சென்னை, ஜூலை 21- சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் மணவழகர் மன்றத்தின் 68ஆவது ஆண்டு முத்தமிழ் விழா 19.7.2024 அன்று மாலை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி கே.ஞானப்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. மூத்த வழக்குரைஞர் ல.சுந்தரேசன் முன்னிலையில் மணவழகர் மன்ற செயலாளர் கே.கன்னியப்பன் அனைவரையும் வரவேற்று உரையாற்றி னார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மணவழகர் மன்ற செயலாளர் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விழாவில் தொடக்க உரையாற்றினார்.
கடந்த சில நாள்களாக தொடர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவதால் தொண்டை வலி, நீண்ட நேரம் அமர்ந்திருக்க முடியாது. தொண்டுக்கு ஓய்வு கூடாது. மருத்துவர்கள் தொண்டைக்கு ஓய்வு கொடுக்குமாறு (voice rest) கூறியுள்ளனர்.
முத்திரை பதிக்கின்ற அமைச்சர் மா.சு. என்கிற மாசிலாத மா.சுப்பிரமணியன் அண்மையில் அமெரிக்காவுக்குச் சென்றார். அங்கே உள்ள தமிழ் அமைப்புகளின் FETNA நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அமெரிக்காவிலுள்ள பிரபலமான மருத்துவமனைகளில் பேசி யுள்ளார். தமிழ்நாடு மருத்துவத்துறையின் செயல்பாடுகள், நடவடிக்கைகள் குறித்து ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் பேசியுள்ளார்.
ரயில்வேத்துறையில் லாலு பிரசாத் அமைச்சராக இருந்தபோது கட்டண உயர்வே இல்லாமல் சாதனைகளை செய்தார். அவரை அழைத்துப் பாராட் டினார்கள், நம்முடைய அமைச்சர் மா.சு.வை பாராட்டியுள்ளனர். இவர்கள் பிற் படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து சாதனைகள் செய்தார்கள் என்று பாராட்டியுள்ளனர்.
நம்முடைய அமைச்சர் தகுதி, திறமை என்பது மோசடி என்பதற்கு உதாரணம் ஆவார். இங்கே பேராசிரியர் காதர் மொய்தீன் உள்ளார். மதம் வேறாக இருந்தாலும் மனம் ஒன்றுபட்டு இருப்பதுதான் இந்த இயக்கத்தின் சிறப்பு. யாவரும் கேளிர் என்பதுதான் தத்துவம். திரு.வி.க. அவர்கள் உலகம் ஓர் குலம் என்ற மிகப்பெரிய தத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்தவர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர் இராஜா முத்தையா செட்டியார் அவர்கள் – மணவழகர் மன்றத்துக்கு அடித்தளமாக விளங்கியவர். அறக்கட்டளைகள் அறைக் கட்டளைகளாகக் கூட பல இடங்களில் இல்லை.
அண்ணா, கலைஞர் என்று இங்கு பேசாத தலைவர்களே இல்லை.
தந்தைபெரியாரைப்போல், பாதை போட்ட தலைவர் திரு.வி.க. ஆவார்.
மணவழகர் மன்றத்தின் அறக்கட்டளை பொறுப்பேற்று மேனாள் நீதிபதி பு.இரா.கோகுலகிருஷ்ணன் பணியாற்றினார். அரு.இலட்சுமணன் மகன் சுந்தரேசன் என்று உயிரோட்டமுள்ளதாக தொடர்ந்து இயங்கிவருகிறது இந்த அமைப்பு. நூற்றாண்டைக் கடந்த தலைவர் திரு.வி.க. பெயரால் உள்ள அமைப்பு மணவழகர் மன்றம்.
கலைஞர் நூறறாண்டு, சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே என்று சர் ஜான் மார்ஷல்அறிக்கை வெளியிட்டதன் நூற்றாண்டு, தவத்திரு தமிழ்த்திரு குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு, தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட சுயமரியாதை இயக்கத்தின் நூற் றாண்டு, குடிஅரசு நூற்றாண்டு என நூற்றாண்டுகளைக் கொண்டாடி வருகிறோம்.
