அரூர், ஜூன் 22- திராவிட மாணவர் கழகம், திராவிடர் கழக இளைஞர் அணி சார்பில் 11-7-2024ஆம் தேதி புதுச்சேரியில் தொடங்கி சேலம் வரை வருகை தந்த நீட் ஒழிப்பு 3 ஆவது அணி பரப்புரை பயணக் குழுவினர் 14-7-2024 ஆம் தேதி இரவு 8 மணி அளவில் அரூர் வருகை தந்தனர்.
மாவட்ட திராவிடர் கழக காப்பாளர் அ.தமிழ்ச் செல்வன் தலைமையில் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவரும் திராவிட முன்னேற்ற கழக ஆதி திராவிட நலக்குழு மாநில துணைச் செயலாளருமான சா.ராஜேந்திரன், மேனாள் மாவட்ட இளைஞரணி தலைவர் இ.சமரசம், மாணவர் கழகப் பொறுப்பாளர் சூர்யா, ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர் என்.டி. குமரேசன், ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் சோலை துரைராஜ், மகளிர் அணி தோழர்கள் உமா, கல்பனா, மணிமேகலை, அம்மாபேட்டை மணி, கவிஞர்
மு. பிரேம்குமார், ராம்கி, தேசிய மக்கள் கட்சி நிறுவனர் இன முரசு கோபால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சாக்கன் சர்மா, பாலாஜி மற்றும் தோழர்கள் கலந்து கொண்டு திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, பயண ஒருங்கிணைப்பாளர் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் கொ.வேலு, பயண குழுத் தலைவர் வழக்குரைஞர் தம்பி பிரபாகரன், தலைமை கழக அமைப்பாளர் இளந்திரையன் மற்றும் பயண குழுவினர் அனைவருக்கும் பயனாடை அணிவித்து முழக்கமிட்டு வரவேற்றனர்
அரூரில் பரப்புரை.
15.7.2024ஆம் தேதி காலை 9:30 மணியளவில் அரூர் அண்ணா சிலை முன்பாக நீட் ஒழிப்பு பரப்புரை பயணக் கூட்டம் தொடக்க விழா மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சா.ராஜேந்திரன் தலைமையில் மாவட்ட திராவிடர் கழக காப்பாளர் அ.தமிழ்ச்செல்வன் அரூர் நகர செயலாளர் முல்லை ரவி முன்னிலையில் பேரூராட்சி மன்ற தலைவர் சூரிய தனபால் தொடங்கி வைத்தார் கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி கலந்து கொண்டு நீட் தேர்வு அபாயம் குறித்தும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் மருத்துவக் கனவை பறிக்கும் ஒன்றிய நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி சிறப்புரையாற்றினார்.
பரப்புரை பயணத்தில் தலைமை கழகம் வெளியிட்ட ரூபாய் 500க்கான புத்தகங்களை பேரூராட்சி மன்ற தலைவர் சூரிய தனபால், நகர திமுக செயலாளர் முல்லை ரவி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். பயணக் குழுவினர் மற்றும் அரூர் கழகத் தோழர்கள் இருசக்கர வாகனத்தில் நீட் எதிர்ப்பு முழக்கமிட்டு அரூர் பேருந்து நிலையம் வந்தடைந்தனர்.
அங்கு நீட் தேர்வின் அவலத்தையும் முறை கேட்டையும் அதனால் ஏற்படும் பாதிப்பு குறித்து தலைமைக் கழக அமைப்பாளர் இளந்திரையன் கொள்கை முழக்கமிட்டார். நீட் எதிர்ப்பு பயணக் குழுவின் பரப்புரை பயணம் அங்கு கூடியிருந்த மக்களிடம் மட்டுமல்லாமல், மாணவ-மாணவிகளின் கவனத்தை ஈர்த்தது. பரப்புரை பயணம் மக்களை பரபரப்பு அடைய வைத்தது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய திராவிடர் கழக ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர் என்.டி.குமரேசன். மகளிர் அணி தோழர்கள் கல்பனா, உமா, மணிமேகலை, அம்மாபேட்டை மணி, பாளையம், சஞ்சீவன், கவிஞர் பிரேம்குமார், வேப்பிலைப்பட்டி தோழர்கள் இ. சமரசம், சூர்யா, திருவள்ளுவன், ராம்கி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர் பாலாஜி, கவிஞர் கீரை பிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நீட் எதிர்ப்பு பிரச்சார பயணம் குறித்து அரூர் நகரில் விளம்பர பதாகை மற்றும் கழகக் கொடி , சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது.
