சென்னை, ஜூலை 21 பெண்ணே, உன்னுடைய லட்சியங்களை அடைவதற்கு எது தடையாக வந்தாலும், உடைத்துப் போடு என்று, ஒரு பெண்ணைப் பார்த்து ஒரு தலைவர் சொல்லக்கூடிய ஒரு பெண்ணியவாதி உலகத்தில் வேறு யாரும் இருக்க முடியாது, தந்தை பெரியாரை தவிர என்று திராவிட முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி அவர்கள் கூறினார்.
இன்று (21.7.2024) சென்னை பெரியார் திடல் எம்.ஆர்.இராதா மன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி அவர்கள் பெரியார் விஷன் ஓடிடியைத் தொடங்கி வைத்து வாழ்த் துரையாற்றினார்.
மட்டமற்ற பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன்!
லிபர்ட்டி கிரியேஷன் இன்று உருவாக்கி யிருக்கக் கூடிய பெரியார் விஷன் ஓடிடி பிளாட் பார்மை இன்றைக்கு மக்களுக்கு வழங்கக்கூடிய இந்த மிகச் சிறப்பான நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் மட்டமற்ற பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன்.
இந்நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்றிருக் கின்ற என்றும் என்னுடைய ஆசிரியராக, இளம்வயது முதல் எனது வழிகாட்டியாக, பல்வேறு சந்தர்ப்பங்களில் என்னை எத்தனையோ சோதனைகளைக் கடந்து அழைத்து வந்த, என் கரத்தைப் பிடித்து வந்த என்னுடைய ஆசிரியர் அய்யா அவர்களுக்கு என்னுடைய வணக்கத்தை, நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுயமரியாதைக்காரராகவே,
பெரியாருடைய சந்ததியாகவே…
எல்லா இடங்களிலும் சுயமரியாதைக் காரர்களாக இருப்பது மிகவும் கஷ்டம்தான். அதிலும், திரைப்பட உலகில் இன்னும் அதிகமாக பல சிரமங்கள், ஒவ்வொரு நாளும் நெருக்கடியில் இருக்கக்கூடிய ஒன்று. ஆனாலும், விடாப்பிடியாக தொடர்ந்து சுயமரியாதைக்காரராகவே, பெரியாருடைய சந்ததியாகவே வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய நடிகர் சத்யராஜ் அவர்களே,
திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,
லிபர்ட்டி கிரியேஷன் இயக்குநர் அன்புராஜ் அவர்களே,திராவிடர் கழகப் பொருளாளர் குமரேசன் அவர்களே,
பெரியார் விஷன் படைப்பாக்கத் தலைவர் மதிசீலன் அவர்களே,
திராவிடர் கழகத் துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களே,
திரைப்பட இயக்குநர் ஞானராஜசேகரன் அவர்களே,
அண்ணன் டிராஸ்ட்கி மருது அவர்களே,
இந்நிகழ்வில் உரையாற்றிய சகோதரி அருள்மொழி அவர்களே,
இந்நிகழ்வில் கலந்துகொண்டிருக்கக் கூடிய அத்துணை சுயமரியாதைக்காரர்களுக்கும் என்னுடைய வணக்கத்தை, வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெரியார் திடலிலிருந்துதான், லிபர்ட்டி கிரியேஷன் உருவாக முடியும்!
லிபர்ட்டி என்பதுதான் இன்றைக்கு இந்த நாட்டில் யாருக்குமே இல்லாத ஒரு விஷயமாக இருந்துகொண்டிருக்கக் கூடிய ஒரு சூழலில், பெரியார் திடலிலிருந்துதான், லிபர்ட்டி கிரியேஷன் உருவாக முடியும் என்பதை இன்றைக்கு நாம் நிரூபித்திருக்கின்றோம்.
