லிபர்ட்டி கிரியேஷன்ஸ் சார்பில் சமூக நீதிக்கான உலகின் முதல் தளம் PERIYAR VISION OTT தொடக்கவிழா!

viduthalai
4 Min Read

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, கனிமொழி கருணாநிதி எம்.பி.,
இனமுரசு சத்யராஜ், ஞான. இராஜசேகரன் அய்.ஏ.எஸ்., ஓவியர் டிராட்ஸ்கி மருது பங்கேற்பு

கழகம், தமிழ்நாடு, திராவிடர் கழகம்கழகம், தமிழ்நாடு, திராவிடர் கழகம்

சென்னை, ஜூலை 21- ‘சமூகநீதிக்கான உலகின் முதல் ஓ.டி.டி’ தளமாக லிபர்ட்டி கிரியேஷன்ஸ் சார்பில் ‘பெரியார் விஷன்’ ஓடிடி தளம் தொடக்க விழா இன்று (21.7.2024) காலை சென்னை பெரியார் திடலில் எம்.ஆர். இராதா மன்றத்தில் நடைபெற்றது.
‘பெரியார் விஷன்’ ஓடிடி தளம் நேர்காணல் பதிவு அலுவலகத்தை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்துவைத்தார். திமுக துணைப் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி, இனமுரசு சத்யராஜ், பெரியார் திரைப்பட இயக்குநர் ஞான.ராஜசேகரன் அய்.ஏ.எஸ்., மற்றும் ஓவியர் டிராட்ஸ்கி மருது திறப்பு விழாவில் கலந்துகொண்டனர்.
அதனைத் தொடர்ந்து நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்ற ‘பெரியார் விஷன்’ ஓடிடி தளம் தொடக்க விழாவில் லிபர்ட்டி கிரியேஷன்ஸ் இயக்குநர் வீ.அன்புராஜ் அனைவரையும் வரவேற்றார். லிபர்ட்டி கிரியேஷன்ஸ் பெரியார் திரைப்படம், புரட்சிக்காரன் திரைப்படத்தை எடுத்து மக்களிடையே பகுத்தறிவுக்கருத்துகளை கொண்டு சேர்த்தது.
இங்கே பத்திரிகைத்துறையில் முதலில் இ-பேப்பர் அறிமுகப்படுத்தியது விடுதலை நாளிதழ்தான். கரோனா காலத்திலும் ஜூம் கூட்டங்கள் நடத்தியவர் தமிழர் தலைவர் ஆசிரியர். பெரியார் வெப் விஷன் அடுத்த தளம்தான் இந்த பெரியார் விஷன் ஓடிடி.
ஸ்டிரீமிங் எளிதாக இருக்கும். யு டியுப் கட்டுப்பாடுகள் கடந்து இருக்கும். தந்தை பெரியார் கருத்துகளுடன் டெலி சீரியல்கள் ஒளிபரப்பாகும். பெரியார் திடலுக்கு கண்டென்ட் அளிப்பதில் பஞ்சமில்லை. மற்றவர்களுக்கு கண்டென்ட் கொடுப்பவர்கள் நாம். ஓடிடி உருவாக்கத்தில் பிரின்சு என்னாரெசு பெரியார், வசந்த், மதிசீலன் ஆகியோரின் கடும் முயற்சி பாராட்டத்தக்கது.
நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தூத்துக்குடியில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் அவருக்கு இந்த நேரத்தில் வாழ்த்துகள். இனமுரசு சத்யராஜ், இயக்குநர் ஞான ராஜசேகரன், ஓவியர் டிராட்ஸ்கி மருது உள்ளிட்ட அனைவரையும் வரவேற்கிறோம்.
-இவ்வாறு வரவேற்புரையில் வீ.அன்புராஜ் குறிப்பிட்டார்.
காணொலி திரையிடல்
பெரியார் விஷன் தொடக்க விழாவையொட்டி காணொலி திரையிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, திமுக துணைப்பொதுச் செயலாளர் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி அவர்கள் ‘பெரியார் விஷன்’ ஓடிடி (PERIYAR VISION OTT) தளத்தை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் களின் ‘பெரியார் விஷன்’ ஓடிடி வாழ்த்துச் செய்தி காட்சிப்பதிவு திரையிடப்பட்டது.