மொரப்பூரில் நீட் எதிர்ப்பு பரப்புரை
அரூரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மொரப்பூருக்கு பயணக் குழுவினர் அணிவகுத்து ஆர்ப்பரித்து கொள்கை முழக்கமிட்டு வந்து அடைந்தனர். அங்கு நடைபெற்ற பரப்புரை பயணக் கூட்டத்திற்கு சிந்தல்பாடி கிளைக் கழக செயலாளர் பச்சையப்பன் தலைமையில் திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில், மேனாள் மாவட்ட இளைஞரணி தலைவர் இ.சமரசம் அனைவரையும் வரவேற்று ஒருங்கிணைத்து நடத்தினார்.
அங்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக நிர்வாகிகள் சமூக ஆர்வலர்கள் கழக சொற்பொழிவாளர் சே.மெ.மதிவதனிக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர். பேருந்து நிலையத்தில் பெருந்திரளாக கூடியிருந்த பொதுமக்களிடம் நீட் தேர்வால் ஏற் பட்ட பாதிப்புகள், அதனால் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் நிலை, பணம் படைத்தவர்களாலேயே நீட் தேர்வில் இடம் பெற முடியும் என்கின்ற கருத்தை வலியுறுத்தி தலைமைக் கழக சொற்பொழிவாளர் சே.மெ.மதிவதனி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் தனசேகரன், சூர்யா, திருவள்ளுவன் ஆகியோர் கலந்து கலந்துகொண்டு தாசரஅல்லி கிராமம் வழியாக பயணத்தை மேற்கொண்ட போது கிராம மக்கள் சாலையின் இரு பக்கமும் கூடியிருந்து வியப்புடன் பார்த்தனர். பயணக் குழுவினர் அவர் களுக்கு துண்டறிக்கை வழங்கினர் தொங்கநூர் வழியாக கடத்தூர் வந்து அடைந்தது பயணக் குழு.
கடத்தூரில் பரப்புரை!
அரூர் கழக மாவட்டம் கடத்தூர் வருகை தந்த பயணக் குழுவினருக்கு விடுதலை வாசகர் வட்ட தலைவர் தாழை.வ. நடராஜன் தலைமையில் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக செயலாளர் சொ.பாண் டியன், ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் மாயவன், திமுக,விசிக தோழர்கள் முன்னிலையில் மேளதாளம் முழங்க கழக காப்பாளர் அ.தமிழ்ச்செல்வன் கொள்கை முழக்கமிட மாவட்ட மகளிர் அணி தலைவர் முருகம்மாள், மகளிர் அணி தோழர்கள் உமா, கல்பனா, மொழி, கலா, பங்கஜம், மயில் ஆகியோருடன் இணைந்து கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். நீட் எதிர்ப்பு பயண குழுவினர் கழகத் தோழர்கள் திமுக, விசிக, காங்கிரஸ், மற்றும் பொதுமக்கள் மேளதாளம் முழங்க எழுச்சி முழக்கத்துடன் பேருந்து நிலையத்தை வந்து அடைந்தனர்.
