ரயில் விபத்துகள் அன்றாட செய்திகளா?

Viduthalai
4 Min Read

ரயில் விபத்துகள் என்பன இதற்கு முன்பெல்லாம் எப்பொழுதோ நடக்கும் அரிய தகவலாகும். ஆனால் அண்மைக் காலமாக குறிப்பாக பிஜேபி ஆட்சியில் ரயில் விபத்துகள் என்பவை சர்வ சாதாரணமாகி விட்டன.
23.11.1956இல் அரியலூரில் மிகப் பெரிய ரயில் விபத்து நடந்தது. அதில் 250 பேர் மரணமடைந்தனர். இதற்குப் பொறுப்பேற்று அன்றைய ரயில்வே துறை அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரியும், துணை அமைச்சர் ஓ.வி.அளகேசனும் பதவியை ராஜினாமா செய்தனர்.
அந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் கடந்த அய்ந்தாண்டுகளில் பல ரயில்வே அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டியிருந்திருக்கும்.
கடந்த 18ஆம் தேதிகூட உத்தரப்பிரதேசத்தில் திப்ருகர் – சண்டிகர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு 4 பேர் மரணம், 25 பேர் படுகாயம், 6 பேர் கவலைக்கிடம் என்று செய்தி வந்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் நேர்ந்த விபத்துகள் வருமாறு:
13 ஜனவரி 2022 பிகானேர்-குவஹாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் மைனாகுரி, ஜல்பைகுரியில் உள்ள நியூ டோமோஹானி ரயில் நிலையம் அருகே தடம் புரண்டன. 9 பேர் மரணம்.
25 மார்ச் 2022 – பவன் எக்ஸ்பிரஸ் நாசிக் அருகே தடம் புரண்டதால் இரண்டு பயணிகள் காயம்.
ஜனவரி 2023 – மார்வார் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து சூரியநாக்ரி எக்ஸ்பிரசின் 11 பெட்டிகள் தடம் புரண்டு பத்து பேர் காயமடைந்தனர்.
3 ஏப்ரல் 2023 – கேரள மாநிலம் கோழிக்கோடு, கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு வயது சிறுமி உட்பட மூன்று பேர் மரணம்.

15 மே 2023 – சென்னை-பெங்களூரு டபுள் டெக்கர் எக்ஸ்பிரஸ் பிசாநத்தம் நிலையம் அருகே தடம் புரண்டது.
2 ஜூன் 2023 கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் இரும்புத் தாது ஏற்றப்பட்ட சரக்கு ரயிலுடன் (சரக்கு ரயில்) மோதியது. ஷாலிமார் ரயில் நிலையத்தில் இருந்து எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரலுக்கு ரயில் சென்று கொண்டிருந்தபோது, விபத்து ஏற்பட்டது. 20க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டன. பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் ஹவுராவை நோக்கி எதிர் பாதையில் சென்று கடைசி சில பெட்டிகளில் மோதியது. மொத்தம் மூன்று ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதின.
1,200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் – 296 பேர் மாண்டனர்.
25 ஜூன் 2023 — மேற்கு வங்ம் ஒண்டாகிராம் ரயில் நிலையத்தில் சரக்கு ரயிலின் பின்புறம் மற்றொரு சரக்கு ரயில் மோதியது.
7 ஜூலை 2023 – தெலங்கானாவின் பொம்மைப் பள்ளி – பகிடிபள்ளி இடையே ஹவுரா செல்லும் ஃபலக் னுமா விரைவு ரயிலின் மூன்று பெட்டிகள் தீப்பிடித்தன.

23 ஆகஸ்ட் 2023 – மிசோரமில் உள்ள அய்ஸ்வாலில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் குருங் ஆற்றின் மீது கட்டப்பட்டு வரும் ரயில் பாலம் ஆற்றில் இடிந்து விழுந்ததில் குறைந்தது 26 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
26 ஆகஸ்ட் 2023 — அதிகாலை 5:15 மணியளவில் (IST) மதுரை சந்திப்பு அருகே நின்று கொண்டிருந்த லக்னோ-ராமேசுவரம் பாரத் கவுரவ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டு ஒன்பது பேர் கொல்லப்பட்டனர், 20 பேர் காயமடைந்தனர். எரிவாயு சிலிண்டரை மறைத்து கடத்தி வந்து, ரயில் பெட்டியில் சமையல் செய்து கொண்டிருந்ததால் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
23 செப்டம்பர் 2023 – திருச்சி – சிறீ கங்காநகர் ஹம்சஃபர் எஸ்எஃப் எக்ஸ்பிரசின் பெட்டியில் வல்சாத் ரயில் நிலையத்தைக் கடக்கும் போது தீ விபத்து ஏற்பட்டது.

26 செப்டம்பர் 2023 மதுராவில் உள்ள ஷகுர் பஸ்தியில் இருந்து புறப்பட்ட ரயில், தடம் புரண்டு, நிலையத்தில் உள்ள பிளாட்பாரம் மீது ஏறியது.
11 அக்டோபர் 2023 ஆனந்த் விஹார் டெர்மினல்-காமக்யா சந்திப்பு வடகிழக்கு எக்ஸ்பிரசின் 6 பெட்டிகள் பீகாரின் ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டதில் 4 பேர் உயிரிழந்தனர் – 70க்கும் மேற் பட்டோர் காயமடைந்தனர்.
29 அக்டோபர் 2023 – ஆந்திரப் பிரதேசம், விஜயநகரம் மாவட்டத்தில், விசாகப்பட்டினம்-பலாசா பயணிகள் ரயில் மோதியதில், விசாகப்பட்டினம்-ராயகடா பயணிகள் ரயில் தடம் புரண்டு 14 பேர் கொல்லப்பட்டனர் – 50 பேர் காயமடைந்தனர்.
31 அக்டோபர் 2023 – சுஹேல்தேவ் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜின் வெளிப்புற பகுதியில் தடம் புரண்டது.
நவம்பர் 15 2023 – உத்தரப் பிரதேசத்தில் எட்டாவா அருகே டில்லி-தர்பங்கா சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரசில் தீ விபத்து ஏற்பட்டது.
28 பிப்ரவரி 2024 – ஜார்க்கண்டின் ஜம்தாரா-கர்ம டாண்டில் உள்ள கலஜாரியா அருகே ரயிலில் அடிபட்டு குறைந்தது இரண்டு பேர் மரணமடைந்தனர், மேலும் பலர் காயமடைந்தனர்.

15 ஜூன் 2024 – எர்ணாகுளம்-ஹஸ்ரத் நிஜாமுதீன் மிலேனியம் எக்ஸ்பிரஸில் தூங்கிக் கொண்டிருந்த கேரளாவைச் சேர்ந்த 62 வயது முதியவரின் மேல் மேலே உள்ள படுக்கை பயணியுடன் விழுந்ததால் அவர் இறந்தார்.
17 ஜூன் 2024 — மேற்கு வங்கத்தில் உள்ள ரங்கபாணி ரயில் நிலையம் அருகே கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ்மீது சரக்கு ரயில் மோதியது. பத்து பேர் இறந்ததாகவும், குறைந்தது 60 பேர் காயமடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டது.
18 ஜூலை 2024 – திப்ருகர்-சண்டிகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் 12 பெட்டிகள் உத்தரப் பிரதேசத்தின் கோண்டாவில் தடம் புரண்டதில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்தனர் மற்றும் 25 பேர் காயமடைந்தனர்.
மூன்று ஆண்டுகளில் ரயில் விபத்துகள் இத்தனை என்றால் ஒன்றிய பிஜேபி அரசின் நிர்வாகம் எந்த யோக்கியதையில் இயங்குகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *