சென்னை, ஜூலை 21- ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய மூன்று குற்றவியல் சட்டங்களைக் கண்டித்து நடைபெற்ற கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் 20.07.2024 அன்று மாலை 5 மணி முதல் 8 மணி வரை தி.மு.க. சட்டத்துறை சார்பில், “ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள் என்பது மக்களுக்கு எதிரானது, ஏன்?” எனும் தலைப்பில் ஒரு கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்வுக்கு நாடாளுமன்ற மாநிலங் களவையின் உறுப்பினரும், தி.மு.க. சட்டத்துறை செயலாளருமான மூத்த வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ அவர்கள் தலைமையில் தி.மு.க. சட்டத்துறை துணைச் செயலாளர் கே.சந்துரு அனைவரையும் வரவேற்றுப் பேசினார். சட்டத்துறை தலைவர் மூத்த வழக்குரைஞர் இரா.விடுதலை, சட்டத்துறை இணைச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன், ஆகியோர் முன்னிலை ஏற்றனர். தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சிறப்பு அழைப் பாளர்களாக பங்கேற்று சிறப்பித்தனர்.
தி.மு.க. வழக்குரைஞர்கள் மற்றும் தொண்டர்களால் நிறைந்திருந்த அந்த அரங்கில் பேசப்படப் போகும் சட்ட நுணுக்கங்கள் பற்றிய கையேடு வழங்கப்பட்டிருந்தது. எல்.இ.டி திரையில் பேசுகின்ற கருத்துக்கேற்ப அந்த கையேட்டின் நகல் திரையிடப்பட்டு, ஒரு சட்ட வகுப்பு போல அந்த கருத் தரங்கம் நடைபெற்றது. தலைமை ஏற்றிருந்த மூத்த வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ சிறப்பாக தனது தலைமை உரையை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் “ஏற்கெனவே உள்ள இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும், இப்போது கொண்டுவரப்பட்டிருக்கும் சட்டங்களுக்கும் வேறுபாடு கொஞ்சம்தான். இதற்காக அவை கொண்டுவரப்படவில்லை. சமஸ்கிரு தத்தை திணிப்பதைத் தவிர அதில் வேறொன்றும் இல்லை” என்று ஆணித் தரமாக நிறுவினார்.
நீதிபதிகளுக்கே குழப்பத்தை ஏற்படுத்துகின்றன!
இறுதியாக ஆசிரியர் உரையாற்றினார். ஆசிரியர் எடுத்த எடுப்பிலேயே, ”இந்த சட்டங்கள் எங்களுக்கே குழப்பமாக இருக்கிறது நீதிபதிகளே சொல்கின்றனர்” என்று சொல்லி மூன்று சட்டங்கள் எப்படிப்பட்டவை என்று உணர்த்திவிட்டார். தொடர்ந்து அவர், “நீதிபதிகளுக்கும் புரியாமல், வழக் குரைஞர்களுக்கும் புரியாமல் போனால் நிலைமை என்னாகும்?” என்று கூடியிருந்த வழக்குரைஞர்கள் மத்தியில் பொருள் பொதிந்த ஒரு கேள்வியை அரங்கின் முன் வைத்தார். இந்த சட்டங்கள் பற்றி ஏற்கனவே தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஒன்றிய அரசுக்கு எழுதிய கடிதத்தில், குறிப்பிட்டிருந்த ‘அவசர கோலத்தில் அள்ளித்தெளிக்கப்பட்டவை’ என்ற சொற்றொடரை நினைவூட்டினார். மேலும் அவர், “இந்த மூன்று சட்டங்களின் பெயரைச் சொல்வதற்குள் வயிற்று வலி வந்து மருத்துவமனைக்குத்தான் செல்ல வேண்டும்” என்று சொல்லி கலகலப்பூட்டினார். “அவர்களின் கனவான ஹிந்து ராஷ்டிரத்தை உருவாக்குவதற்கான அடுத்த கட்டமே தவிர வேறொன்றுமில்லை” என்று சொல்லி, இந்த சட்டங்களுக்கு பின்னா லிருக்கும் ஆபத்தை எடுத்துரைத்தார்.
