அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு
இராமநாதபுரம்,ஆக.19– இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று (18.08.2023) பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையின் மூலம் புதிதாக கட்டப் பட்ட துணை சுகாதார நிலையங்கள், வெளி நோயாளிகள் பிரிவு, செவிலியர் குடியிருப்பு மற்றும் கண் அறுவை சிகிச்சை அரங்கம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி முன்னிலை வகித்தார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையேற்று புதிதாக கட்டப்பட்ட மருத்துவக் கட்டடங்களை திறந்து வைத்து பேசுகையில் குறிப்பிட்டதாவது:
முதலமைச்சர் அவர்களின் சீரிய திட்டங்களால் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறையில் முதன்மை மாநிலமாக இருந்து வருகிறது. இது மட்டுமின்றி பல்வேறு திட்டங்களை மக்களின் தேவைகளை உணர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதிலும் குறிப்பாக மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், கலைஞர் வருமுன் காப்போம் போன்ற திட்டங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுகிணங்க இராமநாதபுரம், பரமக்குடி பகுதியில் 1 கோடி மதிப்பீட்டில் நகர்ப்புற நலவாழ்வு மய்யங்கள் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு இருந்து வருகிறது.
இராமநாதபுரத்தில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டி சட்ட மன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டதற்கிணங்க ரூ1.20 கோடி மதிப் பீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை 267 துணை சுகாதார நிலையங்கள், 59 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 2 வட்டம் சாரா மருத்துவமனைகள், 7 வட்டார மருத்துவமனைகள், 1 மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 1 மண்டல மனநல மருத்துவமனை இருந்து வருகிறது. இராமநாதபுரம் மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றது.
இப்பகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் நன்றாகப் படித்து எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் படிக்கும் நிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
முதலமைச்சர் அவர்கள் மானியக் கோரிக்கையில் இதயம் காப்போம் திட்டம் துவங்க உத்தரவிட்டு அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இருதய பாதுகாப்பு சிகிச்சை வழங்கப் பட்டு வருகிறது. இதன் நோக்கம் மாரடைப்பு நோயை கட்டுப்படுத்தி பாதுகாப்பதே ஆகும்.
தற்பொழுது இத்திட்டத் தினால் கிராம பகுதியில் இதயம் பாதுகாப்பு சிகிச்சைக்கு நாள் தோறும் மக்கள் சென்று மருத்துவரிடம் ஆலோசனை பெற்று வருவதுடன் நெஞ்சு வலி உள்ள நபர்களுக்கு அப்பொழுது கொடுக்க வேண்டிய 14 வகை மாத்திரைகள் உடனடியாக வழங்கப்படுகிறது.
இதன் மூலம் மாரடைப்பு தடுக்கப்பட்டு பாதுகாக்கும் நிலை உருவாகிறது.
இதே போல் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நாய் கடிக்கான தடுப்பூசி வழங்கப்படுகிறது. இதே போல் கண் அறுவை சிகிச்சைக்கும் உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு மக்களின் தேவைக்கேற்ப மருத்துவ சிகிச்சைகள் உடனுக்குடன் வழங்கிடும் வகையில் அனைத்து மருத்து வமனைகளும் போதிய உட்கட்டமைப்பு வசதிகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
-இவ்வாறு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
முன்னதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட வெளி நோயாளர் பிரிவு, மண்டபத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் செவிலியர் குடியிருப்பு, மண்டபம் கேம்பில் ரூ.24 இலட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம், காந்திநகரில் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம், சூசையப்பர் பட்டினத்தில் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம், மூக்கையூரில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம், இராமசாமி பட்டியில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் செவிலியர் குடியிருப்பு, பரமக்குடியில் ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் கண் அறுவை சிகிச்சை கட்டடம் என மொத்தம் ரூ.2.59 கோடி மதிப் பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கட்டடங்களை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பரிசு பெட்டகம்
அதனைத் தொடர்ந்து டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் 25 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பரிசு பெட்டகத்தினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜன், பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் மரு.அர்ஜூன் குமார் (இராமநாத புரம்), மரு.இந்திரா (பரமக்குடி), மருத்துவ இணை இயக்குநர் மரு.சகாய ஸ்டீபன் ராஜ், உதவி ஆட்சியர் (பயிற்சி) சிவானந்தம், மண்டபம் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.