10 ஆண்டு “அவதார” ஆட்சியில்
அய்.பி.எஸ். – அய்.ஏ.எஸ். தேர்வு அவலங்கள்
அண்மையில் வட இந்தியாவில் மிக முக்கிய நகரத்தில் முக்கிய பிரபலங்கள் மட்டுமே வரும் ஒரு அய்ந்து நட்சத்திர விடுதியின் மதுபான அரங்கில் ஒரு நபர் திரைப்பட நடிகை ஒருவருடன் நடனம் ஆடினார்.
அவர் அய்.ஏ.எஸ். அதிகாரி அபிஷேக் சிங், ஆடட்டும் – அது அவரது சொந்த விருப்பம். ஆனால், அவர் அந்த அய்ந்து நட்சத்திர விடுதிக்கு மதுபானம் அருந்தி விட்டு நடிகைகளுடன் ஆட்டம் போட சிவப்பு விளக்கு பொருத்தப்பட்ட அரசு வாகனத்தில் சென்றார் என்பதுதான் இங்கே குறிப்பிடத்தக்கது.
இவர் வருகிறார் என்பதால் அப்பகுதி காவல் நிலையக் காவலர்களின் பாதுகாப்பு, அரசு ஊழியர்கள் உதவியாளர்கள் என சகலரும் பணியாற்றினர். இவர் மதுபானம் அருந்தி நடிகைகளுடன் ஆடுவதற்காக 4 காவலர்கள், 3 அரசு பணியாளர்களை பயன்படுத்தி இருக்கிறார்.
இதை அவர் பெருமையோடு காட்சிப் பதிவாக தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பதிவு இன்னும் அவரது இன்ஸ்டாகிராம் ஹேண்டிலில் உள்ளது.
சிவப்பு விளக்கு ஒளியைப் பயன்படுத்துதல், பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மதுபான நிகழ்வுக்குச் செல்லல் போன்றவை இவரது பொழுதுபோக்கு மட்டுமல்ல, வட இந்தியாவில் குறிப்பாக மோடி ஆட்சியில் பல அய்.ஏ.எஸ். அதிகாரிகள் இந்த நிலையில் தான் உள்ளனர்.
அபிசேக் சிங்கின் அய்.ஏ.எஸ். தேர்வு குறித்து அரசு இணைய தளத்தில் தேடினால் அவர் (லோகோ) நடக்க இயலாத நபர் என்ற சான்றிதழைக் கொடுத்து மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டில் அய்.ஏ.எஸ். தேர்ச்சி பெற்றுள்ளார்.
ஆனால், இவரோ நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமு மாக நடிகைகளுடனும் ஆட்டம் போடுகிறார்.
குறிப்பாக உயர்ஜாதிப் பார்ப்பனர்களுக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டைக் கொண்டு வரப்பட்ட பிறகு போலிச் சான்றிதழ் பயன்பாடு வெள்ளம் போல் பாயத் தொடங்கிவிட்டது.
மாற்றுத்திறனாளிச் சான்றிதழ், இதர பிற்படுத்தப்பட்டோர் போலி சான்றிதழ் என தோண்டத்தோண்ட அதிர்ச்சிகரமான பல தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்றன.
பூஜா கேல்கர் என்பவர் மகாராட்டிராவில் கடந்த ஆண்டு அய்.ஏ.எஸ் தேர்ச்சி பெற்றார். அவருக்கு மட்டும் புனே மாவட்டத்தில் பல இடங்களில் 22 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன.
இவரது தந்தை மேனாள் அய்.ஏ.எஸ். அதிகாரி, இவருக்கு மும்பை உள்ளிட்ட பல ஊர்களில் 44 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து உள்ளது. தாயார் பர்பானி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர். இவர் 7 ரூபாய் கோடி மதிப்பிலான பங்களாவில் குடியிருக்கிறார்.
பூஜா கேல்கர் பார்வைத்திறன் குறைபாடு மாற்றுத்திறனாளி சான்றிதழ், மற்றும் வருமானம் குறைவான பிரிவின் கீழ் உள்ள இதர பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் (non-creamylayer) கொடுத்து அந்த இட ஒதுக்கீட்டில் அய்.ஏ.எஸ். பிரிவில் தேர்வாகி உள்ளார்.
