெல்லாம் யார் காரணம்?
பெரியார் காரணம்!
அம்பேத்கர் காரணம்!
காமராஜர் காரணம்
திராவிட இயக்கம் காரணம்!
நான் கடலூர்க்காரன். முதல் தலைமுறையாக கல்லூரிக்குச் சென்றவன் நான்தான். அதற்கு முன்பு வரை எங்களுடைய குடும்பத்தில் எஸ்.எஸ்.எல்.சி., கூட படித்ததில்லை; பத்தாவது கூட படித்தவர்கள் கிடையாது.
இன்றைக்கு அதுபோன்ற நிலைமை கிடையாது. இம்மணவிழா அழைப்பிதழைப் பார்த்தீர்களேயானால், ஒவ்வொருவரும் வழக்குரைஞர்களாக, மருத்துவர்களாக, பொறியாளர்களாக இருக்கிறார்கள்.
நமக்கு ஆற்றல் இருக்கிறதா, இல்லையா?
அப்படியென்றால், நமக்கு ஆற்றல் இருக்கிறதா, இல்லையா?
நமக்கு வாய்ப்புக் கொடுத்தவுடன், படிக்கின்ற திறமை இருக்கிறதா, இல்லையா?
நம்முடைய பிள்ளைகள் எல்லாம் இப்படி சிறப்பான முறையில் படித்து நல்ல நிலையில் இருக்கிறார்கள் அல்லவா!
அது கூடாது என்பதற்காகத்தானே நீட் தேர்வைக் கொண்டு வருகிறார்கள். நெக்ஸ்ட் தேர்வு என்று சொல்கிறார்கள். க்யூட் தேர்வு என்று சொல்லுகிறார்கள்.
அவர்கள் கொண்டு வந்த நீட் தேர்வில், வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம், ஊழல் என்பதெல்லாம் வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
இவ்வளவுக் கொடுமைகள் இருந்தாலும், நாங்கள் நீட் தேர்வை நடத்தியே தீருவோம் என்கிறார்கள்.
இதையெல்லாம் கேட்பதற்கு, இந்த இயக்கத்தை விட்டால், வேறு யார் நாதி என்பதை நன்றாக எண்ணிப்பாருங்கள் தோழர்களே!
பெரியார் இல்லாவிட்டால், நாமெல்லாம் படிக்கின்ற தைரியத்தைப் பெற்றிருக்கமாட்டோம்!
ஆகவே, பாண்டு அவர்களின் குடும்பம், இந்தக் கொள்கையால் லாபமடைந்திருக்கின்ற குடும்பமாகும். பெரியார் இல்லாவிட்டால், நாமெல்லாம் படிக்கின்ற தைரியத்தைப் பெற்றிருக்கமாட்டோம்.
பாண்டு அவர்கள் பெரியார் திடலுக்கு வந்தால், ஒரு விஷயம் விடாமல் எல்லாவற்றையும் என்னிடம் சொல்லுவார். அவர் பணியில் இருக்கும்பொழுதும் சரி, நாடகத்தில் நடிப்பவர் அவர்.
இறையனார் காலத்திலிருந்து எனக்கு அறிமுக மானவர் பாண்டு அவர்கள். இப்பொழுது அவர் சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவராக இருக்கிறார்.
அப்படிப்பட்ட நிலையில், அவருடைய மகளுக்குத் திருமண ஏற்பாடுகளைச் செய்தார். மணமகனின் குடும்பத்தார் வள்ளலார் முறைப்படி திருமணம் செய்யலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
இல்லை, இல்லை, சுயமரியாதைத் திருமண முறைப்படிதான் மணவிழா நடைபெறும்; ஆசிரியர் தலைமையில்தான் நடைபெறும் என்று பாண்டு குடும்பத்தினர் சொன்னார்களாம்.
வள்ளலாருக்கு சடங்கு, சம்பிரதாயங்களில் நம்பிக்கை கிடையாது
ஒன்றை நான் இங்கே தெளிவுபடுத்துகிறேன், சுயமரியாதைத் திருமண முறையே வள்ளலார் முறை தான், அதிலொன்றும் சந்தேகமேயில்லை.
சுயமரியாதைத் திருமணம் வேறு; வள்ளலார் முறை வேறு என்பது கிடையாது. ஏனென்றால், வள்ளலாருக்கு சடங்கு, சம்பிரதாயங்களில் நம்பிக்கை கிடையாது.
