நீதிக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் மூவரில் (டாக்டர் சி. நடேசனார், சர். பிட்டி தியாகராயர், டி.எம்.நாயர்) ஒருவர் தாரவாட் மாதவன் நாயர்.
தாரவாட்.மாதவன்.நாயர் 1868 ஆம் ஆண்டு சனவரி 15 ஆம் நாள் சென்னை மாகாணத்தில் பாலக்காடு அருகில் திரூர் கிராமத்தில் (தற்போதைய கேரளம்) சி.சங்கரன் நாயர், கமினி அம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். தந்தையார் சிறந்த வழக்கறிஞர், பிற்காலத்தில் மாவட்ட முனிசீப் பதவியிலும் இருந்தவர். அவர் பெயருக்கு முன் இருக்கிற ‘தராவாட்’ என்பது அவர் பிறந்தஊர். அது கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்திற்குள் இருக்கிறது. அங்குதான் பள்ளிப்படிப்பை முடித்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் FA (Fellow of Arts) பட்டம் பெற்றார். பின் ஸ்காட்லாந்து எடின்பரோ பல்கலைகழகத்தில் பயின்று அந்தக்காலத்து மருத்து கல்விப் பட்டமான M.B.C.M. என்ற பட்டம் பெற்றார் (1894). அதன்பின் பிரைட்டன் நகரத்தில் காது-மூக்கு-தொண்டை மருத்துவமனையில் மருத்துவராக வேலைபார்த்தார். அதே எடின்பரோ பல்கலைகழகத்தில் M.D. பட்டம் பெற்றார் (1896). பிறகு காது-மூக்கு-தொண்டை மருத்துவத் துறை மேல் படிப்பை பிரான்ஸ் தலைநகர் பாரிசில் முடித்தார். கிரேக்க மொழியில் புலமை பெற்றவராகவும் இருந்தார்.
1897 ஆம் ஆண்டில் சென்னைக்குத் திரும்பி வந்த டாக்டர் நாயர் தம் மருத்துவத் தொழிலைத் துவங்கினார். “டாக்டர் நாயர் சென்னைப் பல்கலைக்கழக வைத்திய சங்கத்தின் அங்கத்தினராக (Faculty Of Medicine) இருந்தார். சென்னை மெடிக்கல் கவுன்சில் தோன்றியது முதற்கொண்டே ஆண்டுதோறும், அதன் துணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார். பம்பாயில் நடந்த மெடிக்கல் காங்கிரசுக்குச் சென்னைப் பிரதிநிதியாகச் சென்று வந்தார். டாக்டர் நாயரின் ‘மெடிக்கல் லைப்ரரி’ பெரியதோர் நூலகமாகும். தன் சொந்த அனுபவங்களின் மூலமாக Diabites; Nature and Treatment என்ற நூலை எழுதினார். Antiseptic என்ற பத்திரிகையை நடத்தினார்.
மருத்துவத்துறை அல்லாத Madras Standard என்ற பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்திருக்கிறார். பின்னர், Justice என்ற ஆங்கில இதழின் ஆசிரியர் பொறுப்பை டி.எம்.நாயர் ஏற்றுக் கொண்டார்.
20 டிசம்பர் 1916 பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கை (The Non-Brahmin Manifesto) வெளியானது.
“நீதிக் கட்சியின் நோக்கம் பார்ப்பனரல்லாத மக்களைப் பல வகைகளிலும் மேம்பாடுறச் செய்வதே அல்லாமல், பார்ப்பனர்களை வீழ்த்த வேண்டும் என்பதல்ல. எங்களுக்குச் சமூக நீதி வேண்டும். அதனை நிறைவேற்றுதற்குரிய அரசியல் உரிமை வேண்டும். பிரிட்டீசு அரசு அதற்கு ஏற்றபடி சலுகைகளைப் பெருக்கித் தர வேண்டும். நீதிக் கட்சி இருந்தியாவிற்குத் தன்னாட்சி உரிமை கோருகிறது.
அதே நேரத்தில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டவர், பழங்குடியினர் ஆகியோருக்கு முழு உரிமையும் பாதுகாப்பும் அளிக்கக்கூடியதாக அந்தத் தன்னாட்சி இருக்க வேண்டும். அதுவே எங்கள் குறிக்கோள். இந்தக் குறிக்கோளை இங்கு விளக்கி வருவது போன்றே இங்கிலாந்திலும் கூட்டம் போட்டும், எழுதியும் வருவதற்காகத்தான் நான் ஆண்டுதோறும் தவறாமல் இங்கிலாந்து சென்று வருகிறேன்” என்று கூறினார் டாக்டர் நாயர்.
சென்னை டவுன் ஹாலில் நடந்த பொதுக் கூட்டத்தில் நாயர் பேசிக் கொண்டிருக்கும் போது தீடீரென ஒரு குரல். நீங்கள் ஏன் காங்கிரஸை விடுத்து வகுப்புவாதக் கட்சியில் சேர்ந்தீர்கள் ? வகுப்பு வாதத்தால் நாடு சுயராஜ்ஜியம் பெறுமா? அப்படி எங்கேனும் நிகழ்ந்த சரித்திரச் சான்று உண்டா? – கேள்வியைக் கேட்டவர் திரு.வி.க.!
நாயரின் பதில்: நான் காங்கிரசில் தொண்டு செய்தவனே. அது பார்ப்பனர் உடைமையாகியதை நான் உணர்ந்தேன். வகுப்பு வாதத்தால் சுய ராஜ்ஜியம் வரும் என்று எவருங் கூறார். வகுப்பு வேற்றுமை உணர்வுத் தடித்து நிற்கும் வரை சுய ராஜ்ஜியம் என்பது வெறுங்கனவே! இதைப் போக்கிய பின்னரே சுய ராஜ்ஜியத் தொண்டில் இறங்க வேண்டும் என்பது என் கருத்து என்றார்.
நாயரின் பேச்சும், எழுத்தும் நீதிக் கட்சியை எல்லா இடத்திற்கும் கொண்டு சேர்த்தது.