சுயமரியாதை இயக்கத்துடன் தொடர்புடையவர் திரு.வி.க.
தந்தைபெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார் என்று சொன்னாலும், அதற்கு முன்னதாகவே நாயுடு, நாயக்கர், முதலியார் என்று ஜாதி பட்டத்தை துறந்தவர்கள் நம் தலைவர்கள். வரதராஜூலு, பெரியார் ஈ.வெ.ராமசாமி, திரு.வி.க. என தலைவர்கள் தொண்டாற்றினார்கள்.
காஞ்சிபுரத்தில் காங்கிரசு மாநாட்டிலிருந்து தந்தைபெரியார் வெளியேறினார். இருவேறு கருத்துகள், கொள்கைகள் கொண்டிருந்தாலும் பண்பாடு காத்தனர். திரு.வி.க. ஆழ்ந்த சைவப்பற்றாளர்.
சுயமரியாதை இயக்கம் 1925 இல் தொடங்கப்பட்டது. 36.11.1933இல் ஈரோட்டில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் கலந்துகொண்டு திரு.வி.க. பேசினார். “சுயமரியாதை இயக்கத்துக்கு பெரியார் தந்தை. நான் தாய். அந்த குழந்தை தாயுடன் வளராது, தந்தையுடன் வளர்கிறது” என்று திரு.வி.க. பேசினார். இனமானப்பேராசிரியர் தவறாமல் இதனைக் குறிப்பிட்டுப் பேசுவார்.
மனிதன் சுயமரியாதையோடு வாழ வேண்டும்.
பிறவி பேதம் அழித்தல், ஒழித்தல், ஆண், பெண் பேதமும் பிறவி பேதம்தான். பெண்ணின் பெருமை பற்றி சொன்னவர் திரு.வி.க.
சுயமரியாதை இயக்கத்தில் திரு.வி.க., தந்தைபெரியார் உழைத்த உழைப்பு-எல்லோருக்கும் கல்வி, சொத்துரிமைக்காக பாடுபட்ட இயக்கம் இந்த இயக்கம்.
அரசியல் பயில வேண்டுமென்றால், இன்றைய தலைமுறையினர் திரு.வி.க. எழுதிய திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் நூலைப்படிக்க வேண்டும். அதிலே அத்துணைத் தலைவர்கள் பற்றியும் அவருடைய நடையில் அழகான தமிழில் எழுதியுள்ளார்.
இரண்டு தத்துவங்கள், மாறுபட்ட கொள்கைகள் உடையவர்களாக இருந்தாலும், பண்பாடு, அரசியல் நனி நாகரிகம் காத்தவர்கள்.
– இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் தனது உரையில் குறிப்பிட்டார்.
விழாவில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாநில சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.
விழா நிறைவாக மணவழகர் மன்ற துணைச் செயலாளர் சு.கருணாநிதி நன்றியுரையாற்றினார்.
திராவிடர் கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, வழக்குரைஞர் சு.குமாரதேவன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, தமிழ்நாடு மூதறிஞர் குழு பொருளாளர் த.கு.திவாகரன், உடுமலை வடிவேல், இளைஞரணி மாநில துணைச் செயலாளர் சோ.சுரேஷ், கொடுங்கையூர் கோ.தங்கமணி, தங்க.தனலட்சுமி, க.கலைமணி, சிவக்குமார், பெரியார் நூலக வாசகர் வட்ட பொறுப்பாளர்கள், மணவழகர் மன்ற பொறுப்பாளர்கள் உள்பட பலர் விழாவில் பங்கேற்றனர்.
நூற்றாண்டு கண்ட தலைவர்களின் அரசியல், நனி நாகரிகம், பண்பாடுகளை இன்றைய தலைமுறையினர் அறிந்து பின்பற்ற வேண்டும் சென்னை மணவழகர் மன்றத்தின் 68ஆவது ஆண்டு முத்தமிழ் விழாவில் தமிழர் தலைவர்
Leave a Comment