ஏனென்றால், நாட்டில் எந்த இடத்திலும் எந்தவிதமான லிபர்ட்டியும் கிடையாது. ஊடகத் துறை நண்பர்களாக இருக்கட்டும்; சிந்தனையாளர்களாக இருக்கட்டும்; திரைப்படத் துறையில் இருப்பவர்களாக இருக்கட்டும்; அரசியல் தலைவர்களாக இருக்கட்டும்; எழுத்தாளர்களாக இருக்கட்டும்; யாருக்கும் பேச்சு உரிமை கிடையாது, சிந்தனை உரிமை கிடையாது – எந்த லிபர்ட்டியும் கிடையாது.
தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட
நம்முடைய தலைவர் தந்தை பெரியார்!
நாங்கள் சொல்வதுதான் லிபர்ட்டி என்று சொல்லக்கூடிய ஒரு சூழலில், இன்று, இங்கு ஒரு லிபர்ட்டி கிரியேஷனை உருவாக்கி, எல்லோருடைய லிபர்ட்டிக்காகவும், தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட நம்முடைய தலைவர் தந்தை பெரியார் அவர்களுக்காக ஒரு ஓடிடி பிளாட்பார்மை இன்று உருவாக்கி இருக்கின்றோம் என்றால், அது இந்த உலகத்திற்கே வழிகாட்டியாக இருக்கவேண்டிய, இருக்கக்கூடிய ஒரு மிக அற்புதமான செயலாகும்.
இங்கே அண்ணன் கலி.பூங்குன்றன் அவர்கள் உரையாற்றும்பொழுது, முதன்முதலாக கம்ப்யூட்டர் வந்தபொழுது, அது ஒரு பெரிய ரூம் அளவிற்கு இருக்கும். அதை பெரியார் பார்த்தபொழுது, ஒரு குழந்தையைப் போல மகிழ்ச்சியோடு இருந்ததைப்பற்றி எடுத்துச் சொன்னார்.
மனிதர்களை அடுத்த கட்டத்திற்கு,
அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும்!
ஒரு சயின்ட்டிபிக் இன்னோவெஷன் மேல், ஒரு புதிய முயற்சியின்மேல், தந்தை பெரியார் அவர்களுக்கு இருந்த நம்பிக்கை. அது மனிதர்களை அடுத்த கட்டத்திற்கு, அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும்.
தலைமுறை தலைமுறையாக அடிமையாக வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய மனிதனை, மனிதநேயத்தோடு பார்த்த ஒரு தலைவர், நிச்சயமாக அறிவியலை நேசிக்கத்தான் செய்வார்.
அப்படிப்பட்ட நம்முடைய தந்தை பெரியார் அவர்கள், எல்லா இன்னோவெஷனைப்பற்றியும் பேசியிருக்கிறார். இங்கே நம்முடைய இயக்குநர் அவர்கள் உரையாற்றும்பொழுது சொன்னார்.
இன்றைக்கு வரைக்கும் ஒரு ஜோக்ஸ் சொல்லுவார்கள். பெண்களுக்குச் சமைக்கத் தெரியுமா? என்னையும், அருள்மொழியையும் பார்த்தால்தான் இந்தக் கேள்வியைக் கேட்பார்கள்.
ஒரு பெரும்பான்மை சமுதாயத்தில் இருக்கக்கூடிய மனநிலை – ஒரு பெண் என்றால், சமைக்கத் தெரியவேண்டும். பெண் என்றால், இவற்றையெல்லாம் தெரிந்து வைத்திருக்கவேண்டும்.
இதையெல்லாம் இன்றைக்கு உடைக்கக்கூட முடியாத காலகட்டத்தில் நின்று கொண்டிருக்கக்கூடிய ஒரு சூழலில், என்றைக்கோ உடைத்த, இன்றைக்கு அதற்கு வழிகாட்டியாக இருக்கும் தலைவர்தான் தந்தை பெரியார் அவர்கள்.
இன்றைக்குப் பெண்கள் சொல்கிறர்கள், ”எனக்குக் கல்யாணம் வேண்டாம்; குழந்தை வேண்டாம்” என்று.
ஒரு ஆய்வில்கூட நாங்கள் பார்த்தோம், ”உலகத்திலேயே அதிக மகிழ்ச்சியான ஆண்கள் யார் என்று கேட்டால், திருமணமான ஆண்கள். மகிழ்ச்சியான பெண்கள் யார் என்று கேட்டால், திருமணம் ஆகாத பெண்கள்தான்.”
அதனால், இப்பொழுது நிறைய பெண்கள், ”எனக்குத் திருமணம் வேண்டாம்; எனக்கு குழந்தை வேண்டாம். உலகத்தில் நிறைய குழந்தைகள் இருக்கிறது; நான் பெற்றுக்கொள்ளவேண்டிய அவசியமில்லை” என்று சொல்கிறார்கள்.
உலகத்தில் வேறு யாரும் இருக்க முடியாது!
இவற்றையெல்லாம் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு சிந்தித்து, நமக்காக சொல்லிச் சென்றிருக்கின்றார். உன்னுடைய லட்சியங்கள், அதனை அடைவதற்கு எது தடையாக வந்தாலும், உடைத்துப் போடு என்று, ஒரு பெண்ணைப் பார்த்து ஒரு தலைவர் சொல்லக்கூடிய ஒரு பெண்ணியவாதி உலகத்தில் வேறு யாரும் இருக்க முடியாது, தந்தை பெரியாரைவிட!
எல்லாரும் ஒரு இஸ், பட் என்று வைத்துத்தான் சொல்வார்கள், பெண்ணியவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் எல்லாம்.
ஆனால், எந்த ஒரு இஸ்சும், பட்டும் இல்லாமல் பெண்ணியம் பேசிய ஒரே தலைவர் தந்தை பெரியார் அவர்கள்தான்.
ஒரு ‘டோட்டால் அய்க்னோ க்ளாஸ்ட்டாக” வாழ்ந்தவர், தந்தை பெரியார்!
அதேபோல, எந்த விஷயமாக இருந்தாலும், மனிதநேயம், அது அடித்தட்டில் இருக்கக்கூடிய மக்களாக இருக்கட்டும்; ஜாதி என்கிற பெயரால் தொடர்ந்து ஒடுக்கப்படக்கூடிய சமூகங்களாக இருக்கட்டும்; மக்களிடையே இருக்கக்கூடிய மூடநம்பிக்கைகளாக இருக்கட்டும் – எல்லாவற்றையும் உடைத்தெறிந்து, ஒரு ”டோட்டல் அய்க்னோ க்ளாஸ்ட்டாக” வாழ்ந்த ஒரு மனிதர்தான் தந்தை பெரியார் அவர்கள்.
இன்றைக்கு நம்முடைய இளைய தலைமுறை – இன்றைக்கு டெக்னாலஜி எல்லா வகையிலும் பயன்படுகிறது. நமக்கும், நமக்கு எதிராக முரணாக நிற்கக்கூடியவர்களுக்கும் அதே டெக்னாலஜியைப் பயன்படுத்தத் தெரியும்.
இன்றைக்கு அந்த டெக்னாலஜி வழியாக ஒவ்வொரு நாளும் தவறான செய்திகள்.வெறுப்பு, காழ்ப்பு.
மனிதநேயம், மனித இனத்திற்கே எதிராக இருக்கக்கூடிய சிந்தனைகளைத் தொடர்ந்து பரப்பிக் கொண்டே வருகிறார்கள். இது இங்கே மட்டுமல்ல, ஒவ்வொரு நாட்டிலும் நாம் பார்க்கக்கூடிய சூழல் என்னவென்றால், வெறுப்பு என்ற அரசியலை விதைத்துக்கொண்டே இருக்கிறார்கள். தூவிக்கொண்டே இருக்கிறார்கள்.
