நைனோ ஹிந்து சேர் (ஹிந்து விழிப்புணர்வு சிங்கம்) என்ற அமைப்பின் தலைவரான இந்த நைனோ சிங், பாஜகவின் முக்கிய பிரமுகராக உள்ளார். டில்லியில் உள்ள இவர் ஒன்றிய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, நிர்மலா சீதாராமன் போன்றவர்களுக்கு மிகவும் பரிச்சியமானவர். இவர் மிகப் பெரிய தலையணை அளவுக்கு ‘ஹிந்து விழிப்புணர்வு பெறுவது எப்படி?’ என்று புத்தகம் எல்லாம் எழுதி உள்ளார். இந்த நூலை நிர்மலாசீதாராமன், ஸ்மிருதி இரானி உள்ளிட்ட பல பாஜக தலைவர்களின் கைகளில் கொடுத்து வாழ்த்தும் பெற்றுள்ளார்.
சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதுதான் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம் என்று கூறியுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது, இன்று பல்வேறு பிரச்சினைகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது, ஏழை பணக்காரன் என அனைவருமே இந்த பிரச்சினைகளில் சிக்கி சீரழிகின்றனர்; இதற்கு மூல காரணம் வேர் எங்கே இருக்கிறது என்றால் பெண்களிடத்தில் தான்.
பெண்கள் பொறுப்பாக வீட்டு வேலை பார்த்துக்கொண்டு வீட்டிலேயே இருக்காமல் படிதாண்டி வெளியே வருகிறார்கள் – அவர்களுடனே பிரச்சினைகளும் கிளம்பிவருகிறது.
காலையில் அனைவரின் முன்பாக எழுந்து தேநீர் போட்டுக் கொடுத்து, இரவு சாப்பிட்டுவைத்த பாத்திரத்தைக் கழுவி காலை சிற்றுண்டி தயாரித்து அனைவருக்கும் சாப்பாடு கொடுத்துவிட்டு, வேலை மற்றும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு பிறகு துணிகளை துவைத்து காயப்போட்டு அதை மடித்துவைத்து சிறிது ஓய்வெடுத்து பிறகு மதிய உணவு, சிறிது ஓய்வுக்குப் பிறகு இரவு உணவு இடையே தொலைக்காட்சி பார்ப்பது, விடுமுறை நாட்களில் குடும்பத்தோடு திரைப்படம் அல்லது வேறு எங்கும் செல்லுதல் இதுதான் பெண்களின் பணி. வீட்டில் உள்ள பெண்கள் இதைச் செய்தால் போதும் – நாட்டில் எந்த பிரச்சினையும் வராது. ஆனால், காலையில் பெண்கள் படிதாண்டி வேலைக்குப் புறப்பட்டாலே சிக்கல்கள் குடும்பத்தைச் சூழ்ந்துகொள்ளும், ஆகவே இனி மேல் பெண்கள் வேலைக்குச் செல்வதை தடைசெய்யவேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சமூகவலை தளங்களில் உரையாடும் போது நியாயமும் கற்பித்துள்ளார். பண்டைய காலத்தில் பெண்கள் வீட்டில் இருந்தனர். அதனால் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் பேசியுள்ளார்.