எம்.பி.பி.எஸ். படித்து முடித்த இவர் அங்கும் மனக்குறைபாடு மற்றும் பார்வைத் திறன் மாற்றுத்திறனாளி சான்றிதழ் கொடுத்து மாற்றுத்திறனாளி பிரிவில் எம்.பி.பி.எஸ். சேர்ந்துள்ளார்.
இவரது குடும்ப சொத்து மதிப்பு ரூ.70 கோடிக்கு மேல் இருக்கையில் இவருக்கு எப்படி கிரிமிலேயர் அல்லாதவர் சான்றிதழ் கிடைத்தது என்பது மிகப் பெரிய கேள்விக்குறி.
அண்மையில் இவர் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள தன்னுடைய சொந்த சொகுசு காரில் வி.அய்.பி. நம்பர் பிளேட் பொருத்திக்கொண்டும் சிவப்பு விளக்கு பொருத்திக் கொண்டும் வலம் வந்தார்.
இதைக்கண்ட புனேவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அரசு அதிகாரி எப்படி பல கோடி மதிப்புள்ள காரில் சிவப்பு விளக்கு பொருத்தி வலம் வரலாம் என்று கேள்வியைக் கேட்ட பிறகுதான். மேலே கூறிய புஜா கேல்கரின் அத்தனை வண்டவாளமும் வெளியே தெரியவந்தது.
இவரது தந்தை தலைமைச் செயலக அதிகாரியையே மிரட்டி தன்னுடைய மகள் எதை எல்லாம் கேட்கிறாரோ அதை எல்லாம் உடனடியாக செய்ய புனே மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடுமாறு கூறுகிறார்.
புஜா கேல்கர் புனேவில் உள்ள பொதுப்பணித்துறை தலைமைச்செயலாளர் அறையை அவரைக் கேட்காமலேயே தனது அறையாக மாற்றிக்கொண்டு அதிகாரியைப் போல் வலம் வந்திருக்கிறார்.
இவரது சட்ட மீறல்கள் குறித்து புகார் வந்த பிறகு உடனடியாக இவரை புனே மாவட்டத்தில் வேறு ஒரு தாலுகாவிற்கு பயிற்சிக்காக அனுப்பிவைத்தது மகாராட்டிர அரசு.
அதாவது ஏதோ ஒன்றை அந்த அரசு மறைக்கப் பார்க்கிறது.
இவரின் நடவடிக்கை தொடர்பாக விளக்கம் கேட்க பூஜாகேல்கரின் புனே பங்களாவிற்கு ஊடகவியலாளர்கள் சென்ற போது – அவரது தாயார் கையில் சுவிஸ் தயாரிப்பு மல்டி லோடேட் நவீன ரக கைத்துப்பாக்கியை வைத்து – ஊடகவியலாளர்களை மிரட்டி உள்ளார்.
அந்த கைத்துப்பாக்கி சில வினாடிகளில் 8 குண்டுகளை வெடிக்கச்செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வகை ரகத் துப்பாக்கியை எப்படி அவரது தாயார் வைத்திருக்க முடியும் என்ற புதிய கேள்வியும் தற்போது குற்றச்சாட்டாக எழுந்துள்ளது.
அய்.ஏ.எஸ். தேர்விற்காக தங்களது இளமைக்காலத்து அனைத்து சுக துக்கங்களையும் மறந்து இரவு பகலாக படித்து தாங்களும் ஒரு அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். ஆகவேண்டும் என்ற கனவில் இருக்கும் இளைஞர்களின் மன நிலையில் இந்த போலிச்சான்றிதழ் முறைகேடு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
2014ஆம் ஆண்டிற்குப் பிறகு நடத்த அத்தனைத் தேர்வுகளும் ஊழல் இல்லாமல் நடந்ததே இல்லையா என்ற ஒரு மிகப் பெரிய கேள்வி ஒட்டுமொத்த இளைய சமுதாயத்தின் மனதில் தோன்றி உள்ளது.
அய்.ஏ.எஸ். தேர்வு என்பது விண்ணப்பித்ததில் இருந்து தேர்வு முடியும் வரை எத்தனை தடைகள்? ஒரு சான்றிதழில் எழுதுப்பிழை இருந்தால் கூட தந்தை பெயர் முன் பின்னாக மாறி இருந்தால் கூட அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிகழ்வுகளை பொதுவாகவே அனைவருமே கேள்விப்பட்டிருப்பார்கள்.