நீதிபதிகளாக இருப்பவர்கள்கூட அதிலும் உயர்ஜாதிக்காரர்களாக அங்கே இருப்பவர்கள் தீர்ப்புகளை மனம்போல எழுதுகிறார்கள்; தவறான கருத்துகளைப் பரப்புகிறார்கள். செல்லரித்துப்போன கருத்துகளை, கைவிடப்படவேண்டிய கருத்துகளையெல்லாம் நியாயப்படுத்துகிறார்கள்.
எச்சிலையில் உருண்டால் மோட்சம் கிடைக்குமாம்!
இல்லையென்றால், எச்சிலையில் உருளுவது நியாயம் என்று தீர்ப்பு கொடுத்திருப்பாரா ஒரு நீதிபதி?
சாப்பிட்டு முடித்த எச்சிலையில் உருண்டால் மோட்சம் கிடைக்கும்; நினைத்தது நடக்கும் என்று சொல்லி எச்சிலையில் உருளுகிறார்கள். அந்த நேரத்தில், அதை உச்சநீதிமன்றம் தடை செய்திருக்கிறது.
ஆனால், இன்னொரு நீதிபதி, அப்படி செய்வது அவரவர் உரிமைதான் என்று சொல்லி, அந்த வழக்கும் விசாரணையில் இருக்கிறது.
அரசமைப்புச் சட்டத்தின்படிகூட இது சுதந்தி ரத்திற்கும், பகுத்தறிவுக்கும் விரோதமான செயலாகும்.
எச்சில் இலையில் உருளுவதுபோன்ற படத்தினை வெளிநாட்டுக்காரர்கள் பார்த்தால், நம் நாட்டைப் பற்றி என்ன நினைப்பார்கள்? இவ்வளவு காட்டுமிராண்டிகளா இந்த நாட்டில் என்று நினைக்கமாட்டார்களா?
இரண்டு பார்ப்பன நீதிபதிகள்
தீர்ப்புக் கொடுத்தனர்!
இன்னொரு தீர்ப்பில் உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் சொல்லுகிறார், ‘‘இந்து திருமணம் என்று சொன்னால், சப்த அடி – ஏழு அடி எடுத்து வைத்திருக்கவேண்டும்” என்று.
சுயமரியாதைத் திருமணம் செல்லுபடியற்றது என்று 50 ஆண்டுகளுக்கு முன்பாக – இரண்டு பார்ப்பன நீதிபதிகள் தீர்ப்புக் கொடுத்தனர்.
1934 ஆம் ஆண்டு தந்தை பெரியார் தலைமையில் சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது. அந்தத் திருமணம் செல்லாது என்று சொன்னார்கள். எப்பொழுது தெரியுமா?
நான்கு குழந்தைகள் பிறந்து வளர்ந்த பிறகு. இரண்டு ஆண் பிள்ளைகள்; இரண்டு பெண் பிள்ளைகள்.
அந்தத் திருமணம் செல்லாது என்று தீர்ப்பளிக்கி றார்கள். ஏனென்றால், சப்த அடிகள் – ஏழு அடி எடுத்து வைக்கவில்லை. ஆகவே, அந்தத் திருமணம் செல்லாது என்று நீதிபதிகள் சொன்னார்கள்.
அதற்குப் பிறகு தந்தை பெரியார் அவர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுயமரியாதைத் திரு மணங்களை நடத்தினார்.
சுயமரியாதைத் திருமணம்: குழந்தைகளுக்கு சட்ட அந்தஸ்து கிடையாது என்று சொன்னார்கள்!
சுயமரியாதைத் திருமண முறையில் நடைபெற்ற இணையர்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு சட்ட அந்தஸ்து கிடையாது என்று சொன்னார்கள். அந்தக் குழந்தை சட்டப்பூர்வமாகப் பிறந்த குழந்தை அல்ல என்று சொன்னார்கள்.
இதையெல்லாம் மாற்றிய பெருமை திராவிட இயக்கத்திற்கு உண்டு. ‘‘மானமும், அறிவும் மக்களுக்குத் தருவதுதான் மனிதருக்கு அழகு‘‘ என்றார் தந்தை பெரியார் அவர்கள்.
பிறகு, அண்ணா அவர்கள் முதலமைச்சராக வந்தவுடன் சுயமரியாதைத் திருமண சட்டத்தைக் கொண்டு வந்தார்.
