இதுவரை பின்பற்றிய மூடநம்பிக்கையிலிருந்து எங்களை விடுவித்தது பெரியாரியல் பயிற்சி பட்டறை பங்கேற்ற மாணவர்கள் பெருமிதம்
தொகுப்பு: முனைவர் வே.இராஜவேல்
15.08.2023 செவ்வாய்க் கிழமை பொள்ளாச்சி கழக மாவட்டம், பொள்ளாச்சி, வெங்கடேசா காலனி, அய்.டி.எம். அரங்கில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை காலை 10 மணிக்கு தொடங்கியது. பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று திராவிடர் கழக மாவட்ட செயலாளர் அ.இரவிச்சந்திரன் உரையாற்றினார். மாவட்ட தலைவர் சி.மாரிமுத்து தலைமையேற்று உரையாற்றினார். தலைமைக் கழக காப்பாளர் பொறியாளார் தி.பரமசிவம், அய்டிஎம் பயிற்சி மய்ய இயக்குநர் மிஞிவி சரவணன் ஆகியோர் தொடங்கிவைத்து உரையாற்றினர். மாநில இளைஞரணி அமைப்பாளர் வழக்குரைஞர் ஆ.பிரபாகரன், மாநில திராவிட மாணவர் கழக துணை செயலாளர் மு.இராகுலன், மாவட்ட துணைத் தலைவர் ஜெ.செழியன், மாவட்ட துணை செயலாளர் கி.சிவராஜ், நகர தலைவர் சு.வடிவேல், நகர செயலாளர் அர.நாகராஜ், நகர அமைப்பாளர் க.வீரமலை, மாவட்ட இளைஞரணி செயலாளர் ம.பிரவீன்குமார், மாவட்ட மாணவர் கழக தலைவர் இரா.வின்சென்ட், மாவட்ட மாணவர் கழக செயலாளர் வி.அருண், பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அமைப்பாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை ஏற்று சிறப்பித்தனர்.
*பெரியார் ஓர் அறிமுகம்*
மாநில ப.க. ஊடகப் பிரிவு தலைவர் மா.அழகிரிசாமி “பெரியார் ஒரு அறிமுகம்” என்ற தலைப்பில், தந்தை பெரியார் ஈரோட்டில் செல்வசெழிப்பு மிக்க குடுபம்பத்தில் பிறந்தார். அவருடைய தந்தை சிறிய மளிகைக் கடை வைத்து நாணயமாக நடத்தி அது மிகப் பெரிய அளவிற்கு வளர்ச்சி அடைந்து மொத்த வியாபாரக் கடையாக மாறுகிறது. அதன் பெயர் மண்டிக்கடை என்று, இப்படி சாதாரணமாக கூலி வேலை செய்யத் தொடங்கி தன்னுடைய கடின உழைப்பால் பெரிய அளவிற்கு செல்வந்தராக வளர்ச்சி அடைகிறார் பெரியாரின் தந்தை.
படிக்கும் காலம் முதலே ஜாதி ஒழிப்பு உணர்ச்சி கொண்டவர் தந்தை பெரியார்
6 வயது முதல் 10 வயது வரை தான் தந்தை பெரியாரின் பள்ளி படிப்பு இருந்தது. முதல் 3 ஆண்டுகள் திண்ணைப் பள்ளியில் படித்தார், அதற்கு பிறகு 2 ஆண்டுகள் ஆங்கில முறைகள் அமைந்த கல்வி, ஆக மொத்தமே அவருடைய படிப்பு 5 ஆண்டுகள்தான். அந்த 5 ஆண்டுகளும் மிகவும் குறும்புக்கார மாணவனாக, எதற்கெடுத்தாலும் ஏன்? எப்படி? என்று கேள்வி கேட்கும் புத்திசாலி மாணவனாகவும் திகழ்ந்தார்.
தந்தை பெரியாரின் பெற்றோர், ‘‘பெரியாரிடம் நீ பள்ளிக்கூடத்தில் இருக்கும் போது தண்ணீர் தாகம் எடுத்தால் புழங்க கூடாத ஜாதிகள் இருக்கும் வீட்டில் தண்ணீர் குடிக்ககூடாது, ஆசிரியரின் வீட்டில் வேண்டுமானால் குடி” என்று சொல்லுகின்றனர். அப்படி அவர்களின் வீட்டில் தண்ணீர் குடிக்கும் பொழுது ஆசிரியர் வீட்டில் இருந்த ஒரு பெண் தண்ணீர் குவளையை தூக்கிக் குடிக்க வேண்டும் என்று சொல்லுகிறார். அவர் குடித்து முடித்த குவளையை நன்கு தண்ணீர் ஊற்றி கழுவிட்டு தான் எடுத்துச் செல்கிறார்கள். சில சமயங்களில் தண்ணீர் குடிக்கும் பொழுது புரையேறி தண்ணீர் சிந்துகிறது இப்பொழுது அந்த பெண் திட்டுகிறார். பிறகு புழங்க கூடாத ஜாதிகள் என்று சொல்லக்கூடிய வீடுகளுக்கு சென்று தண்ணீர் கேட்டு வாங்கி குடிக்கிறார், அப்போது அவர்கள் சொல்கிறார்கள் நீ நன்றாக வாயை வைத்து குடி என்று. தந்தை பெரியார் மகிழ்ச்சியாக குடிக்கிறார். இப்படி தொடர்ந்து அந்த வீடுகளுக்கு சென்று தண்ணீர் குடிப்பது, அந்த வீட்டுப் பிள்ளைகளோடு விளை யாடுவது, அவர்கள் வீட்டில் கொடுக்கக்கூடிய பலகாரங்களை சாப்பிடுவது என்று தொடர்ந்து செய்கிறார். இது பெரியாரின் வீட்டிற்கு தெரிந்து கண்டித்து காலில் விலங்கு மாட்டுகிறார்கள், அந்த விலங்கை தன் தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு அந்த புழங்ககூடாத வீட்டு பையன்களோடு சேர்ந்து விளை யாடுவதும் அவர்கள் வீட்டிற்க்கு செல்வதுமாக தொடர்ந்து செயல்படுகிறார். இப்படி தந்தை பெரியாரின் தொடர்பு யாருடன் இருந்தது என்றால் சமுதாயம் யாரோடு புழங்கக் கூடாது என்று ஒதுக்கி வைத்திருக்கிறதோ அவர்களோடு தான் பழகினார். இப்படி படிக்கும் காலம் முதலே தந்தை பெரியாரிடம் ஜாதி ஒழிப்பு உணர்ச்சி இருந்து வந்ததை நாம் அறிகிறோம்.
இளம் வயதிலே புத்தி கூர்மையும் – பகுத்தறிவு சிந்தனையும்
தந்தை பெரியாருக்கு படிப்பு ஏறாது என்று சொல்லி அவருடைய தந்தை கடைக்கு அழைத்துச் சென்று வேலை செய்ய வைக்கிறார். அங்கேதான் அவருக்கு நிறைய அ பவங்கள் கிடைக்கிறது. பல்வேறு மக்களை சந்திக்கிறார் அவர்களுடைய பிரச்சினைகளை எல்லாம் இவர் சரி செய்கிறார். கடைதெருவில் ராமநாத அய்யர் என்பவரின் கடை இருக்கிறது, அவர் விதியின் மேல் மிகவும் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர். எப்போதும் எதற்கெடுத்தாலும் விதி விதி விதி என்று பேசக்கூடியவர். அவரிடம் பெரியார் கேட்கிறார் விதி விதி என்று சொல்கிறீர்களே அது உண்மையா? நீங்கள் அதை முழுசாக நம்புகிறீர்களா? என்று. ஆமாம் உண்மைதான். நான் முழுசா நம்புறேன் என்கிறார். அந்த கடைக்கு முன்பாக தட்டி ஒன்று ஒரு குச்சியில் தாங்கியபடி நீட்டப்பட்டிருக்கிறது. பெரியார் ஒருமுறை அந்த குச்சியை தட்டி விடுகிறார் அந்த தட்டி ராமநாத அய்யர் தலையில் விழுந்து விடுகிறது. ராமநாதஅய்யர் ஏன் என் மீது தட்டியை தள்ளி விட்டாய் என்று கோபப்படுகிறார். அப்போது பெரியார் சொல்லுகிறார் விதி விதி என்று சொல்கிறீர்களே இந்த தட்டியை தட்டிவிட சொன்னது அந்த விதி என் மூலமாக, அதனால் என் மீது ஏன் கோபப்படுகிறீர்கள் என்று பெரியார் சொல்லி இருக்கிறார். தந்தை பெரியார் அவர்கள் இளம் வயதில் புத்தி கூர்மையாகவும் பகுத்தறிவோடும் சிந்தித்து இருக்கிறார் என்பதற்கு இந்த ஒரு நிகழ்வு சிறந்த எடுத்துக்காட்டு. 12 வயதில் வியாபாரம் செய்ய ஆரம்பித்து மிகப்பெரிய அளவிற்கு தேர்ந்த வியாபாரியாக விளங்குகிறார், 19 வயதில் அவருக்கு தனது அம்மாவின் தம்பி மகள் 13 வயது நாகம்மையார் என்பவரோடு திருமணம் நடைபெறுகிறது. 1904 இல், 25 வயதில் தனது அப்பாவிடம் கோபித்துக் கொண்டு காசி போன்ற இடங்களுக்குச் சென்று துறவு மேற் கொள்கிறார்.
