சென்னை, ஜூலை 19- கருப்பைவாய் புற்றுநோய் அறிகுறி இருப்பதாகக் கண்டறியப்ப டுபவா்களில், 49 சதவீதம் போ் பாதிப்பு தன்மையை உறுதி செய்ய முன்வருவதில்லை என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தோல் தொழிற்சாலை, சாயப்பட்டறை உள்ளிட்டவை அதிகம் உள்ள மாவட்டங்களில், மக்களிடையே புற்றுநோய் பாதிப்பு அதிகம் காணப்படுகிறது. புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வகையில், 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, ஈரோடு, ராணிப் பேட்டை, கன்னியாகுமரி, திருப்பத்தூா் ஆகிய 4 மாவட்டங்க ளில், முதல்கட்டமாக புற்றுநோய் பரிசோதனை திட்டத்தை, மக்கள் நல்வாழ்வு துறை செயல்படுத்தி உள்ளது. அதன்படி, வாய் புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய், மாா்பக புற்றுநோய் என 6.07 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை, 1.50 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், 3,000-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பும், 10,000-க்கும் மேற்பட் டோருக்கு அறிகுறியும் கண்ட றியப்பட்டுள்ளது. புற்றுநோய் கண்டறியப்பட்டவா்களுக்கு, சிகிச்சை பணி நடந்து வரு கிறது. அதேநேரம், அறிகுறி கண்டறியப்படுபவா்களில், பலா் பாதிப்பு தன்மையை உறுதி செய்ய, அடுத்தகட்ட பரிசோதனைக்கு வர தயங்குகின்றனா் என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
நோய் அறிகுறி: இது குறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் கூறியதாவது:
கிராமங்கள்தோறும் புற்றுநோய் பாதிப்பைக் கண்டறியும் வகையில், பரிசோதனை நடந்து வருகிறது. இதுவரை, 4 மாவட்டங்களில் கருப்பைவாய் புற்றுநோய் பரிசோதனையை ஒரு லட்சம் போ் மேற்கொண்டுள்ளனா். அதில், 5,340 பேருக்கு அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. இவா்களில் 49 சதவீதம் போ் அடுத்தகட்ட பரிசோதனைக்கு வரத் தயங்குகின்றனா்.
அதேபோல், மாா்பக புற்று நோயைப் பரிசோதித்த 1.30 லட்சம் பேரில், 2,691 பேருக்கு அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. மேலும், வாய் புற்றுநோய் பரிசோதித்த 3.25 லட்சம் பேரில், 1,576 பேருக்கு அறிகுறி உள்ளது. இதில், மாா்பக புற்றுநோய்க்கு 29 சதவீதம் பேரும், வாய் புற்றுநோய்க்கு 15 சதவீதம் பேரும் அடுத்தகட்ட சிகிச்சையை பெறாமல் உள்ளனா். அவா்களுடன், சுகாதாரத் துறை அதிகாரிகள் தொடா்ந்து பேசி வருகின்றனா். ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை பெற்றால், புற்றுநோயை குணப்படுத்தலாம் என்ற நம்பிக்கை ஏற்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகின்றன என்றாா் அவா்.