ஏற்கெனவே நடந்த திருமணங்களும் செல்லும்; நடைபெறும் திருமணங்களும் செல்லும்; இனி நடைபெறப் போகும் திருமணங்களும் செல்லும் என்பதுதான் அந்தச் சட்டம்.
சில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு வந்தது. அந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி எழுதிய தீர்ப்பில், ‘‘ஏழடி எடுத்து வைத்து, திருமணத்தை நடத்தினால்தான், அந்தத் திருமணம் செல்லும்” என்று எழுதுகிறார்.
அம்பேத்கரின் ‘‘இந்து மதத்தின் புதிர்கள்!’’
இந்திய அரசமைப்புச் சட்டத்தை எழுதியவர் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்கள்; உலக அறிவாளர்களில் தலைசிறந்த அறிவாளி. சட்ட நிபுணர், சமஸ்கிருதம் படித்தவர் அவர். அவருடைய உரைகள், ஆய்வுகள் என்பன மிகவும் சிறப்பானவை. இதோ என் கைகளில் இருப்பது ‘‘இந்து மதத்தின் புதிர்கள்” என்ற தலைப்பில், அம்பேத்கருடைய நூல், மகாராட்டிர அரசாங்கமே இந்நூலைத் தொகுத்திருக்கிறது.
அதில் 8 ஆவது பகுதியில், சப்தபதி என்றால் என்ன? ஏழடியை எதற்காக எடுத்து வைக்கிறார்கள்? அந்த சம்பிரதாயத்தைப்பற்றி கேட்டால், யாருக்கும் தெரியாது? ஏழடியை யாரும் கணக்குப் பார்த்து வருவதில்லை. அது ஒரு சடங்குதானே தவிர, வேறொன்றுமில்லை.
வள்ளலார் கண்டித்தார்!
இதைத்தான் வள்ளலார் கண்டித்தார்.
‘‘சாத்திரங்களிலே, சடங்குகளிலே, கோத்திரங்களிலே
அபிமானித் தலைகின்ற உலகீர்” – பிள்ளை விளையாட்டு என்றார் வள்ளலார்.
தீயைச் சுற்றிவலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது, இது சப்தபதி எனப்படுகிறது. இது முடிந்தபின் திரு மணம் முழுமையடைந்து செல்லத்தக்கதாக ஆகிறது. இவைகளெல்லாம் ஆரியர்கள், தேவர்களுக்கு முற்றிலு மாகக் கீழ்ப்பட்டு இருந்ததையும், தேவர்களும், ஆரியர்களும் ஒழுக்கத்தில் தாழ்ந்து போயிருந்ததையும் மிகத் தெளிவாக வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.
இந்துத் திருமணத்தில், சப்தபதிதான் மிக முக்கிய மான அம்சம் என்பதையும், அது இல்லாமல், சட்டப்படி திருமணம் இல்லை என்பதையும் வழக்குரைஞர்கள் அறிவார்கள்.
ஆனால், சப்தபதி ஏன் அப்படி முக்கியமானது என்பதை அறிந்தவர்கள் மிகச் சிலரே! காரணம் தெளி வாகத் தெரிகிறது.
மணப்பெண்ணின்மீது முதல் உரிமை கொண்டிருந்த தேவன், அவனிடம் கொடுக்கப்பட்டதில் திருப்தி அடைந்து, அவளை விட்டுவிடத் தயாராக இருக்கிறானா என்பதை சோதிக்கும் நடைமுறையே அது.
சப்தபதியின் நடந்துசெல்லும் தூரம் வரை, மணமகன், மணப்பெண்ணை தன்னுடன் அழைத்துச் செல்வதை அந்தத் தேவன் அனுமதித்தால், அவன் தனக்குக் கொடுக்கப்பட்ட இழப்பீட்டிலிருந்து திருப்தி அடைந்துவிட்டான் என்று அர்த்தம்; அவனது உரிமை தீர்ந்துவிட்டது என்று அர்த்தம்.
சமஸ்கிருதத்தில் மந்திரம் சொன்னால், நமக்கெல்லாம் புரியாது!
அந்தப் பெண் மற்றொருவரின் மனைவி ஆவதற்குச் சுதந்திரம் பெற்றுவிட்டாள் என்று கருதப்படுகிறது.
