கடந்த பிப்ரவரி மாதம் இறுதிவாரத்தில் இருந்து துவங்கிய அம்பானி வீட்டுத் திருமணம் ஒருவழியாக ஜூலை இரண்டாம் வாரம் முடிந்தது என்று பார்த்தால் அதுதான் தவறு.
தற்போது ‘மஹகான் விதாயி சம்ஹரம்’ (அதாவது திருமணத்திற்கு வருகை தந்த விருந்தினர்களுக்கு சிறப்பு அளிக்கும் நிகழ்ச்சி!) பொதுவாக இது போன்ற நிகழ்வு ராஜஸ்தான் மார்வாட் மற்றும் குஜராத் பகுதிகளில் உள்ள பணியா சமூகத்தினர் ஒரு மாதம் வரை கொண்டாடுவார்கள். அதாவது திருமணத்திற்கு வந்தவர்களின் வீடு தேடிச் சென்று விருந்து உண்டு அவர்களுக்கு பரிசளித்து திரும்புவார்கள். நடுத்தர வர்க்கத்தினரே ஒரு மாதம் இந்த மஹகான் விதாய் சமஹரனைக் கொண்டாடுவார்கள் என்றால் அம்பானி வீட்டுத் திருமணத்தின் விருந்தினர்கள் நன்றி கூறும் நிகழ்வு செப்டம்பர் வரை நீளும் என்கிறார்கள்.
இதில் ஒரு நிம்மதி என்னவென்றால் இந்த விழா லண்டனில் நடக்க உள்ளது. ஆனந்த் மற்றும் ராதிகா இணையர் லண்டன் சென்று இறங்கி விட்டனர். இதோடு முடிந்ததா என்றால் அதுதான் இல்லை. இதுவரை நடந்தது அனைத்தும் மாப்பிள்ளை வீட்டுத்தரப்பில் நடந்தவிழா தான். அடுத்து ‘துல்கா விதாயி சம்ஹரன்’ என்ற ஒன்று உண்டு! திருமணத்திற்குப் பிறகான மறுவீடு செல்வதுதான் அந்த விழா அது. அவர்கள் இந்தியா திரும்பிய பிறகு நடக்கும் என்று மணப்பெண் ராதிகா மெர்சண்ட் வீட்டார்கள் கூறியுள்ளார்கள்.
அதன் படி பார்த்தால் இந்த திருமண விழா டிசம்பரில் தான் முடியும் என்று நினைக்கலாம். என்ன செய்ய அம்பானி குடும்பம் ஆயிற்றே.. ஒராண்டு என்ன பல ஆண்டுகள் கூட அவர்கள் மகனின் திருமணத்தை நடத்தலாம். ஆனால் பணம் எல்லாம் யாருடையது தெரியுமா? போகாத கல்யாணத்திற்கு மொய்வைப்பவர்கள் அவர்களின் நிறுவனச் சேவையை பயன்படுத்துபவர்கள் தான்?