தந்தை பெரியாரின் அடிச்சுவட்டைப் பின்பற்றி பெண் விடுதலைக்காக குர லெழுப்பியவர்களில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி முக்கிய மானவர்.
இவர் தன்னுடைய அனுபவங்களை ‘My Experience as a Legislator’ நூலில் பதிவு செய்திருக்கிறார் முத்துலட்சுமி.
சென்னை மாகாண சட்டமன்றத்தில், சட்டமன்ற உறுப்பினராக நியமனம் செய்யப்பட்ட முத்துலட்சுமி, டிசம்பர் 1926 முதல் ஜூன் 1930 வரை இந்தப் பணியில் ஈடுபட்டார். பின்னர் சட்டமன்றத்தின் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அவரது பெயரை முன் மொழிந்தவர் இன்றைய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் தாத்தாவும், நீதிக்கட்சியைச் சேர்ந்தவருமான பி. டி. ராஜன்.
டாக்டர் முத்துலட்சுமி துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, நீதிக்கட்சியைச் சேர்ந்த
எம். கிருஷ்ணன் பேசியவை:
சட்டமன்றத்தில் நடந்த மானியக் கோரிக்கை விவாதங் களின்போதும், பொதுவான விவாதங்களின்போதும் பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுத்தவர் முத்துலட்சுமி.
உயர்நிலைப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு, அதுவும் ஆண் மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவப் பரிசோதனை நடைமுறையில் இருந்தது. இப்பரிசோதனை தொடக்கநிலைப் பள்ளிகளுக்கும், மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தவர் முத்துலட்சுமி. பெண்களில் மிகக் குறைவான சதவீதத்தினருக்கே உயர்கல்வி கிடைத்துவந்த நிலையைச் சுட்டிக்காட்டி, பெண்களுக்கான உயர்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்றார்.
பால்வினை நோயால் பாதிக்கப்படும் பெண்களுக்குச் சிகிச்சை அளிக்க, பெண் மருத்துவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பது அவருடைய முக்கியமான கோரிக்கை
. உள்ளாட்சி அமைப்புகளில் பெண் களுக்குப் பிரதிநிதித்துவம் வேண்டும், பெண் காவலர்கள் நியமிக்கப் பட வேண்டும் என்பது போன்ற அவரது முன்னெடுப்புகள் மிகவும் முன்னோடியானவை.
டாக்டர் முத்துலட்சுமியின் முக்கியமான பங்களிப்பாக இன்றளவும் கருதப்படுவது, தேவதாசி முறையை ஒழிப்பதற்கு சட்டமன் றத்தில் அவர் கொண்டுவந்த சட்ட முன்வரைவே. கோயில்களுக்குப் பெண்களைப் பொட்டுக்கட்டி நேர்ந்துவிடும் சமூகக் கொடுமையை எதிர்த்துச் சட்டமன்றத்தில் விரிவான கொள்கைப் போரை நடத்தியவர் முத்துலட்சுமி. இச்சட்டத்திற்கு முழுமையான ஆதரவைத் தெரிவித்து, 30.10.1927 நாளிட்ட ‘குடிஅரசு’ இதழில் பெரியார் எழுதினார். மேலும், சட்ட வரைவுக்கு முழுமையான ஆதரவு தெரிவித்து, அரசுக்குக் கடிதமும் எழுதினார்.