மனித வாழ்வின் பெருமை என்பது அதன் மூலம் கிடைக்கும் – மகிழ்ச்சியின் அளவைப் பொறுத்ததாகும்.
இயந்திர மனிதர்களாக எத்தனையோ பேர் வாழுகிறார்கள் – பிறகு மறைந்து விடுகிறார்கள்.
அதேபோல தந்திர மனிதர்களாக பலர் பிறரை எப்படியெல்லாமோ ஏமாற்றி, பணத்தாலும், செருக்காலும் உச்சத்திற்குச் சென்று, இறுதி நாள் களில் பலரால் மதிக்கப்படாதது மட்டுமல்லாமல், சமூகத்தால் மிதிக்கப்பட்டு, கேவலப்படுத்தப்பட்டு அவப் பெயருடன் மறைகிறார்கள்!
ஆனால், சுதந்திர மனிதர்கள் தங்களது தனித்தன்மையோடு, யாருக்கும் எதற்கும் அடிமையாகாமல், தன் பெண்டு, தன் பிள்ளை என்ற சின்னதோர் கடுகு உள்ளத்தோடு வாழாமல், மக்களுக்குத் தொண்டூழியம் செய்வதே தமக்கு மகிழ்ச்சிக்கான ஊற்று என்று கருதி, தனது வாழ்வு தனக்கானது மட்டுமோ அல்லது தனது ரத்த உறவு குடும்பத்திற்கு மட்டுமோதான் உரியது என்று எண்ணாமல் “உலகின்புறுவது கண்டு யாம் இன்புறுகிறோம்” என்ற இலக்கோடு வாழ்ந்து – மறைந்தும் மறையாமல் வாழ்கின்ற வரலாற்றுப் புகழ் பெற்றோர் பலர்!
அறிஞர் அண்ணா எழுதிய “வேலைக்காரி” திரைப்படத்தில் பகுத்தறிவு, சுயமரியாதைக் கவிஞர் – உடுமலை நாராயண கவி அவர்கள் எழுதிய பாடல் ஒன்றில்,
“உலகம் பலவிதம் – அதில்
ஒவ்வொன்றும் ஒருவிதம்”
என்பதற்கேற்ப, பலருண்டு.
புரிந்து கொண்டு வாழ்ந்தால் அனைவருக்கும் பலனுண்டு!
முகமனையே, முகஸ்துதியையே மூலதன மாக்கி முதலில்லா வியாபாரத்தில் செழித்து உயர்ந்தவர்கள் அந்தப் பலரகங்களில் ஒன்று!
மனிதர்களின் பலவீனத்தின் உச்சம் இந்த முகஸ்துதி – என்ற போலிப் புகழுரை. இந்த மயக்க மருந்தை சுவாசித்து எப்போதும் வாழ்ந்து – வாழ்வின் இறுதியில் “அய்யோ, நம் உயரம் நமக்குத் தெரியாமலேயே நாம் வாழ்ந்தது வீழ்ந்து விடவோ” என்று இறுதிக் காலத்தில் எண்ணி வருந்தி வருந்தி வாழ்வின் இறுதிநிலைத் தொடுவது!
இறுதியிலும் – மகிழ்ச்சி மனிதர்களுக்கு எப்போதும் கிட்டும் நிலை அடைய, ஒரே வழி தனக்கென வாழாது, பிறர்க்குரியவர்களாக நாம் நம்மை ஆக்கிக் கொள்வதுதான் சாலச் சிறந்த ஒரு வழி!
வறுமை, வசைகள் அத்தகைய மாமனிதர் களை அசைத்துக்கூடப் பார்க்க முடிவதில்லை.
கசப்பான அனுபவங்களை வாழ்க்கைக்குரிய இயல்புகளாக எண்ணி, புகழ் போதைக்கு அடிமையாகாத சுதந்திர மனிதர்களாக உயர்ந்து திருப்தியான உயர்நிலை வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.
பிறருக்கு உதவி, அதன்மூலம் தமக்கு வரும் இன்பத்தையே தமது வாழ்வின் நிரந்தர லாபம் என்று கருதி உறுதியுடன் வாழ்கைப் பாதையில் செம்மாந்து நடந்து – செழுமையே இதுதான். புரிந்து கொள்ளுங்கள்.
“மனிதர்கள் தானாகவும் பிறக்கவில்லை
தனக்காகவும் பிறக்கவில்லை
எனவே தொண்டறம் நடத்துங்கள்!”
என்ற “தந்தை பெரியார்தம் அறிவுரை
போன்ற அறவுரைப்படி ஆக்கம் தேடுங்கள்.
ஊக்கமுடன் உதவுங்கள்.
‘நாம் எவ்வகை மனிதர்?’ என்ற கேள்வியைக் கேட்டு விடைகாண முயலுங்கள்.