தந்தை பெரியாரின் பொதுத் தொண்டு
தந்தை பெரியார் 1916 முதல் 1919 வரை ஈரோடு நகர் மன்றத்தின் நகர சபைத் தலைவராக இருக்கிறார். அப்போது அவர் செய்த சாதனைகளில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று குடிநீர் தொட்டி கட்டியது அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இன்றளவிற்கும் செயல்பட்டு வருகிறது. மிக நேர்த்தியாக அழகாக கட்டப்பட்ட அந்த தண்ணீர் தொட்டி இன்றைக்கு 100 ஆண்டு கடந்தும் மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. மிகக் குறுகிய சாலைகளாக இருந்த ஈரோடு கடை வீதி, ஆக்கிரமிப்புகளை அகற்றி அகலப்படுத்தியவர் தந்தை பெரியார். இன்றைக்கு ஈரோடு சாலைகள் வளமாக இருப்பதற்கு காரணம் அன்றைக்கே பெரியார் உருவாக்கிய சாலை விரிவாக்கம் தான்.
வியாபாரியாக இருந்த தந்தை பெரியார் 1919 ஜூலை மாதம் காங்கிரஸில் இணைகிறார். அப்போது தான் வகித்து வந்த நகர் சபை தலைவர் உள்ளிட்ட 29 பதவிகளை ராஜினாமா செய்கிறார், அதுபோல் பெரிய அளவுக்கான ஆண்டுக்கு 2,000 ரூபாய் வருமானம் இன்றைக்கு அது 20 லட்சத்திற்கு சமம் அந்த வருமானம் வரக்கூடிய கடையை மூடிவிட்டு, தனது தந்தையார் காலத்திலிருந்து நடத்தப்பட்டு வந்த பஞ்சாலையினையும் மூடி விட்டு காங்கிரசில் இணைந்து முழுநேர மக்கள் தொண்டாற்ற செல்கிறார். காங்கிரசில் இணைந்தவுடன் காந்தியின் தலைமையை ஏற்று ஒத்துழை யாமை இயக்கத்தில் ஈடுபடுகிறார். காந்தியார் அறிவித்த ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபடுகிற பொழுது முதலில் கதரை உடுத்துகிறார். தான் உடுத்தியதோடு இல்லாமல் தன் வீட்டில் உள்ள அம்மா, மனைவி, தங்கை ஆகியோரையும் கதர் ஆடை உடுத்த சொல்லுகிறார்.
காந்தி ஒத்துழையாமை இயக்கத்தினை தொடங்கியதும், தந்தை பெரியார் அதில் ஈடுபட்டு தனது குடும்பத்திற்கு நீதிமன்றம் மூலமாக வரவேண்டிய ரூபாய் 50,000 தை இழந்தார். ஈரோட்டில் தந்தை பெரியார் வீட்டில் மது தரக் கூடிய மரங்களை வெட்ட வேண்டும் என்று சொல்லுகிறார். தாத்தம்பட்டி என்ற ஊரில் தனது தோட்டத்தில் இருந்த 500 தென்னை மரங்களை வெட்டினார் தந்தை பெரியார். அதனை தொடர்ந்து 1921 இல் கல்லுக்கடை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி சிறை போகிறார், அதோடு இல்லாமல் இந்த கள்ளுக் கடை மறியல் போராட்டத்தில் மனைவி நாகம்மை யாரையும், தங்கை கண்ணம்மாளையும் ஈடுபடுத்துகிறார். இன்றைக்கும் யார் வீட்டிலும் பெண்கள் போராட்டம் என்றால் பெண்கள் வருவதில்லை, ஆனால் அன்றைக்கே தனது வீட்டு பெண்களை போராட்டத்தில் ஈடுபடுத்தி இருக்கிறார். அந்தக் கள்ளுக்கடை மறியலை நிறுத்த வேண்டும் என்று ஒரு பேச்சு வரும்பொழுது, காந்தியார் சொல்லுகிறார் அது என் கையில் இல்லை ஈரோட்டில் இருக்கும் இரண்டு பெண்மணிகளின் கையில் தான் இருக்கிறது என்று. 1924 இல் கேரள மாநில வைக்கம் என்ற ஊரில் நடைபெற்ற ஜாதி கொடுமையை எதிர்த்து போராடுகிறார், அங்கே இருந்த கோவில் தெருக்கள் புழங்ககூடாத ஜாதிகள், தாழ்த்தப்பட்ட ஜாதி என்று சொல்லக்கூடியவர்கள் நடக்ககூடாது என்ற ஜாதி இழிவை எதிர்த்து போராடி கைது செய்யப்படுகிறார், அதன்பிறகு தனது மனைவி, தங்கை ஆகியோரை போராட்டத்தில் ஈடுபடவைத்து இறுதியாக இந்த போராட்டம் வெற்றி பெற்று அந்த தெருக்களில் அனைத்து தரப்பு மக்களும் நடக்கக்கூடிய உரிமையை பெற்றார்கள். 1924 நடைபெற்ற வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு 2023 இல் தற்போது நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.
சேரன்மாதேவி என்ற ஊரில் வ.வே. சு அய்யர் என்பவரால் நடத்தப்பட்ட குருகுலத்தில் பார்ப்பன மாணவர்களுக்கு தனி உணவு, பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு தனி உணவு, பார்ப்பனர்களுக்கு தனி குடம் பார்ப்பனரல்லாதவர்களுக்கு தனிப் பானைஎன அனைத்திலும் பாகுபாடு காட்டப்பட்டு வந்தது. ஆனால், இந்த குருகுலம் நடத்துவதற்கு பொருள் உதவி யார் கொடுத்தார் என்றால், காங்கிரஸ் கட்சி பத்தாயிரம் ரூபாயை கொடுத்தது. அப்போது காங்கிரஸ் கட்சியி டைய தலைவராக பொறுப்பில் இருந்த பெரியார் இதை கடுமையாக எதிர்த்தார். பிறகு பல்வேறு காங்கிரஸ் தலைவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து போராடி அந்த குருகுலத்தை மூடினார். பெரியார் தான் கொண்டிருந்த பார்ப்பன எதிர்ப்பு கோட்பாடு, மனிதநேய கோட்பாடு, ஜாதி எதிர்ப்பு கோட்பாடு, பகுத்தறிவு கோட்பாடு காரணமாக தான் காங்கிரஸில் இருக்கும் பொழுதே அப்போது ஜஸ்டிஸ் கட்சி கொண்டு வந்த அறநிலைய துறை பாதுகாப்புச் சட்டத்தை ஆதரித்தார்.