நீட் போல் இதை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்!
சட்டங்களின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்? இந்த சட்டங்களின் நோக்கம் என்னவாக இருக்கிறது? என்பதை விளக்கிப் பேசினார். “150 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் சட்டங்களை மாற்ற வேண்டுமென்றால் எதிர்க்கட்சிகளுடன் எவ்வளவு விவாதம் செய்ய வேண்டும்? அவ்வாறு விவாதம் நடைபெற்றதா? அவர்கள் செய்திருப்பது சட்ட திருத்தங்களா? சட்ட மாற்றங்களா?” என்று கேள்விகளை அடுக்கி விட்டு, “இது மாநில உரிமைப் பறிப்பு மட்டுமல்ல, மனித உரிமைப் பறிப்பும் கூட” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.
”நாம் போராடுவது தனி மனிதர் களுக்காக அல்ல, ஒரு கட்சிக்காக அல்ல, மனித உரிமைகளூக்காக! நீட் கூடாது என்று தமிழ்நாடு மட்டும் தான் சொன்னது. இன்றைக்கு இந்தியா முழுவதும் அந்தக் குரல் கேட்கிறது. அப்படியொரு நிலைமையை இதற்கும் ஏற்படுத்த வேண்டும். ஆகவே கருத்தரங்கோடு நில்லாமல் இதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். ஏனென்றால், மக்கள்தான் ஜனநாயகத்தின் எஜமானர்கள்! ‘We the people of India‘ என்றுதான் அரசமைப்புச் சட்டத்தின் முதல் கூறு சொல்கிறது என்று சொல்லி பலத்த கைதட்டல்களுக்கிடையே தனது உரையை நிறைவு செய்தார்.
முன்னதாக தலைமை ஏற்றிருந்த மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் இருவரும் ஆசிரியருக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தனர். இறுதியாக தி.மு.க. சட்டத்துறை இணைச் செயலாளர் கே.எஸ்.இரவிச்சந்திரன் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
கலந்து கொண்டு
சிறப்பித்தோர்!
நிகழ்ச்சியில் தி.மு.க. சட்டத்துறை இணைச் செயலாளர்கள் என்.மணிராஜ், கே.எம்.தண்டபாணி, சு.ராதாகிருஷ்ணன், பி.ஆர்.அருள்மொழி, இரா.தாமரைச் செல்வன், எழும்பூர் தொகுதி மேனாள் சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் ரவிச்சந்திரன், சட்டத்துறை தி.மு.க. துணைச் செயலாளர்கள் ஜெ.பச்சையப்பன், வி.வைத்தியலிங்கம், எஸ்.தினேஷ், தி.மு.க. தலைமைக் கழக வழக்குரைஞர்கள் ப.கணேசன், சூர்யா வெற்றிகொண்டான், கே.ஜே.சரவணன், வி.கவிகணேசன், ஏ.என்.லிவிங்ஸ்டன், கே.மறைமலை, தி.மு.க. மாவட்ட அமைப்பாளர்கள் துரை. கண்ணன், ஜெ.காணிக்கை நாதன், ஜே.லட்சுமிகாந்தன், வே.தேவேந்திரன், சி.கணேஷ் பாண்டியன், தரமணி ஜெகதீசன், எஸ்.கோபி, பெ.வினோத், பி.கே.நாகராஜ், என்.கனகராஜ், பி.எஸ்.ரமேஷ், திராவிடர் கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, திராவிடர் கழக வழக்குரைஞரணித் தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.குணசேகரன், ப.க.மாநிலத்தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், வழக்குரைஞர்கள் ந.விவேகானந்தன், துரை அருண், வடசென்னை மாவட்டச் செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், சா.தாமோதரன், நெல்லுப்பட்டு ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறக்கச் செய்தனர்.
புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள் கொண்டுவரப்பட்டதே ஹிந்து ராஷ்டிரம் அமைப்பதற்கான முன்னோட்டம்தான் தி.மு.க. சட்டத்துறை நடத்திய கருத்தரங்கில் கழகத் தலைவர் எழுச்சியுரை!
Leave a Comment