தலைநகர் டில்லியில் சில மாதங்கள் ஊடகவியலாளர்கள் தொடர்பான பயிற்சிக்காக 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தங்கி இருந்த போது ஹட்ஸன் லைன், சிவில் லைன்ஸ், முகர்ஜி நகரின் ஒவ்வொரு மூலையையும் பார்த்துள்ளேன். இரவு பகலாக ஊறவைத்த கொண்டக்கடலை மற்றும் அதன் தண்ணீரை பகல் முழுவதும் சாப்பிட்டுவிட்டு இரவில் மட்டுமே சாலை ஓரக்கடைகளில் ரொட்டி சாப்பிட்டுவிட்டு படிக்கும் மாணவர்களைப் பார்த்து அய்.ஏ.எஸ். அதிகாரி ஆகுவது எவ்வளவு கடினமானது என்று உணர்ந்துள்ளேன்.
அரசு யு.பி.எஸ்.சி. மீதான கண்ணியத்தை இழந்துகொண்டு இருக்கிறது. இதுவரை தேர்வு முறை பிரமீட்டின் படிகளை அரித்து அரித்து தற்போது உயரத்தில் இருக்கும் யு.பி.எஸ்.சி. தேர்வு முறையையே சந்தேகத்திற்கிடமாக்கி உள்ளது.
பூஜா கேல்கரின் தாயாரை தற்போது காவல்துறை ஒரு வழக்கில் கைது செய்துள்ளது. அதாவது 7 ஆண்டுகளுக்கு முன்பு அவர் பஞ்சாயத்து தலைவராக இருந்த கிராமத்தில் தனது பண்ணைக்கு அருகில் இருந்த விவசாயி ஒருவரின் நிலத்தை வாங்க முடிவு செய்துள்ளார். அந்த விவசாயி நிலத்தை தர மறுக்கவே நேரடியாக அவரது நிலத்தில் கண்டெயினர் ஒன்றை இறக்கி வைத்து அங்கே வேலி போட்டுக் கொண்டிருந்தார். இதைத்தடுத்து நிறுத்தச் சென்ற நிலத்திற்குச் சொந்தக்காரரான விவசாயி மற்றும் அவரது குடும்பத்தினரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி உள்ளார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட விவசாயி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகார் மீது தற்போதுதான் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளது காவல்துறை.
ஒருவேளை பூஜா கேல்கர் மீதான குற்றச்சாட்டை மறைக்க குடும்பத்தார் மீது நடவடிக்கை என்ற ஒரு போர்வையைப் போர்த்தும் நடவடிக்கையாக இது இருக்கலாம்.
இவ்வளவு அதிகாரத் தோரணை எங்கிருந்து வந்தது என்றால் இவருக்குப் பின்புலமாக பாஜக இருந்துள்ளது. இது தொடர்பாக எ.பி.பி. என்ற ஹிந்தி செய்தி நிறுவனம், பாஜக மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மகாராட்டிராவைச் சேர்ந்த மறைந்த முக்கிய பாஜக தலைவரான கோபிநாத் முண்டேவின் மகளுமான பங்கஜா முண்டேவிற்கும் பூஜா கேல்கர் குடும்பத்திற்குமான தொடர்புகளை வெளியிட்டது. உடனே, அந்த செய்தி நிறுவனத்தின் மீது பங்கஜா முண்டே வழக்கு தொடர்ந்துவிட்டார்.
நடிகைகளுடன் ஆட்டம் போட்ட அய்.ஏ.எஸ். அதிகாரி அபிசேக் சிங். 2015இல் அய்.ஏ.எஸ். தேர்ச்சி பெற்றவர். டில்லியில் பயிற்சி முடித்து அங்கேயே பணி 2018இல் வேறு மாநிலத்திற்கு இடமாற்றம். ஆனால், அவர் அதனை ஏற்காமல் 2 ஆண்டுகளாக மருத்துவ விடுப்பில் சென்றார்.
இந்த நிலையில் அவருக்கு உத்தரப்பிரதேசத்தில் சென்று பணியில் சேருமாறு ஆணை பிறப்பிக்கப்படுகிறது. ஆனால் அவர் மருத்துவ விடுப்பு முடிந்த நிலையிலும் நீண்ட காலமாக அங்கு செல்லவே இல்லை.
இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலின் போது குஜராத் மாநில தேர்தல் பார்வையாளராக ஒன்றிய அரசு அவரை அங்கு அனுப்பியது.
ஆனால், அங்கு சென்ற அவர் கடற்கரைகளில் நடனம் ஆடியும் அரசு காரில் விளம்பரக் காட்சிகளில் நடிப்பதுபோல் படமெடுத்தும் சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.
இதனை அடுத்து, தேர்தல் ஆணையம், அவரை பார்வையாளருடைய பணியிலிருந்து நீக்கியது.
அவர் மீண்டும் உத்தரப்பிரதேசத்திற்கே மாற்றப்பட்டார். ஆனால், அவர் அங்கு சென்று தன்னுடைய உயரதிகாரியிடம் விருப்ப ஓய்வு கடிதத்தை வீசிவிட்டு கோபத்தில் திரும்பி உள்ளார்.
இவரும் பாஜகவின் பின்புலத்தில் துணிச்சலாக இருந்துள்ளார். உடனடியாக விருப்ப ஓய்வு கிடைத்தது.
நேரடி அரசியலில் இறங்கிவிட்டார்.
மேலும் சில மோசடிகளின் பட்டியல்
இதர பிற்படுத்தப்பட்டோர் துறையின் டில்லி சட்டமன்றக் குழு சிறப்பு செயலாளர் ஒய்.வி.வி.ஜே. ராஜசேகர் போலியான ஓபிசி சான்று பெற்று அய்.ஏ.எஸ். தேர்வெழுதி சலுகை மதிப்பெண்களோடு அய்.ஏ.எஸ் ஆகி உள்ளார்.
பீகாரில், இந்திய வருவாய் சேவை அதிகாரி நவநீத்குமார் தேர்விற்காக தன்னுடைய பிறப்புச் சான்றிதழை போலியாகத் தயாரித்துள்ளார். பின்னர் ஆய்வு செய்ததில் அவரது கல்விச் சான்றும் போலியானது.
2021ஆம் ஆண்டு அய்.ஏ.எஸ். பட்டம் பெற்ற பிரியன்ஷு காதி, சிவில் சர்வீசஸ் தேர்வில் 245ஆவது ரேங்க் பெற்றுள்ளார். இவரும் மாற்றுத் திறனாளி சான்றிதழ் கொடுத்து அந்த இடஒதுக்கீட்டின் கீழ் அய்.ஏ.எஸ். தேர்ச்சி பெற்றார்.
இதில் என்ன வியப்பு என்றால் முதல் நிலைத்தேர்வில் தான் முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டவர் என்று சான்றிதழ் கொடுத்துள்ளார்.
இரண்டாம் நிலைத்தேர்வில் பார்வைக்குறைப்பாடு என்ற சான்றிதழைக் கொடுத்துள்ளார். ஏன் இந்த மோசடி செய்தார் என்றால், முடக்குவாத சான்றிதழையே இங்கும் கொடுத்திருந்தால் அவர் 685ஆம் இடத்திற்குத் தான் வந்திருப்பார். அப்படி வந்தால் அவர் அய்.ஏ.எஸ். ஆக இயலாமல் போயிருக்கும். ஆகவே, பார்வைக்குறைபாடு சான்றிதழ்.
இவருக்கு இந்த யோசனையைச் சொன்னவரே தேர்வுக்குழுவில் உள்ள ஒரு முக்கிய நபர்தான் என்று அவரோடு படித்தவர்கள் சமூக வலைதளங்களில் எழுதி உள்ளனர்.
நித்திகா கண்டேல்வால் 2015ஆம் ஆண்டின் அய்.ஏ.எஸ். பேட்ச் அதிகாரி ஆவார். இவர் யு.பி.எஸ்.சி.யில் 857ஆவது ரேங்க் பெறும் நிலையில் இவருக்கும், பார்வைக் குறைபாடு சான்றிதழ் கொடுக்கப்பட்டு (பிடபிள்யூடி கோட்டா) அய்.ஏ.எஸ். பதவியைப் பெற்றார்.
அதாவது பிரியான்ஸு மற்றும் நித்திகா இருவருக்குமே கடைசி நேரத்தில் யாரோ ஒருவர் இந்தச் சான்றிதழை வாங்கச் சொல்லி அவர்களை அய்.ஏ.எஸ். ஆக்கி உள்ளார்கள்.
மத்தியப் பிரதேசத்தில், அய்.ஏ.எஸ். அதிகாரி சன்தோஷ் வெர்மா போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி மாநில கோட்டாவிலிருந்து அய்ஏஎஸ் க்கு பதவி உயர்வு பெற்றார். வியாபம் வழக்கிலும் இவரது பெயர் இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
டில்லி காவல் துறை டிஜிபி சஞ்சய் குமார் போலி சான்றிதழைப் பெற்று அய்.பி.எஸ். தேர்ச்சி பெற்று பல ஆண்டுகள் பணியில் இருந்துள்ளார். பிறகு அவரது சான்றிதழ்கள் போலி என தனிநபர் ஒருவரால் புகார் அளிக்கப்பட்டு – அது ஆய்விற்கு எடுக்கப்பட்டு உண்மை தெரிந்த பின் விசாரணை முடியும் வரை இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்டார். அவ்வளவுதான்.
தனியார் ஆய்வு மய்யம் ஒன்றின் அறிக்கையின்படி ஒவ்வொரு ஆண்டும் 400-க்கும் மேற்பட்ட புகார்கள் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். நபர்கள் மீது பதிவு செய்யப்படுகின்றன அதாவது அவர்களின் தேர்ச்சி தொடர்பான புகார்கள் மட்டுமே.
இந்தப் புகார்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டன என்பது அலிபாபா குகை போன்ற மர்மமாகவே உள்ளது.
பாபுலால் அகர்வால் அய்.ஏ.எஸ். பதவி ஏற்ற சில ஆண்டுகளிலேயே ரூ.200 கோடி மதிப்புடைய சொத்து வந்துவிட்டது.
அய்.ஏ.எஸ். தம்பதியர் அரவிந்த் ஜோஷி மற்றும் டினு ஜோஷி, மொத்தம் ரூ. 500 கோடி சொத்து.
சத்தீஸ்கரில், அய்.ஏ.எஸ். அதிகாரி சமீர் விஷ்ணோய் நாள் ஒன்றுக்கு ரூ. 2 முதல் 3 கோடி வரை பணம் பார்த்தார். இவர் கனிம வளத்துறை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.
மேலே குற்றச்சாட்டில் சிக்கிய நபர்கள் அனைவருமே இட ஒதுக்கீட்டைத் தவறாக பயன்படுத்தி பணியில் சேர்ந்த உயர் வகுப்பினர் ஆவர்.
கடந்த 10 ஆண்டுகளில் இவ்வளவு மோசடிகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன.
பதவி ஏற்ற குறைந்த காலத்திலேயே இவர்கள் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களுக்கு சொந்தக்காரர்கள் ஆகிவிடுகிறார்கள்.
காரணம் என்றைக்காவது மோசடிகள் வெளியானால் அதிக பட்சம் பணி நீக்கம் செய்வார்கள். அவ்வளவுதான்.
வாழ்நாள் முழுவதும் அய்.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து பெறும் ஊதியத்தை பதவியில் சேர்ந்த சில ஆண்டுகளிலேயே சேர்த்து நிம்மதியாக இருந்துவிடுகிறார்கள்.
இவர்களைப் பார்த்து மற்றவர்களும் ஊழலுக்குத் துணை போகிறார்கள்.
60 ஆண்டுகளுக்கும் மேலாக மதிப்பு மிக்க தேர்வுகளாக இருந்து வந்த அனைத்தும் 10 ஆண்டுகள் மோடி ஆட்சியில் – பணம் கொடு எதையும் எடு – என்ற நிலமைக்கு மாறி தேர்வுகள் என்றாலே மோசமானது என்ற முடிவிற்கு வரும் வகையில் மக்கள் மனதை மாற்றிவிட்டார்கள்.
அரசு நடத்துகிற அய்.ஏ.எஸ். தேர்விலேயே இவ்வளவு மோசடிகள் என்றால், தனியார் நிறுவனமான தேசியத் தேர்வு முகமை (NTA) நடத்தும் நீட் தேர்வின் நிலை என்னவாக இருக்கும்?
தமிழ் நாட்டில் பல அய்.ஏ.எஸ். அதிகாரிகளின் மனிதநேயம் சாமானிய மக்களுக்கு ஒரு நம்பிக்கையை ஊட்டும் விதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.