சென்னை, ஜூலை 20- சென்னை துண்டலம் பகுதியில் திரு.வி.க.வுக்கு நினைவிடம் அமைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மணவழகர் மன்ற விழா
சென்னை மணவழகர் மன்றத்தின் 68ஆவது ஆண்டு முத்தமிழ் விழா, சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று (19.7.2024) நடந்தது. விழாவில், மணவழகர் மன்ற செயலாளர் கே.கன்னியப்பன் வரவேற்புரையாற்றினார். சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி கே.ஞானப்பிரகாசம் தலைமை தாங்கினார். மூத்த வழக்குரைஞர் ல.சுந்தரேசன் முன்னிலை வகித்தார். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தொடக்க உரையாற்றினார்.
தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாநில சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
விழாவில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-
நினைவிடம்
தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கலைஞர் இந்த மன்ற விழாவில் 15 முறை கலந்துகொண்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 முறை பங்கேற்றுள்ளார். என்னைப் போன்ற சாதாரணமானவர்களை அழைத்தும் கவுரவப்படுத்தியுள்ளார்கள்.
திரு.வி.க.விற்கு வரும் ஆண்டில் மிகப்பெரிய நினைவிடம் அமைக்கப்படுமென முதலமைச்சர் அறிவித் துள்ளார். தேச நலனுக்காக பாடுபட்டவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவிடங்களை அமைத்து வருகிறார்.
அந்த வகையில் சென்னை துண்டலம் பகுதியில் திரு.வி.க.வுக்கு மிகப்பெரிய நினைவிடம் அமைக்கப்படும். இதே போல, மதுரையில் மாபெரும் நூலகத்தை முதலமைச்சர் அமைத்துள்ளார்.
– இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து. மண வழகர் மன்ற துணைச் செயலாளர் சு.கருணாநிதி நன்றியுரையாற்றினார்.