குஜராத்தையடுத்து உ.பி., உத்தரகாண்டிலும் ஹிந்துத்துவாவின் பரிசோதனைக் கூடமா?
கடைகளில் உரிமையாளர் பெயர் போடவேண்டும் என்று உ.பி., உத்தரகாண்ட் மாநில அரசுகள் பிறப்பித்த உத்தரவின் பின்னணி என்ன?
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் வியாபார நிறுவனங்களில் உரிமையாளர்களின் பெயர்களைப் போடவேண்டும் என்று பி.ஜே.பி. அரசுகள் உத்தரவு என்பது உரிமையாளர் ஹிந்துவா? முஸ்லீமா? என்று தெரிந்துகொள்ளவே! இந்த ஆபத்தான மதவாத வெறியை, இந்தியா கூட்டணி ஒருமித்த முறையில் இணைந்து முறியடிக்க முன்வரவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
‘ஹிந்துத்துவா’ என்று ஒரு நூற்றாண்டுக்குமுன் உருவாக்கப்பட்ட, ஹிந்து ராஜ்ஜிய – வருணதர்ம தத்துவத்தின் அரசியல் கோட்பாட்டை, செயல்முறைக்குக் கொண்டுவரும் ‘‘அரசியல் பரிசோதனைக் கூடமாக” சுமார் 25 ஆண்டுகளுக்குமுன், மோடி முதலமைச்சராக ஆட்சி செய்த குஜராத் என்ற காந்தி மண்ைணயே தேர்ந்தெடுத்தது, சிறுபான்மையினருக்கு எதிராக ஒருவகை உளவியல், உடலியல் தாக்குதல் – இரண்டு துறைகளிலும் நடத்தப் பெற்றது. அது எல்லை தாண்டிய மதவெறித்தனத்தின் மதோன்மத நடனமாகி, ஆடியதன் தாங்கொணா கொடுமை கண்டு அன்றைய பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். பிரதமரான அடல்பிகாரி வாஜ்பேயி அவர்கள் அன்று இராணுவத் துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்ணான்டஸ் அவர்களை நேரில் குஜராத்திற்கு அனுப்பி, வழிந்தோடிய இரத்தக் கண்ணீரைத் தடுக்க ஓரளவு முயற்சித்தார். அன்றைய குஜராத் முதலமைச்சர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி அவர்களுக்கு ‘‘ராஜதர்மம்” என்று ஒன்று உள்ளது; அதனைக் கடைப்பிடித்து நடவுங்கள்” என்று அறிவுரை – அறவுரை, ஆணையையும் வழங்கினார்!‘‘எந்த முகத்தை வைத்துக்கொண்டு வெளிநாடு செல்லுவேன்” என்று பிரதமர் வாஜ்பேயி புலம்பினார்!
குஜராத்தையடுத்து, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்டிலும் ஹிந்துத்துவாவின் பரிசோதனைக் கூடமா?
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக குஜராத்தின் பழைய ஹிந்துத்துவ நடவடிக்கைகளுக்குப் பரிசோத னைக் கூடமாக உத்தரப்பிரதேசத்தினை ஆக்கிட, யோகி ஆதித்யநாத் என்னும் சாமியார் ஆட்சி பீடத்தில் அமர்ந்து ஹிந்துத்துவா தாண்டவம் தலைதெறிக்க ஆடிவரும் நிலைதான் இன்றைய நிலை!
சம்பூகனைக் கொன்ற இராமனது செயல் அன்று; இன்று இரண்டாவது பரிசோதனைக் கூடமாக (Political Laboratory) ஹிந்துத்துவாவுக்கு, பசுப் பாதுகாப்புப் படை தொடங்கினர். இப்போது கன்வார் யாத்திரை செல்லும் வழியில் உள்ள சிறு சிறு உணவுக் கடைகள் – தட்டிக் கடைகள் போன்று தள்ளுவண்டி கடைகளில் அதன் உரிமையாளர் யார்? என்று பெயர்ப் பலகை வைப்பது கட்டாயம் என்று உ.பி., உத்தரகாண்ட் மாநில அரசுகள் சட்ட ஆணைகளை வெளியிட்டுள்ளன!
இதன் உள்நோக்கம் என்ன தெரியுமா?
ஹிந்துக் கடையா? முஸ்லிம் கடையா? என்று தெரிந்துகொள்வதற்கான சூழ்ச்சி!
அது ஹிந்து கடையா? அல்லது முஸ்லீம்கள் மற்றும் சிறுபான்மையினர் கடையா என்று புரிந்துகொண்டு, ஹிந்துக்கள் அல்லாத முஸ்லீம்களின் கடைகளைப் புறக்கணித்துவிட்டு, ஹிந்துக்களின் கடைகளில் மட்டுமே வாணிபம் செய்ய வழிவகுக்கும் வெறுப்பு அரசியலின் விரிந்த – இழிந்த செயலின் மறைமுக ஏற்பாடு என்று பல முற்போக்காளர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர். இது ஹிந்துத்துவா வெறித்தனத்தின் கோர முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டி வருகிறது!
அரசமைப்புச் சட்டம் கூறும் மதச்சார்பின்மை, ஜீவாதார உரிமைகள் எல்லாம் எங்கே, எங்கே? புதைக்கப் பட்டு விட்டதா?
நீரில் கரைந்தவையாகி வருகின்றனவா?
கூட்டணிக் கட்சிகளே எதிர்க்கின்றனவே!
மற்ற எதிர்க்கட்சிகளின் கண்டனம் ஒருபுறம் என்றா லும், அவர்களது சொந்தக் கட்சியான பா.ஜ.க.வினரும், இன்றுள்ள மைனாரிட்டி பா.ஜ.க. அரசினைத் தாங்கிப் பிடித்துவரும் தேசிய ஜனநாயக முன்னணி கட்சிகளான அய்க்கிய ஜனதா தளம், ராம்விலாஸ் பஸ்வான் கட்சியான லோக் ஜனசக்தி கட்சி, சிராக் பஸ்வான் கட்சிகளும்,பா.ஜ.க.வின் முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் அமைப்பின் தலைவர் மேனாள் அமைச்சர் சையத் நக்வி போன்றவர்களும்கூட எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
அரசமைப்புச் சட்டத்தை முன்பு மோடி, தலை கவிழ்ந்து வணங்கியதெல்லாம் இப்படி ஆளுமை செய்வதற்குத்தானா? என்ற கேள்வி நாடு முழுவதும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டது!
இந்தியா கூட்டணியின் மகத்தான பொறுப்பு!
இத்தகைய ஹிந்துத்துவ மதவெறியின் கோர முகத்தை மாற்றிட, கட்சி, ஜாதி, மதம், மாநிலம் என்று ஒருங்கிணைந்து போராடி, அது புறமுதுகிட்டு ஒடும் நிலையை உருவாக்கவேண்டியது எதிர்க்கட்சியாகிய இந்தியா கூட்டணியின் பொறுப்பு மாத்திரமல்ல – அனைத்து மனிதநேயர்களின் இன்றியமையாப் பெருங்கடமையாகும்!
வெறுப்பு அரசியலை விரட்டியடியுங்கள் –
பொறுப்பு கூட்டு சமூக எழுச்சியே அதற்குரிய சரியான கருவியாகும்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
20.7.2024