சமஸ்கிருதத்தில் மந்திரம் சொன்னால், நமக்கெல்லாம் புரியாது. ‘‘ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர: த்ருத்யோ அகநிஷடே பதி: துரீயஸ்தே மனுஷ்யஜா” என்று புரோகிதர் – அய்யர் சொல்கிறார்.
இந்த மந்திரத்தைத் தமிழில் சொன்னால், யாரும் அனுமதிக்கமாட்டார்கள்.
அந்த மந்திரத்தின் அர்த்தம் என்னவென்றால், ‘‘வைதீக முறையில் திருமணம் செய்யக்கூடிய மணப்பெண்ணைப் பார்த்து, முதலில் இந்தப் பெண்ணானவள் சோமனிடத்தில் மனைவியாக இருந்தாள். இரண்டாவது, கந்தர்வனுக்கு மனை வியாக்கப்பட்டாள். மூன்றாவது, அக்னிக்கு மனைவி யானாள். நான்காவது எனக்கு அவள் மனைவியாகி, நான் பார்த்து உனக்குக் கொடுக்கிறேன்” என்பதுதான்.
இது எதில் இருக்கிறது என்றால், ரிக் வேதத்தில் அப்படியே இருக்கிறது.
ஏழடி, சப்தபதி என்று சொல்வது கயமைத்தனமாகும்!
இந்த சம்பிரதாயத்தையே அவர்கள் சொல்லாமல் மறைத்துவிட்டு, ஏழடி, சப்தபதி என்று சொல்வது கயமைத்தனமாகும். முழுக்க முழுக்க சப்தபதி என்பதற்கு வேறு எந்தப் பொருளும் இருக்க முடியாது.
ஒவ்வொரு திருமணத்திற்கும் சட்ட விதி இன்றியமை யாத சடங்காக இருப்பது, தேவர்களிடையும், ஆரியர்களி டையும் இருந்த ஒழுக்கக்கேடு எல்லோரிடத்திலும் பரவியிருந்ததையே காட்டுகிறது.
திருமணத்தில் சொல்லப்படும் மந்திரத்தை, தமிழில் சொன்னால், நீங்கள் யாராவது அனுமதிப்பீர்களா? நன்றாக நினைத்துப் பாருங்கள்.
இதைவிட பெண்ணைக் கொச்சைப்படுத்துவது; பெண்கள் சமுதாயத்தையே இழிவுபடுத்துவது; ஆண்களை அவமானப்படுத்துவது வேறு ஏதாவது உண்டா?
ஆனால், நம்மாள்கள் என்ன சொல்கிறார்கள், ‘‘சாமி, மந்திரத்தை சத்தமாகவும், அழுத்தமாகவும் சொல்லுங்கள், இன்னொரு தடவை தட்சணை கொடுக்கிறேன்” என்று புரியாமல் சொல்கிறார்கள்.
இந்த மணவிழாவின்போது நான் தமிழில் உரையாற்றுகிறேன். மற்ற தோழர்களும் மணமக்களை வாழ்த்துகிறார்கள். இந்தக் கருத்துகள் சிலருக்குப் பிடிக்கலாம்; சிலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், நாங்கள் என்ன பேசுகிறோம் என்று உங்களுக்கு விளங்குகிறது அல்லவா! அப்படி இல்லாமல், உங்களுக்கெல்லாம் புரியாத மொழியில், உங்களையெல்லாம் நான் திட்டிக் கொண்டிருந்தால், உங்களுக்கு எப்படிப் புரியும்? அதை நன்றாக நீங்கள் நினைத்துப் பாருங்கள்.
தந்தை பெரியார் உருவாக்கிய ஓர் அற்புதமான சுயமரியாதைத் திருமண முறை!
ஆகவேதான் நண்பர்களே, முழுக்க முழுக்க இதுபோன்ற சூழ்நிலைகளையெல்லாம் தந்தை பெரியார் மாற்றித்தான் சுயமரியாதைத் திருமணம் என்ற ஓர் அற்புதமான இந்த மணவிழா முறையினை உருவாக்கினார்.
இம்மணவிழாவினை யார் வேண்டுமானாலும் நடத்தலாம்; நாங்கள்தான் வந்து நடத்தவேண்டும் என்பது இல்லை. எதற்காக எங்களை இங்கே அழைத்திருக்கிறார்கள்? இந்தக் குடும்பத்திற்கு நான் வேண்டியவன். இந்தக் குடும்பம் எங்களு டைய குடும்பம். இந்தக் குடும்பத்தில் நல்லது, கெட்டது எது நடந்தாலும் நாங்கள் வருவோம்.
