புதுக்கோட்டை, ஜூலை 22- புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஒன்றியத்தில் உள்ள விராச்சிலை கடைவீதியில் சுயமரியாதை இயக்கம், குடிஅரசு நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு ஒன்றியத் தலைவர் அ.தமிழரசன் தலைமை வகித்தார். மாவட்ட மகளிரணியைச் சேர்ந்த ம.புனிதா வரவேற்றார். மாவட்டக் காப்பாளர் ஆ.சுப்பையா, மாவட்டத் தலைவர் மு.அறிவொளி, மாநில ப.க.அமைப்பாளர் அ.சரவணன், மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில திராவிட மாணவர் கழகச் செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் கூட்டத்தின் நோக்கம் குறித்து தொடக்கவு ரையாற்றினார்.
கழக சொற்பொழிவா ளர் இராம.அன்பழகன் சிறப்பு ரையாற்றினார். அப்போது அவர் பேசு கையில் “விராச்சிலையில் நடைபெறும் இந்தப் பொதுக்கூட்டமானது முதல் கூட்டம் என்றாலும் தமிழர்கள் எப்போதும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். தந்தை பெரியாரின் பணிகளை, அவரது சேவைகளைப் பற்றியும் அவரது சேவையால் கொண்ட கொள்கையால் அவரது தீர்மானங்களால் தமிழ்நாடு எந்தளவுக்கு ஏற்றம் பெற்றிருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
அவரது கொள்கைகள் எல்லாம் சரிதான். அவர் பிள்ளையாரை உடைத்தார், அதைத்தான் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று சொல்பவர்கள் இன்னொன்றையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவர் ஒரு பிள்ளையார் சிலை யைத்தான் உடைத்தார். அதுவும் கொள்கைகளை விழிப்புணர்வுடன் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக.
ஆனால் இன்றைக்கு ஊர்கள் தோறும் நூற்றுக் கணக்கான பிள்ளையார்களை வைக்கிறார்கள், தெருக்கள் தோறும் போட்டி போட்டுக் கொண்டு மிகப் பிரம்மாண்டமான சிலைகளை வைத்து வணங்குகிறார்கள். பின்னர் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைக்கிறார்கள்.
அது பிளாஸ்டரால் செய்தது என்பதால் உடையாமல் இருக்கிறபடியால் தடிகொண்டு உடைத்து நொறுக்கி பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடுகிறார்கள் என்றால் அதிகளவில் பிள்ளையார்களை உடைப் பது பக்தியின் பேரால்தான் உடைக்கிறார்கள். அதனால்தான் தந்தை பெரியாரைப் பற்றியும் அவர் இந்த சமூகத்திற்கும் பெண்கள் முன்னேற்றத்திற்கும் பகுத்தறிவுக்கும் செய்த சேவைகளைப் பற்றி பரப்புரை செய்ய வேண்டியிருக்கிறது” என்று பேசினார்.
இந்நிகழ்வில் மேலும் திராவிடர் கழக மாவட்டத் துணைத் தலைவர் சு.கண்ணன், மாவட்டத் துணைச் செயலாளர் வெ.ஆசைத்தம்பி, மாணவரணியைச் சேர்ந்த ஆறு.பாலச்சந்தர், பெரியார் பிஞ்சு சு.க.கதிரவன், ம.மு.கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். விராச்சிலை மாரியப்பன் நன்றி கூறினார்.