சுயமரியாதை இயக்க துவக்கம்
பெரியார் 1925 இல் காங்கிரஸ் கட்சிக்குள் அமைப்பு ரீதியாக வகுப்புவாரி பிரதிநிதித்துவம் தேவை என்று கேட்கிறார். காங்கிரஸ் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலும் இருந்த பார்ப்பனர்களால் எதிர்க்கப்பட்டு, காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் அக்கட்சியை விட்டு வெளியேறுகிறார். அப்போது ராஜகோபாலாச்சாரியார் பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களே காங்கிரஸ் என்பது பெரிய மலை நீங்கள் மயிரை
கட்டி மலையை இழுக்கிறீர்கள், வெற்றியடைய மாட்டீர்கள் என்று சொல்லுகிறார். பெரியார் அதற்கு அதே மேடையிலே சொல்லுகிறார் சரி நான் காங்கிரஸ் என்னும் மலையை மயிரால் கட்டி இழுக்கிறேன் வந்தா மலை வராவிட்டால் மயிறு போச்சு என்று சொல்லி விட்டு வெளியேவருகிறார். ஆனால் இன்று காங்கிரஸ் கட்சியில் அமைப்பு ரீதியாக பிரதிநிதித்துவம் தரவேண்டும்
என்ற முடிவை காங்கிரஸ் கட்சி தலைமை இன்று ஏற்றுக் கொண்டிருக்கிறது. ஆகவே கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் கழித்து தந்தை பெரியார் வென்று இருக்கிறார். தந்தை பெரியார் 1925 இல் காங்கிரசை விட்டு வெளிவந்து சுயமரி யாதை இயக்கத்தையும் குடிஅரசு பத்திரிக்கையும் தொடங்குகிறார். வர்ணாசிரம தர்மத்தை ஒழிக்கவேண்டும், வருணாசிரம தர்மத்தை ஒழிக் காவிட்டால் தீண்டாமையை ஒழிக்க முடியாது. ஜாதி என்பது தான் உண்மை, தீண்டாமை என்பது நிழல், நீங்கள் நிழலோடு போராடுகிறீர்கள் உண்மையோடு போராட வேண்டும். அது மட்டுமல்லாமல் காங்கிரஸ் ஒழிய வேண்டும் இந்து மதம் ஒழிய வேண்டும் பார்ப்பனர் ஆதிக்கம் ஒழிய வேண்டும் என்று காந்தியிடமே சொல்லுகிறார்.
தந்தை பெரியாரை தேடிவந்த தலைவர் பதவி
1929 இல் செங்கல்பட்டில் முதல் சுயமரியாதை மாநாடு நடத்தினார், இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் கள் தான் இப்போது சட்டமாக இருந்து கொண்டிருக்கிறது. 1938 இல் தமிழ்நாட்டில் சென்னையில் நடந்த பெண்கள் மாநாட்டில் தான் ஈ.வெ.ராமசாமி அவர்களுக்கு பெரியார் என்ற பட்டம் வழங்கப்பட்டது. தந்தை பெரியார் பெல்லாரி சிறையில் இருக்கும் போது நீதிக்கட்சி இவரை தலைவராக தேர்ந்தெடுத்தது. சிறையில் இருக்கும் போதே தேர்ந் தெடுக்கப்பட்ட தலைவர். இப்போதெல்லாம் பதவிக்காக ஓடுபவர்களை நாம் பார்க்கிறோம், ஆனால் தந்தை பெரியாரைத் தேடி தலைவர் பதவி ஓடிவந்தது. 1944 இல் சேலத்தில் நீதி கட்சியி டைய மாநாடு கூடுகிறது இந்த மாநாட்டில் தான் நீதிக் கட்சியின் பெயரை திராவிடர் கழகம் என்று தந்தை பெரியார் பெயர் மாற்றம் செய்கிறார். அன்றைய நீதிக் கட்சியி டைய நிகழ்ச்சி தான் திராவிடர் கழகம், அதிலிருந்து பிரிந்த திராவிட முன்னேற்ற கழகம்.
தந்தை பெரியாருக்கு செய்யப்பட்ட சிறப்புகள்
யுனெஸ்கோ மன்றம் தந்தை பெரியார் அவர்களுக்கு ஒரு பாராட்டு பத்திரம் கொடுத்திருக்கிறது. அது என்னவென்றால் புதிய உலகின் தொலைநோக்காளர், தென்கிழக்கு ஆசியா வின் சாக்ரடீஸ், சமுதாய சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை மூடநம்பிக்கை பொருளற்ற பழக்க வழக்கங்கள் இழிவான தன்மைகள் ஆகியவற்றின் கடும் எதிரி என்ற பொருளில் தந்தார்கள். தந்தை பெரியார் அவர்களின் நூற்றாண்டு விழா தொடக்கத்தில் ஒன்றிய அரசால் தபால் தலை வெளியிடப்பட்டது. அதேபோல் பெரியார் அவர்களின் 125 ஆவது பிறந்தநாள் அன்று 2003 இல் சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டது. இவ்வாறு தந்தை பெரியார் அவர் களுடைய வாழ்க்கை வரலாற்றை பவர் பாயிண்ட் விளக்கத் துடன் படக்காட்சிகளுடன் மாணவர்களுக்கு புரியும்படி வகுப்பு நடத்தினார்.