இதுபோன்ற ஒரு குடும்ப உறவு, கொள்கை உறவாக இருக்கின்ற காரணத்தினால்தான், இந்த மணமக்கள் சிறப்பான வகையில் நன்றாகப் படித்திருக்கிறார்கள்; நல்ல உத்தியோகத்தில் இருக்கிறார்கள்.
இட ஒதுக்கீடு இல்லை என்றால், நாமெல்லாம்
இந்த அளவிற்கு வந்திருக்க முடியுமா?
இந்த இயக்கம் இல்லையென்றால், இட ஒதுக்கீடு கிடைத்திருக்குமா? இட ஒதுக்கீடு இல்லை என்றால், நாமெல்லாம் இந்த அளவிற்கு வந்திருக்க முடியுமா? சமூகநீதி இல்லையென்றால், வந்திருக்க முடியுமா?
அதற்காகத்தானே இன்னமும் போராட்டம் நடந்து கொண்டிருக்கின்றது.
புதிய வரவான புதிய சம்பந்திகள்!
ஆகவேதான், நம்முடைய பாண்டு அவர்கள் வங்கியிலிருந்து ஓய்வு பெற்று, வீட்டிலேயே நிம்மதியாக அமர்ந்திருக்கலாம். ஆனால், அவர் அப்படியில்லாமல், இயக்கப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.
புதிய வரவு போன்று, புதிய சம்பந்திகள் கிடைத்திருக்கிறார்கள். நல்ல குடும்பம், கல்வி கற்ற குடும்பம் – மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். எங்கள் குடும்பம்போன்றதுதான், இந்தக் குடும்பமும்.
அப்படிப்பட்ட அற்புதமான குடும்பத்தில், மணவிழாவினை நடத்தி வைப்பதில் மிகுந்த பெரு மையடைகிறோம். இந்தக் குடும்பத்தில் நடைபெற்ற திருமணங்கள் அனைத்தையும் நான்தான் நடத்தி வைத்தேன் என்று இங்கே சொன்னார்கள். உண்மைதான். எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள்.
இயக்கக் கொள்கையில் மாறாமல் இருக்கிறார்கள்!
இன்னுங்கேட்டால், மூன்று தலைமுறை, நான்கு தலைமுறை திருமணங்களை நான் நடத்தி வைத்தி ருக்கின்றேன். காரணம், இந்தக் கொள்கையில் மாறாமல் இருக்கிறார்கள்.
ஆர்.பி.எஸ். அவர்கள்கூட இங்கே உரை யாற்றும்பொழுது சொன்னார். ஆடம்பரம் இல்லாமல், சிக்கனமாக திருமணத்தை நடத்துங்கள். அந்தப் பணத்தை மணமகளின் பெயரில் வைப்புத் தொகையாக வங்கியில் வையுங்கள். அது அவர்களுக்குப் பயன்படும்.
சில மணவிழா அழைப்பிதழைப் பார்த்தீர்களேயானால், புத்தகம் போன்று இருக்கும். மற்றவர்களின் படங்கள் பெரிது பெரிதாக இருக்கும். மணமக்களின் படங்கள் சிறியதாக இருக்கும்.
புத்தகங்களை அன்பளிப்பாகக் கொடுத்தால்,
அது பயனுள்ளதாக இருக்கும்!
சில அழைப்பிதழ்களைப் பிரித்துப் பார்த்தால், சந்தனம் வாசனை வரும்; நாதசுர இசை வெளிவரும். என்னதான் ஆடம்பரமாக மணவிழா அழைப்பிதழை அச்சடித்தாலும், அந்த மணவிழாவிற்குச் செல்லும்வரைதான். அதற்குப் பிறகு அதைப் பாதுகாத்தா வைக்கப் போகிறோம்? மணவிழா அழைப்பிதழ் அச்சடிக்கும் செலவிற்குப் பதில், புத்தகங்களை அன்பளிப்பாகக் கொடுத்தால், அது பயனுள்ளதாக இருக்கும்.
அதேபோன்று, திருமண விருந்துகளில் யாரும் பசிக்குச் சாப்பிடுவதில்லை. நான்கு இனிப்பு வகைகள், இத்தனை வகையான உணவு வகைகள் என்று இருக்கும். அவை அத்தனையையும் முழுவதுமாக யாரும் சாப்பிடுவதில்லை. வீணாவதுதான் அதிகமாக இருக்கும்.