மக்களை மூடநம்பிக்கைகளை நோக்கி இழுத்துக்கொண்டே சென்று கொண்டிருக்கிறார்கள். 50, 60 ஆண்டுகளுக்குப் பின்னால் இழுத்துக்கொண்டு போகிறார்கள்.
தவறான செய்திகளைத் திரும்பத் திரும்பப்
பதிவு செய்கிறார்கள் எதிரிகள்!
அப்படிப்பட்ட ஒரு சூழலில், இந்த டெக்னாலஜியைத் தொடர்ந்து பயன்படுத்தி, இந்தத் தவறான செய்திகளைத் திரும்பத் திரும்பப் பதிவு செய்துகொண்டிருக்கின்றார்கள்.
அந்த சூழ்நிலையில், அந்த டெக்னலாஜியை நாமும் கையில் எடுத்து – அதிலும் இன்றைக்கு மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய ஒன்று என்னவென்றால், இத்தனை இளைஞர்களை இங்கே பார்க்கும்பொழுது, நிச்சயமாக நான் மறுபடியும் சொல்கிறேன் – இங்கே மேடையில் உள்ள திரையில்கூட என்னுடைய படத்தைப் போட்டு, பி.ஜே.பி.க்கு நன்றி என்று காட்டப்பட்டது.
நீங்கள் யாரும் தவறாக நினைத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக நான் தெளிவாகச் சொல்கிறேன். ஏன் பி.ஜே.பி.,க்கு நன்றி என்றால், ஒரு தலைமுறையே, இந்தியா மட்டுமல்ல, இதைத் தாண்டி இருக்கக்கூடிய ஒரு இளந்தலைமுறை.
பொதுவாகவே தமிழர்களுக்குக் கொஞ்சம் மறதி அதிகம். பழையவற்றையெல்லாம் பிள்ளைகளுக்குச் சொல்லித் தரமாட்டோம்.
எங்கே இருந்தோம்? எங்கே இருந்து வந்தோம்? என்னென்ன போராட்டங்களைக் கடந்து வந்திருக்கின்றோம்? எதைத் தக்க வைத்துக்கொள்ளவேண்டும்? என்பதையெல்லாம் நாம் சொல்லுவதில்லை.
பழைமையைப் போற்றக்கூடிய –
பாதுகாகக்கூடிய சிந்தனை இல்லை!
ஆகவே, அந்தப் பழைமையைப் போற்றக்கூடிய, பாதுகாக்கக்கூடிய அந்த சிந்தனை இல்லாத காரணத்தால், இன்றைக்கு நீ படித்துவிட்டாய், வெளிநாட்டில் வேலை செய்கிறாய் – ஒரு பெரிய இடத்தில் இருக்கிறாய்.
அதைப் புகழ்கிறோமே தவிர, அந்த நிலைக்கு உங்கள் மகனோ, மகளோ வருவதற்கு – தந்தை பெரியாரைப் போல, நம்முடைய திராவிட இயக்கத்தைப் போல, அதில் இருக்கின்ற எத்தனைப் போராட்டங்கள், எத்தனை சிந்தனையாளர்கள் இந்த இடத்திற்குக் கொண்டு வந்து நம்மை நிறுத்தி இருக்கிறார்கள் என்ற வரலாறை நாம் சொல்லித் தராத காரணத்தினால்தான்.
நம்முடைய பிள்ளைகள் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து கொண்டு சொல்லுவார்கள்.
எதற்காக இட ஒதுக்கீடு?
மெரிட் முக்கியம் அல்லவா?
மீண்டும் மீண்டும் ஏன் ஜாதி சான்றிதழ் கேட்கிறீர்கள்?
இது உங்களுக்குத் தவறாகத் தெரியவில்லையா? நீங்கள்தானே ஜாதியை வளர்க்கிறீர்கள்? என்றெல்லாம் கேட்பார்கள்.