வகுப்பு தலைப்பும் – வகுப்பெடுத்தோரும்
மாநில கிராமப் பிரச்சார அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன் – பார்ப்பனப் பண்பாட்டு படை எடுப்புகள் என்ற தலைப்பில், பொங்கல் விழா ஒன்று தான் தமிழன் விழா, மற்றவை அனைத்தும் பார்ப்பன பண்டிகைகளே, கன்னிகா தானம், புரோகிதம் என்று சொல்லி பார்ப்பனர்கள் தங்களது பண்பாட்டை திருமணத்தில் திணித்திருந்தார்கள். அதை எதிர்த்து பெரியார் உருவாக்கிய திருமண முறை தான் சுயமரியாதைத் திருமணம். இப்படி எல்லாம் தமிழ் சமூகத்தின் மீது பார்ப்பனர்கள் தங்களை ஆதிக்கத்தை செலுத்தினார்கள் பண்பாட்டை கெடுத்தார்கள் என்பதை விளக்கி வகுப்பெடுத்தார்.
தந்தை பெரியார் மருத்துவக் குழும மாநில தலைவர் டாக்டர் இரா கவுதமன்- பேய் ஆடுதல், சாமி ஆடுதல் அறிவியல் விளக்கம் என்ற தலைப்பில் எங்கேயாவது அய்யர் வீடுகளில் பேயாடியது உண்டா? பெரிய பெரிய கோவில்களில் யாராவது சாமியாடியது உண்டா? கலெக்டர், டாக்டர், பொறி யாளர்கள் ஆசிரியர்கள் என்ற படித்த மக்கள் எங்காவது சாமியாடியது உண்டா? பேய் ஆடுகிற பெண்களை பார்த் திருக்கிறோம் ஆனால் பேய் ஆடுகிற ஆண்களை யாராவது பார்த்ததுண்டா? என்று அடுகடுக்கான கேள்விகளை முன் வைத்து அவற்றுக்கெல்லாம் விளக்கம் கூறி பேய் ஆடுவதும் சாமி ஆடுவதும் ஆண்டவன் செயலாலல்ல இது அறியாமை யின் வெளிப்பாடு, பயத்தின் வெளிப்பாடு என்பதை எடுத்துக் கூறி நகைச்சுவையோடு கலந்து சிந்தனையை தூண்டும் வண்ணம் வகுப்படுத்தார்.
முனைவர் அதிரடி க.அன்பழகன் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியருக்கு வீரமணி அவர் களின் சாதனைகள் என்ற தலைப்பில் இட ஒதுக்கீட்டுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களின் பல்வேறு சாதனைகளை மாணவர்கள் புரிந்து கொள்ளும்படி எடுத்துக் கூறி வகுப்படுத்தார்.
ஈட்டி கணேசன் – கயிறு கட்டுதல், முடிக்கயிறு அணிதல், கையிலே கற்பூரம் ஏத்தி குறி சொல்லுதல், தண்ணீர் அய்ஸ் கட்டியாக மாற்றுதல், வெறுங்கையில் குங்குமம், திறுநீர் வரவழைத்தல் போன்ற சாமியார்கள் செய்யும் மோசடிகளை பித்தலாட்டத்தை மாணவர்களுக்கு புரியும்படி செய்து காண்பித்து அவற்றிற்கு விளக்கம் கூறி இவையெல்லாம் எமாற்று வித்தைகளே, மந்திரம் இல்லை அனைத்தும் தந்திரமே என்று கூறி ‘மந்திரமா? தந்திரமா?’ என்ற அறிவியல் விளக்க நிகழ்ச்சியை நடத்தினார்.
