மயிலாடுதுறை, ஜூலை 18- நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கழகத்தின் இளைஞரணி மற்றும் மாணவர் கழகம் சார்பில் தமிழ்நாடு தழுவிய அளவில் நடைபெறும் இரு சக்கர வாகனப் பேரணியின் இராமநாதபுரம் முதல் சேலம் வரையிலான இரண்டாம் குழு, மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக. பொன்முடியின் தலைமையில் 13.7.2024 அன்று மாலை 3 மணிக்கு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தது.
மாவட்ட எல்லையான குமாரமங்கலத்தில் மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேகரன் தலைமையில் கழகத் தோழர்கள் திரளாக வந்திருந்து வரவேற்று அழைத்துச் சென்றனர்.
மயிலாடுதுறை தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாகச் சென்று பழைய பேருந்து நிலையம் கிட்டப்பா அங்காடி முன்புறம் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை சட்ட மன்ற உறுப்பினர் எஸ். ராஜகுமார், நகர் மன்றத் தலைவர் குண்டாமணி (எ) என்.செல்வராஜ், மனித நேய மக்கள் கட்சியின் மாநில செய லாளர் ஷேக் அலாவுதீன், தமுமுக மாவட்டச்செயலாளர் அப்துல் பாஷீத், தெ.மகேஷ், திமுக தோழர் மாரியப்பன் ஆகியோர் வருகை தந்து ஒன்றிய அளவில் நீட் தேர்வுக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில் காலம் கருதி தமிழர் தலைவர் ஏற்பாட்டில் நடைபெறும் இருசக்கர வாகனப்பேரணியை வாழ்த்தியும் தங்கள் ஆதரவை நல்கியும் உரையாற்றினர். நிறைவாக திராவிடர் கழகப் பேச்சாளர் தே.நர்மதா சிறப்புரையாற்றினார். பொதுமக்களிடையே கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள துண்டறிக்கை விநியோகிக்கப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் பேரணியில் பங்கு பெற்ற தோழர்களுக்கு சால்வை அணிவித்துப் பாராட்டு தெரி வித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்பாளர் ஞான.வள்ளுவன், மயிலாடுதுறை நகரத் தலைவர் சீனி.முத்து, நகர செயலாளர் பூ.சி.காமராஜ், மயிலாடுதுறை ஒன்றியத் தலைவர் ஆர்.டி.வி.இளங்கோவன், ஒன்றியச் செயலாளர் அ.சாமிதுரை, நகர துணைத் தலைவர் புத்தன், சீர்காழி ஒன்றியத் தலை வர் ச.சந்திரசேகரன் ஒன்றிய செயலாளர் கடவாசல் செல்வம் கொள்ளிடம் ஒன்றியத் தலைவர் பி.பாண்டியன் ஒன்றியச் செயலாளர் பூ.பாண்டுரங்கன் மாவட்ட ப.க. செயலாளர் தங்க.செல்வராஜ் கழகத் தோழர்கள் மு.வசந்த் பொய்யக்குடி சம்பந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறையில் தொடர்ந்து குத்தாலம் பேருந்து நிலையத்தில் ஒன்றிய தலைவர் சா.முருகையன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டு பிரச்சாரம் நடை பெற்றது.
குத்தாலம் நகர திமுக செயலாளர் சம்சுதீன், வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் குமார. வைத்தியநாதன் பேரூராட்சி மன்றத் தலைவர் சங்கீதா மாரியப்பன் மதிமுக மாநில இளைஞரணி செயலாளர் ஆசைத்தம்பி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் குத்தாலம் நகர செயலாளர் ஜெயராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் சூரியா மூர்த்தி, மதிமுக ஒன்றிய செயலாளர் வாசு, திமுக நகர துணைத்தலைவர் சட்ட. செந்தில் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். ஏராளமான பொது மக்கள் திரண்டிருந்து ஆர்வமுடன் கேட்டனர். அனைவருக்கும் நீட் எதிர்ப்பு விளக்கத் துண்டறிக்கை வழங்கப்பட்டது.
குத்தாலம் ஒன்றிய செயலாளர் இளமாறன், துணைத் தலைவர் பாலசுந்தரம், துணைச் செயலாளர் தி.சபாபதி, இளைஞரணி செயலா ளர் தமிழ்மாறன், ஒன்றிய விவ சாய அணிச் செயலாளர் கு.இளஞ்செழியன், செல்வி தமிழினி, செல்வன் தமிழ் நிலவன் ஆகியோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் ஒன்றிய கழகத்தின் சார்பில் தேநீர் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி முடிவுற்றதும் கழகத் தோழர்கள் தஞ்சை மாவட்ட எல்லையான நரசிங்கம்பேட்டை தந்தை பெரியார் சிலைவரை பேரணியில் உடன் சென்று வழியனுப்பி வைத்தனர்.