பரப்புரை
அங்கு நடைபெற்ற பரப்புரை பயணக் கூட்டத்திற்கு ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் பெ.சிவலிங்கம் தலைமை தாங்கினார். நகர தலைவர் புலவர் இரா.நெடுமிடல் வரவேற்புரையாற்றினார். பேரூராட்சி மன்ற தலைவர் கு மணி பரப்புரையை தொடங்கி வைத்து பேசினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் சா.பாலையா கருத்துரை ஆற்றினார். நீட் தேர்வின் பேர பாயத்தை விலக்கி திராவிடர் கழக துணை பொதுப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி சிறப்புரையாற்றினார். நீட் தேர்வு குறித்து திராவிடர் கழக தலைமைக் கழகம் வெளியிட்ட 50 புத்தகங்களை துணை பொதுச்செயலாளர் மதிவதனியிடம் பேரூராட்சி மன்ற தலைவர் கோ.மணி, விசிக ஒன்றிய செயலாளர் சா.பாலையா பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் திராவிடர் தமிழர் பேரவை பொறுப்பாளர் பாடகர் இசையரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சி பேரூராட்சி துணைத் தலைவர் வினோத், வேப்பிலைப்பட்டி அ. தமிழரசன், தமிழ் மொழி, தீ.அமுல்செல்வம், காஞ்சனா, பங்கஜம், மயில், பெரியார், சூர்யா, திருவள்ளுவன், திமுக மதன், பவுத்த தம்மசீல், மற்றும் பலர் கலந்து கொண்டனர். பேருந்து நிலையத்தில் மேளதாளம் முழங்க கொள்கை முழக்கமிட்டு பரப்புரை செய்த நிகழ்வு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
சிங்காரப்பேட்டையில் பரப்புரை
நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலிறுத்தி திராவிடர் கழக இளைஞரணி – மாணவர் கழகம் சார்பில் தமிழ்நாடு தழுவிய அளவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஆணையை ஏற்று 11.07.2024 – முதல் தொடங்கி 15.07.2024 வரை அய்ந்து நாட்கள் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் 5 மய்யங்களில் 5 குழுக்கள் நீட் தேர்வு பாதிப்புகளை விளக்கி இருசக்கர வாகனப் பரப்புரைப் பிரச்சார பயணம் மேற்கொண்டு வந்துள்ளன.
இப்பிரச்சார பரப்புரை பெரும் பயண 3-ஆம் குழு கிருட்டினகிரி மாவட்ட வருகைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட எல்லை சிங்காரப்பேட்டையில் அனைத்து கட்சி சார்பில் இருசக்கர வாகனப் பரப்புரை பயண 3ஆம் குழுவிற்கு மாநில இளைஞரணி துணைச்செயலாளர் வழக்குரைஞர் தா.தம்பி பிரபாகரன் தலைமையில் பயணக் குழு ஒருங்கிணைப்பாளர் மாநில இளைஞரணி துணைச்செயலாளர் கோ.வேலு, தலைமை கழக அமைப்பாளர் த.சீ.இளந்திரையன் உள்பட பயணக்குழுவினர் 14.07.2024 – அன்று கிருட்டினகிரி மாவட்டம் ஊற்றங்கரை ஒன்றியம் சிங்காரப்பேட்டை வருகைக்கு மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி தலைமையில், ஒன்றியத் தலைவர் அண்ணா அப்பாசாமி, மாவட்ட இளைஞரணி தலைவர் சீனிமுத்து இராசேசன், மேனாள் மண்டலத் தலைவர் பழ.வெங்கடாசலம், ப.க.நிர்வாகி சித.அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இராம.சகாதேவன் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மூர்த்தி, கிருட்டினகிரி மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் சந்திரன் ஆசிரியர் பயண குழுவினருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றார்.
தி.மு.க. ஒன்றிய செயலாளர் எக்கூர் செல்வம், கழக இளைஞரணி சரவணன், மற்றும் தி.மு.க., விசிக., சிபிஅய், சிபிஅய் (எம்), உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளும் தோழர்களும் பங்கேற்று நீட் ஒழிப்பு இருசக்கர வாகனப் பரப்புரை பயணக் குழுவிரை சிறப்பாக வரவேற்றனர். முன்னதாக அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இருசக்கர வாகனப் பரப்புரை பிரச்சார பெரும் பயணக் கூட்டத்தில் திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி நீட் தேர்வின் மோசடிகளை விளக்கியும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் அணுகுண்டுதான் நீட் தேர்வு என்பதை எடுத்துக் கூறியும் சிறப்புரையாற்றினர். இறுதியாக ஒன்றியச் செயலாளர் செ.சிவராஜ் நன்றி கூறினார்.