திராவிடர் கழக துணை பொது செயலாளர் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் -தந்தை பெரியாரின் பெண் உரிமை சிந்தனைகள் என்ற தலைப்பில் பெண்ணடிமைத் தனத்தை ஒழிக்க பெரியாரின் சிந்தனைகளே துணை என்பதை விளக்கி வகுப்பெடுத்தார்.
ஏன்? ஏதற்கு? ஏப்படி? என்ற கேள்வி கேட்டால் சிந்தனை பிறக்கும்
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர், பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர் இரா.ஜெயக்குமார், ஏன்? எதற்கு? எப்படி? என்று சிந்திக்கத் தூண்டுகிற அறிவு பகுத்தறிவு. அது மனித க்கு மட்டும்தான் இருக்கிறது, வேறு எதனிடமும் இல்லை. மனிதன் எல்லாருக்கும் தானே பகுத்தறிவு உண்டு நீங்கள் மட்டும் ஏன் சொல்லுகிறீர்கள் என்று பெரியாரிடம் கேட்டார்கள் அதற்கு பெரியார் சொன்ன விளக்கம் தெருவில் மாட்டுச் சாணம் கிடக்கிறது அதை மிதித்து விட்டால் என்ன செய்கிறோம் அசிங்கம் என்று உடனடியாக சுத்தம் செய்கிறோம். அதே சாணத்தை கொழுக் கட்டையாக பிடித்து வைத்து ஒரு பொட்டு வைத்து, அருகம்புல் வைத்து விட்டால் விழுந்து கும்பிடுகிறோம். காலில் பட்டவுடன் சாணம் என்று சொல்லும்போது கொளுக் கட்டையாக பிடித்து வைக்கப்பட்டாலும் சாணி என்று சொல்லவேண்டும். இப்படி ரெண்டு இடத்திலேயுமே ஒரே அறிவோடு சிந்திப்பவன் தான் பகுத்தறிவாதி என்று பெரியார் சொல்லுகிறார். இது போன்ற பெரியார் கருத்துகளை நம்முடைய தோழர்கள் உங்களிடம் சொல்ல வேண்டும் என்று இந்த ஒரு நாள் பயிற்சிப் பட்டறை நடத்துகிறார்கள்.
புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்தது யார்? நியூட்டன் அவர் எப்படி கண்டுபிடித்தார்? கீழே விழுந்த ஆப்பிள் பழம் ஏன் மேலே போகவில்லை, பக்கவாட்டில் செல்லவில்லை என்ற கேள்வியை கேட்டு சிந்தித்ததால் விளைவாக கிடைத்த விடைதான் புவிஈர்ப்புவிசை. அதனால் இன்றைக்கு நியூட்டன் பேசப்படுகிறார். பெரியார் கேட்க சொன்ன அந்தக் கேள்வியை நீங்கள் அனைவரும் கேட்கவேண்டும். அனைத்து இடங்களிலும் பகுத்தறிவைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ப்யிற்சிப் பட்டறை, நீங்கள் எல்லாம் இந்த இயக்கத்தில் சேர வேண்டும் என் பதற்காக அல்ல, உங்களிடத்திலே பகுத்தறிவு சிந்தனையை தூண்டுவதுதான் இந்த பயிற்சிப் பட்டறையின் நோக்கம். இந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அறிவு பெற வேண்டும் கல்வி பெறவேண்டும் வேலை வாய்ப்பு பெற வேண்டும் உலக மக்களைப் போல தந்தை பெரியார் கூறியதை போல் மானமும் அறிவும் பெற்று வாழ வேண்டும், நம்முடைய தாத்தா, பாட்டி எல்லாம் படிக்கவில்லை நாமெல்லாம் இன்றைக்கு படிக்கிறோம் இந்த வசதி வாய்ப்பு எல்லாம் நாம் பெற்றிருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் பெரியார். பெரியார் பிறந்ததற்கு முன் இந்த சமுதாயம் எப்படி இருந்தது? பெரியார் பிறப்பதற்கு பின் இந்த சமுதாயம் எப்படி இருக்கிறது? என்ற கேள்வியை நாம் கேட்டுப் பார்த்தால் எல்லாவற்றுக்கும் விடை கிடைக்கும். மனித சமுதாயத்தில் ஆணும் பெண்ணும் சரி சமமாக இருக்க வேண்டும். பெண்கள் ராணுவத்தில் சேர வேண்டும், விமானியாக உருவாக வேண்டும் காவல்துறையில் சேர வேண்டும் என்று தந்தை பெரியார் கூறினார். இப்போது பெண்கள் அனைத்துத் துறையிலும் பணி செய்கிறார்கள் முன்னேறி இருக்கிறார்கள் அதற்கு காரணம் தந்தை பெரியார். பெரியாரிடம் சென்று கேட்டார்கள் பெண் உரிமையென்றால் என்ன? என்ன உரிமை கொடுக்க வேண்டும் என்று கேட்டார்கள் அதற்கு பெரியார், புதிதாக எதையும் கொடுக்க வேண்டாம் ஆண்களுக்கு என்னென்ன உரிமை இருக்கிறது அவை அனைத்தும் பெண்களுக்கும் தர வேண்டும் என்று பெரியார் சொன்னார். அந்த அடிப்படையில் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது இங்கே வருகை தந்து உங்களுக்காக உழைத்து இந்த பயிற்சிப் பட்டறையை ஏற்பாடு செய்த கழக பொறுப் பாளர்கள், தோழர்கள் மற்றும் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளை பாராட்டி உரையாற்றினார்.
