சென்னை, ஜூலை 23- பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது அரசியல் களத்தை அதிர வைத்தது. ஒரு கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லையா? என்ற விமர்சனங்களும் எழுந்தன. இந்த சூழ்நிலையில் சென்னை மாநகர காவல்துறை புதிய ஆணையராக அருண் நியமிக்கப்பட்டார். அவர் பதவியேற்ற அன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘ரவுடிகளுக்கு, அவர்களது மொழியிலேயே பதிலடி கொடுக்கப்படும்’’ என்று எச்சரிக்கை மணி அடித்தார். இதையடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான ரவுடி திருவேங்கடம் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
காவல்துறையினரின் இந்த நடவடிக்கை பொது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
சென்னை காவல்துறை ஆணையர் அருணின் இந்த அதிரடி நடவடிக் கையை கண்டு ரவுடிகள் பயந்து தலைத்தெறிக்க ஓட்டம் பிடித்து வருகின்றனர். ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் அடைக்கலம் புகத் தொடங்கி உள்ளனர்.
தமிழ்நாட்டில் அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர்ப் பலகை
வணிகர் சங்கத் தலைவர் விக்ரம ராஜா தகவல்
சென்னை, ஜூலை 23- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகளின் பெயர் பலகைகளையும் படிப்படியாக தமிழில் கொண்டு வருவோம் என்று முதலமைச்சரை சந்தித்து பேசியபின் விக்கிரமராஜா கூறினார்.
300 சதுர மீட்டருக்குள் கட்டட பரப்பளவு கொண்ட, 14 மீட்டர் உயரத்திற்குள் உள்ள வணிக கட்டடடங்களுக்கு கட்டட நிறைவு சான்றிதழ் பெறுவதில் இருந்து விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு செய்தமைக்காக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா மற்றும் நிர்வாகிகள், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் விக்கிரமராஜா கூறியதாவது: தமிழ்நாட்டில் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் இருக்கக் கூடிய கடைகளுக்கு சீல் வைக்கக்கூடிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. தமிழ்நாடு அரசு இதில் தேவையான நடவடிக்கை எடுத்து வணிகர்களுடைய வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அதே போல மின்சாரக் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளோம்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் யானைகள் வழித்தடத்தை உடனடியாக அமைக்க வேண்டும். இத னால் கடைகளை சீக்கிரமாக பூட்ட வேண்டிய நிலை இருக்கிறது. ஊட்டி வர்க்கிக்கு ஒன்றிய அரசு புவிசார் குறியீடு கொடுத்துள்ளது. அதை தமிழ்நாடு முதலமைச்சரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றோம்.
தமிழ்நாட்டில் உள்ள கடைகளின் பெயர் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என சங்கத் தின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகி றோம். படிப்படியாக விரைவில் அனைத்து பெயர் பலகைகளும் தமிழில் கொண்டு வரப்படும். தமிழ் நாட்டில் உள்ள 80 சதவீத வியாபாரிகள் தமிழில் பெயர் பலகை வைத்திருக்கிறார்கள்.
ஆனால் கார்ப்பரேட் கம்பெனிகள்தான் ஆங்கிலத்திலும், பிற மொழியிலும் பெயர் பலகைகளை வைத்திருக்கிறார்கள். சில இடங்களில் ஹிந்தியில்கூட பெயர் பலகை வைக்கிறார்கள். இந்த ஆபத்தை உணர்ந்துதான் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். தமிழ்நாட்டில் போக்கிரிகள், ரவுடிகளை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. இதற்கு என்ன மாதிரியான ஒத்துழைப்பு தேவையோ அதை வணிகர்கள் கொடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.