விருந்தினர்களுக்கு தமிழர் தலைவர் சிறப்பு
திமுக துணைப்பொதுச்செயலாளர் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி, இனமுரசு சத்யராஜ், பெரியார் திரைப்பட இயக்குநர் ஞான.ராஜசேகரன் அய்.ஏ.எஸ்., மற்றும் ஓவியர் டிராட்ஸ்கி மருது ஆகியோருக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் பொன்னாடை அணிவித்து இயக்க வெளியீடுகளை வழங்கி சிறப்பு செய்தார்.
‘பெரியார் விஷன்’ ஓடிடி அறிமுக விழாவில்,
ஓவியர் டிராட்ஸ்கி மருது, இயக்குநர் ஞான.ராஜசேகரன் அய்.ஏ.எஸ்., பிரச்சாரச்செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, பொருளாளர் வீ.குமரேசன் ஆகியோர் உரை ஆற்றினார்கள்.
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் முன்னிலை உரையாற்றினார்.
இனமுரசு நடிகர் சத்யராஜ், திமுக துணைப்பொதுச் செயலாளர் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி சிறப்புரையைத் தொடர்ந்து, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி் அவர்கள் விழா நிறைவு சிறப்புரை ஆற்றினார்.
பகுத்தறிவையும், மக்களுக்குப் பயன்படும் அறிவியல் தொழில்நுட்பத்தையும் வெகுவாகப் பயன்படுத்தவும், புதுமைகளை வரவேற்று பரப்பவும் செய்வார் தந்தை பெரியார்.
இக்காலத்தில் சிறியவர் முதல் பெரியோர் வரை பெருமளவில் அனைவராலும் பயன்படுத்தப்படக் கூடிய ஓ.டி.டி தொழில்நுட்பத்தைத் துணைக் கொண்டு “Periyar Vision” எனும் பெயரில் ‘சமூகநீதிக்கான உலகின் முதல் ஓ.டி.டி’யை லிபர்டி கிரியேஷன்ஸ் நிறுவனம் இன்று தொடங்கியுள்ளது.
ஒரு கொள்கைக்காகத் தொடங்கப்படும் உலகின் முதல் ஓடிடியாக இதுவே ஆகும். இதில் உரையாடல்கள், உரைவீச்சுகள், நேர்காணல்கள், ஆவணப்படங்கள், குறும்படங்கள், வலைத்தொடர்கள், வகுப்புகள் ஆகியன இடம்பெற இருக்கின்றன. ஒலி, ஒளிப் புத்தகங்கள், இசை ஆக்கங்கள் என பல வடிவங்களிலும் பகுத்தறிவு, சமூகநீதி, பெண்ணுரிமை, ஜாதி ஒழிப்பு, அறிவியல் மனப்பான்மை ஆகியவற்றை முன்னிறுத்திய படைப்புகள் திரையிடப்படுகின்றன.
பெரியார் திரைப்படத்தைத் தயாரித்த லிபர்ட்டி கிரியேஷன்ஸ் நிறுவனம் “Periyar Vision” ஓடிடியை உருவாக்கி வெளியிட்டுள்ளது.
இது ஆண்டிராய்டு தொலைக்காட்சிகளிலும், ஆப்பிள் மற்றும் ஆண்டிராய்டு செல்பேசிகளிலும் கண்டு பயன்பெற முடியும்.
‘பெரியார் விஷன்’ ஓடிடி அறிமுக விழாவையொட்டி, ஆண்டுக்கட்டணம் ரூ.588 உடன் இரண்டு ஆண்டுகள் கட்டணச் சலுகையும், காலாண்டுக் கட்டணம் ரூ.147 உடன் இரண்டு காலாண்டுகள் கட்டணச் சலுகையும், மாதக்கட்டணம் ரூ.49 உடன் இரண்டு மாதங்களுக்கான கட்டணச் சலுகையும் 31.7.2024 வரை அளிக்கப்படுகிறது.
‘பெரியார் விஷன்’ ஓடிடி தளத்துக்கான ஆண்டுக் கட்டணத்தை மோகனா வீரமணி அவர்கள் ‘பெரியார் விஷன்’ ஓடிடி பொறுப்பாளர் மதிசீலனிடம் வழங்கினார்.
விழா முடிவில் ‘பெரியார் விஷன்’ ஓடிடி சார்பில் மதிசீலன் நன்றி கூறினார்

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *