சுதந்திர நாளில் இந்திய நாட்டுக் கொடியை மாநில முதலமைச்சர்களும் ஏற்றும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்.
ஒன்றிய அரசிடமே அதிகாரம் குவிந்து விடக்கூடாது. மாநிலங்களுக்கும் பரவலாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய முத்தமிழறிஞர் கலைஞர், மாநில முதலமைச்சர்கள் ஆகஸ்ட்1 15ஆம் தேதி நாட்டுக் கொடியை ஏற்றும் உரிமையைப் பெற்றுக் கொடுத்த பெருமைக்குரியவர். கடந்த 1974ஆம் ஆண்டு, முதலமைச்சராக இருந்த கலைஞர், ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர நாளின்போது சென்னை கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதலாவது முதலமைச்சர் எனும் பெருமையைப் பெற்றார்.
“மாநிலத்துக்குச் சுயாட்சி, தனிக்கொடி” என்று கலைஞர் அரசியல் போராட்டத்தை தொடங்கியதன் விளைவால் தேசியக் கொடியை மாநில முதலமைச்சர்கள் ஏற்றும் உரிமையை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மாநிலங்களுக்கு வழங்கினார்.
அதற்கு முன் கடந்த 1973ஆம் ஆண்டு வரை ஆகஸ்ட் 15ஆம் தேதியும், குடியரசு நாளான ஜனவரி 26 அன்றும் ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் தான் கோட்டையில் கொடி ஏற்றி வந்தனர். மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் அமைதியாக நின்றிருக்க, ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்டவர்கள் தேசியக் கொடியை ஏற்றுவது ஜனநாயகமா எனக் கேள்வி எழுப்பி போராட்டம் நடத்தி உரிமையை மீட்டவர் கலைஞர். கடந்த 1973ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கலைஞர், மாநிலங்களில் முதலமைச்சர்கள் சுதந்திர நாள், குடியரசு நாளன்று புறக்கணிக்கப்படுகின்றனர் என்று புகார் அளித்தார். மாநிலத்துக்குச் சுயாட்சி வேண்டும், மாநிலங்களுக்கு தனிக்கொடி வேண்டும் என்று முழக்கமிட்டார். அது மட்டுமல்லாமல், ஒன்றிய, மாநில அரசுகளின் அதிகாரங்கள் குறித்து ஆய்வு செய்ய அப்போதே, ராஜமன்னார் தலைமையிலான குழுவை (கடந்த 1969-1971ஆம் ஆண்டு) அமைத்தார்.
இந்தக் குழுவில் ஏ.லட்சுமண (முதலியார்), சந்திரா (ரெட்டி) உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இருந்தனர். இந்தக்குழு 1971ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி 383 பக்க அறிக்கையை அளித்து. அதில் ஒன்றிய அரசிடம் இருக்கும் அதிகாரங்களை, மாநில அரசுகளை அதிகமாக்கி, பரவலாக்க வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது. நாட்டிலேயே முதல்முறையாக அப்போது இதுபோன்ற குழுவை நியமித்தது முத்தமிழறிஞர் கலைஞர் மட்டுமே.
அது மட்டுமல்லாமல், ‘முரசொலி’ நாளேட்டின் விழாவில், அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி மாறன், மாநில சுயாட்சி குறித்துப் பேசினார். விடுதலைநாளன்று ஏன் மாநில முதலமைச்சர்களுக்குத் ‘நாட்டுக்கொடி’ ஏற்றும் உரிமையை வழங்கக் கூடாது என்று கேள்வி எழுப்பி வியப்பை ஏற்படுத்தினார்.
அதன்பின் திமுக தலைவர் கலைஞர் விடுத்த கோரிக்கை உள்ளிட்டவற்றால், அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி, அந்த ஆண்டு ஜுலை மாதம் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் சுதந்திர நாளன்று தேசியக் கொடியை முதலமைச்சர்கள் ஏற்றலாம் என்று அறிவித்தார். இதையடுத்து கடந்த 1974ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர நாளன்று, சென்னையில் உள்ள கோட்டையில் நாட்டுக் கொடியை ஏற்றினார் முத்தமிழறிஞர் கலைஞர். அந்த விழாவுக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்து உரையாடி மகிழ்ந்தார் கலைஞர்.
செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்முறையாக கொடியை ஏற்றிய முதலமைச்சர் எனும் பெருமையை கலைஞர் பெற்றார். அதன்பின் நடந்த ஊடகங்கள் சந்திப்பில் பேசிய கலைஞர், மாநில சுயாட்சியின் முக்கியத்துவம் குறித்தும், அனைத்து மாநிலங்களுக்கும் அதன் அவசியம் குறித்தும் விவரித்தார். இது எங்களுடைய கட்சிக்காக மட்டும் செய்யவில்லை அனைத்து மாநில அரசுகளுக்கும் ஆதரவாகப் போராடியுள்ளோம் எனத் தெரிவித்தார்.
ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தாலும் அவர் ஆட்சி செய்யும் மாநிலத்தில் நாட்டின் சுதந்திர நாள் விழாவின்போது நாட்டின் கொடியை ஏற்ற முடியாமல் இருந்து வந்த நிலையை தனது வலுவான கோரிக்கையால் சாதித்துக் காட்டியதன் மூலம் அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் தேசியக்கொடியை ஏற்றும் உரிமையை பெற்றுத் தந்தார் முத்தமிழறிஞர் கலைஞர்.