அப்படிப்பட்ட சூழ்நிலையை நாம்தான் உருவாக்கியிருக்கின்றோம்.
நூற்றாண்டைக் கடந்தவரின்
சிலையை அவமதிக்கிறார்கள்!
நூற்றாண்டைக் கடந்த ஒரு மனிதரின் சிலைமீது இப்பொழுது காவி சிலையை ஊற்றுகிறார்கள்; அவரைக் கொச்சைப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு பலவற்றைச் செய்கிறார்கள்.
நீங்கள் எல்லாம் நம்புகிறீர்கள் அல்லவா, சிலைகள் எல்லாம் பேசும், சிந்திக்கும் என்று.
அது உண்மையாக இருந்திருந்தால், பெரியார் சொல்லியிருப்பார், நீங்கள் செருப்பு மாலை போடும்பொழுதே, ”எல்லாம் இரண்டு இரண்டாக இருக்கிறதா, என்று பார்த்துப் போடுப்பா; இல்லையென்றால், அதனால் பிரயோஜனம் இல்லை” என்று.
அப்படிப்பட்ட ஒரு மனிதரை ஏன் இவ்வளவு கேவலப்படுத்தவேண்டும்; அவரைப் பார்த்து ஏன் இவ்வளவு பயப்படவேண்டும்? தொடர்ந்து அவரை கொச்சைப்படுத்தத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பெரியார் யார் என்ற கேள்வியோடு அவரைப்பற்றி படிக்க, பேச ஆரம்பித்தனர்!
இவர்கள் தொடர்ந்து கொச்சைப்படுத்த கொச்சைப்படுத்தத்தான், அடுத்த தலைமுறை, பெரியார் யார் என்ற கேள்வியோடு, அவரைப்பற்றி படிக்க ஆரம்பித்தது, பேச ஆரம்பித்தது.
பெரியார் யார் என்று தெரியாது இருந்த ஒரு சூழ்நிலையில் இருந்த வடமாநிலங்களில் இன்றைக்கு ஒரு போராட்டம் நடக்கின்றது என்றால், பெரியாரின் படத்தினை கையிலேந்தித்தான் அந்தப் போராட்டம் நடைபெறுகிறது.
ஆகவே, நாம் பி.ஜே.பி.,க்கு நன்றி சொல்லவேண்டும். தொடர்ந்து நீங்கள் எங்களை எதிர்க்கவேண்டும். தொடர்ந்து நீங்கள் எங்களுடைய கருத்தியல்களை எதிர்க்கவேண்டும். உங்களுக்குக் கருத்தியல்கள் இல்லை; அதனால், கருத்தியல் ரீதியாக எங்களை எதிர்க்க முடியாது. ஆகவே, உங்களுக்குத் தெரிந்த விதங்களில், நீங்கள் எங்களைத் தொடர்ந்து எதிர்க்க எதிர்க்கத்தான் மறுபடியும் அடுத்த தலைமுறையின் மனதிலே எங்கள் கருத்துகளை, எங்கள் விதைகளை நாங்கள் தொடர்ந்து விதைத்துக்கொண்டே இருக்க முடியும்.
மிக முக்கியமான ஒரு வழித்தடம்தான் பெரியார்விஷன் ஓடிடி!
அதற்கான மிக முக்கியமான ஒரு வழித்தடமாக, ஒரு சிறந்த வாகனமாகத்தான் இன்றைக்கு இந்த ஓடிடி பிளாட்பார்ம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஓடிடி பிளாட்பார்மை உருவாக்கிய அத்துணை பேருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
தொடர்ந்து மக்களுடைய ஆர்வத்தைத் தக்க வைக்கக் கூடிய வகையில், மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கக்கூடிய வகையில் வெற்றிகரமாக நடத்தவேண்டும் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
என்னுடைய வாழ்த்துகள்!
நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வணக்கம்!
– இவ்வாறு திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.