சென்னை, ஜூலை 18 பாசறை மு. பாலன் எழுதிய ‘‘சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு – சிறப்பிதழ்’’ மற்றும் ‘‘ஆரியர் – திராவிடர் போர்’’ ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா 17.7.2024 அன்று மாலை 6.30 மணியளவில் பெரம்பூர் படேல் சாலை – மாண்ட்போர்ட் பள்ளி அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் நூல்களை வெளியிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சிக்கு ‘பாசறைமுரசு’ ஏட்டின் நுட்ப ஆலோசகர் வழக்குரைஞர் சு. குமாரதேவன் தலைமை வகித்து உரையாற்றினார். தி.மு.க. சொற்பொழிவாளர் புலவர் சாமி நாகப்பன், திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் ச. இன்பக்கனி, சென்னை மாவட்ட திராவிடர் இயக்க தமிழர் பேரவைத் தலைவர் பா. கார்த்தி கேயன், வி.சி.க., அமைப்புச் செயலாளர் பெ. தமிழினியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பா. அறிவழகன் வரவேற்புரையாற்றினார்.
தி.மு.க. செய்தித் தொடர்புக் குழுத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் என்.எஸ். பிரதாப் சந்திரன் ஆகியோர் உரையாற்றினர்.
பெண் ஆணுக்கு அடிமை என்பதை
வலியுறுத்தும் வர்ணாசிரமம்
இறுதியாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் உரை யாற்றுகையில் குறிப்பிட்டதாவது:
திராவிடர் வரலாற்று ஆவணமாகவும், திராவிட எழுச்சியின் வடிவமாகவும் இந்நூல்கள் திகழ்ந்து டாக்டர் டி.எம். நாயரின் நினைவு நாளில் வெளியிடப்படுவது சிறந்த பொருத்தமாக அமைந்துள்ளது. வரலாற்றில் பழைய வேர்கள் முக்கியமானவையாகும். அவர்களுடைய தியாகத்தால்தான் இது போன்ற மேடைகள் அமைக்கப்படுகின்றன.
ஆண்களுக்கு அடிமையாக பெண்கள் இருக்க வேண்டும் என்னும் கொடுமையை வலியுறுத்துவது வர்ணாசிரம தர்மமாகும். பெண்கள் அசிங்கமாக இருக்க வேண்டும், அழகாக இருந்து விடக்கூடாது என்கின்ற பொருளில்தான் ‘பயிர்ப்பு’ என்ற சொல்லைக் குறிப்பிட்டு அதனை வலியுறுத்துகிறார்கள். வர்ணாசிரம ஒழிப்பை அடிப்படையாக வைத்தே நூல்களின் கருத்துகள் அமைந்துள் ளன. ஆரியர் – திராவிடர் போர் என்ற அடிப் படையில் கருத்தை எடுத்துச் சொல்வதற்கு தெளிவு இருக்க வேண்டும். அதைவிட துணிவு இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமானதாகும். துணிவும், தெளிவும் உள்ள சிறந்த பத்திரிகையாளர்தான் – எழுத்தாளர்தான் பெருமைக்குரிய பாசறை கு. பாலன் அவர்கள்.
நீதிக்கட்சி வரலாறு மற்றும் தலைவர்கள் பற்றி அறிந்து கொள்வதற்குத் தேடி அலைந்திட வேண்டிய நிலையும் உள்ளது. அதற்காகத்தான் அன்றைய காலத்து ஏடுகளைப் பெரியார் திடலில் ஒவ்வொன்றாகப் பதிப்பித்து வருகின்றோம். அறிவியல் மனப்பான்மை வளர்க்கப்பட வேண்டும். அதற்குரிய பணியைத்தான் ‘பாசறை முரசு’ இதழ் செய்கின்றது. பெரியார் திடலுக்கு ‘பாசறை முரசு’ ஏடு வரும் போதெல்லாம் அந்த இதழ்களை பத்திரப்படுத்தி வைக்க வேண்டும் என்று நூலகளிடத்தில் நான் வற்புறுத்துவேன்.
இவ்வாறு குறிப்பிட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் பாசறை மு. பாலனுக்கு பொன்னாடை அணிவித்துப் பாராட்டுத் தெரிவித்தார்.
விழாவில் தமிழர் தலைவருக்கும், மற்றைய சிறப்பாளர்களுக்கும் பொன்னடை அணிவிக்கப்பட்டு அனைவரும் சிறப்பிக்கப் பட்டனர். உள்ளூர் பிரமுகர்கள், கழக மற்றும் தி.மு.க. தோழர்கள் – பொது அன்பர்கள் ஆகி யோர் தமிழர் தலைவரிடமிருந்து புத்தகங்களை வரிசையாக வந்து பெற்றுக் கொண்டனர்.
பங்கேற்ற கழகப் பொறுப்பாளர்கள்
இவ்விழாவில், கழகப் பொருளாளர் வீ. குமரேசன், தலைமைக் கழக அமைப்பாளர் தே.செ. கோபால், வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை சு. அன்புச்செல்வன், காப்பாளர் கி. இராமலிங்கம், பொதுக் குழு உறுப்பினர் தி.செ.கணேசன், அமைப்பாளர் சி. பாஸ்கர், மாநில ப.க. பொதுச் செயலாளர் ஆ. வெங்கடேசன், மாநில இளைஞரணித் துணைச் செயலாளர் சோ. சுரேசு, ஆவடி மாவட்ட கழக அமைப்பாளர் உடுமலை வடிவேல், கொடுங்கையூர் கழகத் தலைவர் கோ. தங்கமணி, தங்க. தனலட்சுமி, வடசென்னை மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் த. மரகதமணி, கி. வெண்ணிலா, பெரியார் பிஞ்சு கி. அதிரா, செம்பியம் கழகத் தலைவர் பா. கோபாலகிருஷ்ணன், செயலாளர் பி.ஜி. அரசு, அயன்புரம் கழக தலைவர் துரைராசு, கொளத்தூர் சின்னராசு, க. கலைமணி, கண்ணதாசன் நகர் கழக அழைப்பாளர் கண்மணிதுரை, மங்களபுரம் கழக அமைப்பாளர் மா.டில்லிபாபு, பூம்புகார் நகர் ச. இராசேந்திரன், வாசகர் வட்டம் க.செல்லப்பன், ச.க. கோதாண்டபாணி மற்றும் தோழர்கள் பலரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
நூலாசிரியர் பாசறை மு. பாலன் ஏற்புரை வழங்கினார். நிறைவாக பா. தமிழரசன் நன்றி கூறினார்.