தமிழ்நாட்டு அரசின் முத்திரையில் உள்ள பெருமைகளில் ஒன்று அரசுப்பள்ளி.
நான் முதல்வன் திட்ட சாதனைகளில் மேலும் ஒரு மாணிக்கம்.
அரசுப் பள்ளி; மாநில அரசின் பயிற்சி; ஜே.இ.இ. தேர்வில் மாநில அளவில் பழங்குடி மாணவி முதலிடம்!
சேலம் மாவட்டம், கல்வராயன் மலை மேல்நாடு ஊராட்சிக்கு உட்பட்ட கரிய கோயிலில் வேலம்பட்டு கிராமம் உள்ளது. இங்கு பூச்சான் – ராஜம்மாள் எனும் இணையர் வசித்து வந்தனர்.
இவர்களது மகள் சுகன்யா. 13 ஆண்டுகளுக்கு முன்பு ராஜம்மாள் இடி மின்னல் தாக்கியதில் உயிரிழந்ததை அடுத்து பெரியம்மா சின்னப்பொண்ணு பராமரிப்பில் வளர்ந்தார் சுகன்யா.
போதிய அடிப்படை வசதிகள் இல்லாத மலைக் கிராமத்தைச் சேர்ந்த சுகன்யா, கரிய கோயில் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து, தமிழ்நாடு அரசு சார்பில் அளிக்கப்பட்ட இலவச நுழைவுத் தேர்விற்கான பயிற்சியில் கலந்து கொண்டார். பின்னர் சேலத்திற்குச் சென்று ஜே.இ.இ. நுழைவுத் தேர்வை எழுதினார்.
இதில், மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இதனை அடுத்து அவர் திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (என்.அய்.டி) சேர்ந்து படிக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து மாணவி சுகன்யா கூறுகையில், ”என்னைக் கடந்த 13 ஆண்டுகளாக வளர்த்த எனது பெரியம்மாவும் பள்ளி ஆசிரியர்களும் உறுதுணையாக இருந்தனர். ஏத்தாப்பூரில் தமிழ்நாடு அரசு அளித்த ஒரு மாத பயிற்சி எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது. நான் மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளதற்குக் காரணமான தமிழ்நாடு முதலமைச்சருக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார். மாணவி சுகன்யாவைப் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.