சமூகத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் இன்னும் வரவேண்டும். மாற்றம் ஒன்றுதான் மாறாதது – இதை மார்க்ஸ் மட்டும் சொல்லவில்லை; ஏற்கெனவே புத்தரும் அந்தக் கருத்தைச் சொல்லியிருக்கிறார்.
மகிழ்ச்சியாக இங்கே அமர்ந்திருக்கக் கூடிய மண மக்களுக்கு அறிவுரை ஒன்றும் தேவையில்லை. எந்த மணவிழாவிலும் நான் மணமக்களுக்கு அறிவுரை சொல்லுவதில்லை.
மணமக்களே, பெற்றோரிடம்
நன்றி காட்டுங்கள்!
ஒரே ஒரு வேண்டுகோள்தான் – நீங்கள் வாழ்வில் எவ்வளவு பெரிய நிலைக்குச் சென்றாலும், உங்கள் பெற்றோரிடம் நன்றி காட்டுங்கள்; பெற்றோரை மதி யுங்கள்; பெற்றோரிடம் பாசம் காட்டுங்கள்; பெற்றோரை மறந்துவிடாதீர்கள்.
அவர்களுடைய தொண்டு, அவர்களுடைய தியாகம், அவர்களுடைய உழைப்பு, அவர்கள் பட்ட கஷ்டங்கள்தான் உங்களை உருவாக்கியிருக்கிறது.
அடுத்தாக குடும்பம், யாருக்கெல்லாம் எப்பொழுது உதவி செய்ய முடியுமோ, நீங்கள் உதவி செய்யுங்கள்.
மனிதன் தானாகவும் பிறப்பதில்லை –
தனக்காகவும் பிறப்பதில்லை.
சமுதாயத்திற்காகத்தான் நாமெல்லாம் வாழுபவர்கள்.
இரண்டாவதாக, மற்றவர்களுக்கு உதவ முடிந்தால், அதன்மூலம் பெறுகின்ற மகிழ்ச்சிதான் – அகத்தால் வருவதே இன்பம்.
மூன்றாவதாக, மணமக்களாகிய நீங்கள் ஒரு வருக்கொருவர் வெற்றியடைந்த வாழ்க்கையை வாழவேண்டும். இன்றைக்கு எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறீர்களோ, அதேபோன்றுதான் என்றும் இருக்க வேண்டும்.
தன்முனைப்பு இல்லாமல், விட்டுக் கொடுத்து வாழவேண்டும்!
ஒருவருக்கொருவர் ஈகோ என்று சொல்லக்கூடிய தன்முனைப்பு இல்லாமல், விட்டுக் கொடுத்து வாழ வேண்டும்.
இதைத்தான் அறிஞர் அண்ணா அவர்கள் அழகாக சொன்னார், ‘‘விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை; கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை” என்று. இந்த வரிகளை என்றைக்கும் நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.
இந்தக் கொள்கையின்படி
திருமணம் செய்துகொண்டவர்கள்….
ஆகவே, நீங்கள் இரண்டு பேரும் வாழ்வில் நல்ல அளவிற்கு வந்தீர்களேயானால், அது உங்களுக்குப் பெருமை – பெற்றோருக்கு மகிழ்ச்சி – எங்களைப் போன்றவர்களுக்கு மகிழ்ச்சி – எல்லாவற்றையும் தாண்டி இந்தக் கொள்கைக்கு மிகவும் மதிப்பு. இந்தக் கொள்கையின்படி திருமணம் செய்துகொண்டவர்கள் எவ்வளவு சிறப்பாக வாழுகிறார்கள், எடுத்துக்காட்டாக வாழுகிறார்கள் என்று எல்லோரும் சொல்லக் கூடிய வகையில் இருக்கவேண்டும்.
உங்கள் அனைவருக்கும் நன்றியும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
எல்லோருக்கும் வழிகாட்டக் கூடிய அளவிற்குச் சிறப்பாக வாழுங்கள்!
நம்முடைய அருமை நண்பர் பாண்டுரங்கன் அவர்களுடைய குடும்பமானாலும், அதேபோன்று பாலசுப்பிரமணியம் அவர்களுடைய குடும்பமானாலும், மேலும் பல்லாண்டு காலம் நல்ல அளவிற்கு, இல்லறம் எவ்வளவு முக்கியமோ, அதுபோல, தொண்டறத்தையும் செய்து சிறப்பாக வாழுங்கள். எல்லோருக்கும் வழிகாட்டக் கூடிய அளவிற்குச் சிறப்பாக வாழுங்கள்.
வாழ்க்கை இணையேற்பு விழா நிகழ்ச்சியில் அற்புதமான மணமக்கள் இவர்கள்.
இந்த மணவிழாவில் தாலி இருக்கிறதா? என்று கேட்டேன். ஏனென்றால், பல நேரங்களில் சுயமரியாதைத் திருமண முறைக்கு ஒப்புக்கொள்ளும்பொழுது, அவர்கள் என்ன கேட்கிறார்களோ, அதற்கு நாம் விட்டுக் கொடுப்பதில் தவறில்லை.
எண்ணெய்க்குத்தான் செலவு!
இங்கே வந்தபொழுது நான் பார்த்தேன், இரண்டு குத்துவிளக்குகளை கொளுத்தி வைத்திருக்கிறார்கள். இவ்வளவு மின்சார விளக்குகள் இருக்கும்பொழுது, குத்து விளக்குகளை வைத்திருக்கிறார்கள். அது எண்ணெய்க்குத்தான் செலவு.
ஒரு நிகழ்வினை உங்களுக்குச் சொல்கிறேன்.
பெரியார் அய்யா அவர்கள் ஈரோட்டில் முக்கியமான தலைவர். அவருக்கு வேண்டியவரின் வீட்டுத் திரு மணத்திற்கு அவரை அழைத்திருந்தார்கள். அது வைதீக முறையில் நடைபெறுகின்ற திருமணம்.
அய்யா அவர்கள், ‘‘வைதீக திருமணத்தில், மந்தி ரங்கள் எல்லாம் சொல்லுவார்கள். ஆகவே, திருமணம் முடிந்ததும் நான் வருகிறேன்” என்று சொன்னார்.
அதேபோன்று, அந்த மணவிழாவிற்கு, பெரியார் அய்யாவும், அன்னை மணியம்மையாரும் திருமண மண்டபத்திற்குச் சென்றார்கள்.
‘‘வாங்க, வாங்க” என்று எல்லோரும் அவர்களை வரவேற்றனர். மணமக்கள் இவர்களுடைய காலில் விழச் சென்றார்கள். அய்யா அவர்கள், காலில் விழக்கூடாது என்று சொல்லிவிட்டார்.
அதிகக் கூட்டமாக இருந்தது. குத்துவிளக்குகளை ஏற்றி வைத்திருந்தார்கள். ஒரே புழுக்கமாக இருந்ததால், ‘‘டேய், தம்பி அந்தப் பேனை போடு” என்றார்.
மின்விசிறி சுற்ற ஆரம்பித்தவுடன், குத்துவிளக்கு அணைந்து போனது.
அப்போது ஒரு சிலர், ‘‘பார்த்தீங்களா, பெரியார் வந்தார், குத்து விளக்கு அணைந்து போய்விட்டது” என்றார்கள்.
தந்தை பெரியாரின் விளக்கம்!
இதைக் கேட்ட பெரியார் அவர்கள், ‘‘நான் வந்ததினால் இந்தக் குத்துவிளக்கு அணையவில்லை. மின்விசிறி சுற்ற ஆரம்பித்ததால், அணைந்து போனது. ஒன்று, மின்விசிறி இங்கே இருக்கக்கூடாது; அல்லது குத்துவிளக்கு இங்கே இருக்கக் கூடாது. இதுதான் காரணம்” என்றார்.
உடனே எல்லோரும் சிரித்துவிட்டனர்.
இந்த மணவிழாவில், தாலி இல்லை. அதற்குப் பதில் இரண்டு தங்கச் சங்கிலிதான். ஒவ்வொரு தங்கச் சங்கிலியிலும் மணமக்கள் படங்களோடு இருக்கிறது. இதிலும் சமத்துவம் இருக்கிறது.
இது ஓர் அற்புதமான மணவிழா – மணமக்கள்
வாழ்க!
மணமக்கள் உறுதிமொழி கூறி, மணவிழாவினை நடத்திக் கொண்டவுடன், இந்த மணவிழா முழுமை பெறும்.
வாழ்க பெரியார்!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.