சென்னை, ஜூலை 23 எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடிக்கு தி.மு.க. அளித்துள்ள பதில் வருமாறு:
தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியை குறைகூறிச் சில செய்திகளைச் சொல்லி வருகிறார்.
2021 தேர்தலில் வென்று தி.மு.க. ஆட்சிக்கு வந்ததால், அம்மா உணவு திட்டத்தை உடனே மூடிவிடுவார்கள் என்றார்கள். அவர்கள் சொல்லியது போல் அத்திட்டம் மூடப்படவில்லை.கடந்த 3 ஆண்டுகளில் திராவிட நாயகரின் தி.மு.க. ஆட்சி, அம்மா உணவுத் திட்டத்திற்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்து சிறப்பாக நிறைவேற்றி வருகிறது. எந்த ஒரு திட்டமும் மக்களுக்கு நன்மை பயக்கும் என்றால் அது திட்டத்தை மேலும் சிறப்புடன் நிறைவேற்றுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளது தி.மு.க.
இதற்கு மேலும் சில சான்றுகள்: எம்.ஜி.ஆரின் சத்துணவு திட்டத்தில் 5 முட்டைகள் வழங்கிய தி.மு.க. இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை விரிவு படுத்தியது தி.மு.க. ஆனால் அதிமுக ஆட்சியில் திமுகவின் திட்டங்கள் பலவும் முடக்கப்பட்டுள்ளன. அண்ணா நூற்றாண்டு நினைவாக ரூ.172 கோடியில் தி.மு.க.ஆட்சிக் காலத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 8 தளங்களுடன் பிரம்மாண்டமாக உருவாக்கிய அண்ணா நூற்றாண்டு நூலகத்தைச் சிதைத்தவர்கள் அ.தி.மு.க.வினர்.
புதிய சட்டமன்ற கட்டடம்
ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் 1,000 கோடியில் அமைக்கப்பட்ட புதிய சட்டமன்ற – தலைமைச் செயலகக் கட்டடத்தை மீண்டும் தி.மு.க. ஆட்சி வந்தால் கூடப் பயன்படுத்தி விடக்கூடாது என்ற வக்கிர நோக்கத்துடன், அந்தக் கட்டடத்தின் உட்பகுதிகளை மாற்றி அமைத்து ஓமந்தூரார் மருத்துவமனையாக மாற்றினார்கள். இதேபோல் வள்ளுவர் கோட்ட மாண்பைச் சிதைத்தது அதிமுக, துறைமுகம்-மதுரவாயல் உயர்மட்ட மேம்பாலத்தை முடக்கினார்கள், பண்பாட்டுச் சின்னம் கண்ணகி சிலையை அகற்றினீர்கள், 10,000 சாலைப் பணியாளர்கள் வாழ்வைக் குலைத்தவர்கள், மக்கள் நலப் பணியாளர்கள் வாழ்வைச் சிதைத்த அ.தி.மு.க. ஆட்சி, செம்மொழிப் பூங்காவை சிதைத்தவர்கள். இவை மட்டுமல்ல தி.மு.க. ஆட்சி கொண்டு வந்த, “நமக்கு நாமே திட்டம்” –- தி.மு.க. நடைமுறைப்படுத்திய, “அண்ணா மறுமலர்ச்சி திட்டம்”!
தி.மு.க. ஆட்சி கொண்டு வந்த, “சமத்துவபுரத் திட்டம்” !தி.மு.க. ஆட்சி கொண்டு வந்த, “உழவர் சந்தை திட்டம்” –
தி.மு.க. ஆட்சி கொண்டு வந்த, மக்கள் பிரச்சனைகளை தீர்த்த, “மனுநீதி திட்டம்” – தி.மு.க. ஆட்சி கொண்டு வந்த கலைஞர் “காப்பீட்டுத் திட்டம்” தி.மு.க. ஆட்சி கொண்டு வந்த, “சமச்சீர் கல்வி திட்டம்” !தி.மு.க. ஆட்சி கொண்டு வந்த “மினி பேருந்து திட்டம்” – முதலான திட்டங்களையெல்லாம் சிதைத்தது யார் என்பதையும் மறந்து விட்டாரா எதிர்க்கட்சி தலைவர்.
செய்ததெல்லாம் தி.மு.க. ஆட்சி! சீர்குலைத்ததெல்லாம் அ.தி.மு.க. ஆட்சி. ஏமாற்றாதே ஏமாறாதே என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் சொல்லெடுத்துக் கூறி, கவிஞர் வாலி அவர்கள் எழுதி, அடிமைப்பெண் படத்தில் எம்.ஜி.ஆர். பாடுவது போல் அமைந்த பாடலின் தொடர்களையே நினைவுபடுத்துகிறோம். ஏமாற்றாதே ஏமாற்றாதே –- ஏமாறாதே ஏமாறாதே – என்று கூறப்பட்டுள்ளது.