இறுதியாக திராவிட முன்னேற்றக் கழக மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி, சிபிஅய் வட்டார செயலாளர் வி.சண்முகம், மக்கள் விடுதலை முன்னணி அமைப்பாளர் கா.மாரிமுத்து, பெ.வெள்ளிங்கிரி மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் தோழர்கள் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் புத்தகங்களையும் வழங்கி மகிழ்ந்தனர்.
இந்நிகழ்வில் சிறப்பாக குறிப்பெடுத்த மாணவர்களான சா.சஜினி, எம்.ஹரிப்பிரியா, எம்.அபிநயா, பவித்ரா, சிவரஞ் சனி ஆகிய அய்ந்து மாணவர்கள் சிறப்பு பரிசுகளாக புத்தகங்கள் வழங்கப்பட்டது. இந்த பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் ஆண்கள் 37 பெண்கள் 32, கல்லூரி படிக்கக்கூடிய மாணவர்கள் 42 பள்ளி படிக்கக்கூடிய மாணவர்கள் 27என மொத்தம் 69 மாணவர்கள் பயிற்சி பெற்றனர் என்பது சிறப்புக்குரியது.
இப்பயிற்சி வகுப்பு குறித்த மாணவர்காளின் கருத்து
சுரேஷ்குமார் என்கிற மாணவர் ஜாதி ஒழிப்பு என்றால் என்ன, பெண் உரிமை என்றால் என்ன, எது நமக்கு தேவை, எது நமக்கு தேவையற்றது, என்பதை எல்லாம் இந்த வகுப்பின் மூலம் புரிந்து கொண்டதாகவும், மேலும் மந்திரம் என்ற ஒன்று இல்லை அனைத்துமே தந்திரம் தான் என்பதை இந்த வகுப்பின் மூலம் தெளிவுபெற்றதாகவும் கூறினார். அவரை தொடர்ந்து காளீஸ்வரி என்ற மாணவி இந்த பயிற்சிப் பட்டறை மூலம் பல புதிய தகவல்களை கருத்துகளை அறிந்து கொண்டேன், பெண்கள் இந்த சமுதாயத்தில் எப்படி எல்லாம் இழிவுபடுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண் டேன், இதுவரை நாங்கள் பின்பற்றி வந்த மூடநம்பிக்கைகளை இன்றிலிருந்து பின்பற்ற மாட்டோம் என்ற தெளிவையும் இந்த பயிற்சிப் பட்டறை வகுப்பு தந்திருக்கிறது என்று கூறினார்.
இந்நிகழ்வில் மா தினேஷ்குமார், சி கனகராஜ், ஆ பேரறிவாளன், அன்பழகன், மலர்க்கொடி, சென்னை சட்டக் கல்லூரி மாணவர் திவ்யவாஹினி மற்றும் ஏராளமான கழகத் தோழர்கள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு மாணவர் களை ஊக்கப்படுத்தினர்
மாவட்ட இளைஞரணி தலைவர் கார்த்திக் நன்றி கூறினார்.