ஆத்துார், ஜூலை 19– மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து, அடையாளம் தெரியாத நபர்கள் பணம், காணிக்கை பொருட்களை திருடிச் சென்றது குறித்து காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.
சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே கல்பகனுார் புதுார் கிராமத்தில், மாரியம்மன் கோவில் உள்ளது. அதே பகுதியை சேர்ந்த வெண்ணிலா என்பவர் கோவிலை பராமரிப்பு செய்து வருகிறார். நேற்றுமுன்தினம் (17.7.2024), ஆடி பிறப்பையொட்டி கோவிலை சுத்தம் செய்வதற்கு வந்த போது, கோவில் வெளிப்புற கதவு பூட்டு உடைந்திருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, அம்மன் கழுத்தில் இருந்த ஒரு கிராம் தாலி மற்றும் உண்டியல் உடைக்கப்பட்டு வெளிப்புற பகுதியில் வீசிச் சென்றுள்ளதும் தெரியவந்தது.
இந்த உண்டியலில், 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம், காணிக்கை பொருட்கள் இருந்ததாகவும், அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலி திருட்டு போனது குறித்தும், ஆத்துார் ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி, கோவிலில் உண்டியல் உடைத்த அடையாளம் தெரியாத நபர்களை, காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
போதைப் பொருள் கடத்தலை தடுக்க
சென்னை காவல் ஆணையருடன் கடற்படை அதிகாரி ஆலோசனை
சென்னை, ஜூலை 19 கடலோர பாதுகாப்பு மண்டல (கிழக்கு) அய்.ஜி., கமாண்டர் டானி மைக்கேல், சென்னை காவல் ஆணையர் அருணை நேற்று (18.7.2024) சந்தித்தார்.
அப்போது, கடல் வழியாக நடைபெறும் போதைப் பொருட்கள் கடத்தலை தடுப்பது, கடலில் மீட்புப் பணிகளை மேற்கொள்வது, நுண்ணறிவுத் தகவல்களை பகிர்வது உள்ளிட்ட கடலோர பாதுகாப்பு அம்சங்களை ஒருங்கிணைந்து செயல்படுத்துவது குறித்து விரிவான ஆலோசனை மேற்கொண்டனர்.
மேலும், கடல் வழியாக நடைபெறும் போதைப் பொருட்கள் கடத்தலை தடுப்பதை உறுதி செய்யும் வகையில் கடலோர பாதுகாப்பு அதிகாரிகளுடன் அடிக்கடி ஆலோசனை செய்வதற்கு ஏற்றவாறு, பாதுகாப்பு ஒருங்கிணைப்பு வழிமுறைகளை வகுப்பது குறித்தும்கலந்துரையாடினர்.