உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் சிறப்பாகக் கடமையாற்றி, முத்திரை பதித்த சில முன்னோடித் தீர்ப்புகளை வழங்கியுள்ள மாண்பமை நீதிபதி, ஜஸ்டீஸ் அரங்கநாதன் மகாதேவன் அவர்கள் குடியரசுத் தலைவர் – கொலிஜியத்தின் பரிந்துரையையேற்று நியமித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும்.
இவரது நியமனத்தை நாம் ஒரு சமூக நீதிப் பணியாளன் என்ற முறையில் வரவேற்று வாழ்த்துவதற்கு இரண்டு முக்கிய அடிப்படைக் காரணிகள் உண்டு.
பிற்படுத்தப்பட்டோருக்குத் தகுதி உண்டு!
1. பிற்படுத்தப்பட்ட சமூகத்தவருக்கு தகுதி, திறமை என்பது இல்லை; அல்லது அவை எட்டாக் கனி என்ற ஒரு பொய்ப் பிரச்சாரப் பிம்பம் இதன் மூலம் நொறுக்கப்பட்டு, அறிவும் உழைப்பும், தகுதியும், திறமையும் எந்த ஜாதி, எந்த நபர் என்பவர்களின் ஏகபோக உடைமை அல்ல; “உழைப்பில் வாரா உறுதிகள் உளவோ‘‘ என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தும் பாடம் – இவரது பதவி உயர்வு – உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் ஆகும்.
2. உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் சொல்லப்பட்ட நீதிகளில் கூட முன்னுரிமை பெற்ற நீதியான சமூகநீதி அடிப்படையில் இந்த நியமனத்தின் தேவை (Justice Social, Economic and Political) என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டியதாக காரணம் அமைகின்றது என்பதை உச்சநீதிமன்றத்தின் 5 மூத்த நீதிபதிகள் கொண்ட கொலிஜியம் அளித்துள்ள (11.7.2024) பரிந்துரை கூறுகிறது!
உச்சநீதிமன்றத்திற்குப் பன்முகத் தன்மையை அளிக்கும்!
“Mr Justice Mahadevan belongs to a backward community from the State of Tamil Nadu. His appointment will bring diversity to the Bench.
The Collegium has taken due not of the fact that Mr Justice R Mahadevan ranks third in the order of presently serving judges of the Madras High Court including the Judges who have been posted as Chief Justices outside the Madras High Court. At this stage, the Collegium has given precedence to the candidature of Mr Justice R Mahadevan in order to give representation to the backward community,
இதன் தமிழாக்கம்:
“நீதிபதி மகாதேவன் அவர்கள் தமிழ்நாட்டின் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர். உச்சநீதிமன்ற நீதிபதியாக அவரை நியமனம் செய்தது, நீதிமன்றத்திற்கு பன்முகத் தன்மையை அளிக்கும். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து நியமனம் பெற்றுள்ள தலைமை நீதிபதி உள்ளிட்ட பட்டியலில் மூன்றாம் இடத்தில் நீதிபதி மகாதேவன் அவர்கள் இருந்தாலும் உச்சநீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமனம் செய்திடும் கொலிஜியம் கவனமாக பரிசீலித்து சரியாக நியமனம் செய்துள்ளனர்.
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு பிரதிநிதித்துவம் அளித்திட வேண்டும் என்பதற்கு நீதிபதி மகாதேவன் அவர்களது நியமனம் ஒரு நல்ல முன்மாதிரியை ஏற்படுத்தி உள்ளது.‘‘
என்ற பரிந்துரை வரிகளில் முதல்முறையாக சமூகநீதி அடிப்படை, குறிப்பாக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் பதவி உரிமை அங்கீகரிக்கப்பட்டு, பின்பற்றும் வழிகாட்டும் நெறிமுறைகள் இதற்கு முன் புகுத்தப்பட்ட ‘வகுப்பு வாதம்’ என்ற தவறான குற்றச்சாற்றுப் பார்வை இதன்மூலம் அகற்றப்பட்டு, சமூக நீதி, மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசின் மூன்று தூண்களில் மிக முக்கியமான நீதித்துறைகளின் நியமனங்களில் பின்பற்றப்பட வேண்டியது சட்டப்படி உள்ள உரிமை என்பதை இப்பரிந்துரை ஏற்று வரலாற்று முத்திரை அளித்துள்ளது.
அத்தனை ‘கொலிஜியம்’ நீதிபதிகளையும் நாம் பாராட்டுகிறோம்.
சமூக நீதிக்கான வழிகாட்டும்
நெறிமுறைகளை செய்திடுக
புதிதாக பதவி நியமனம் பெற்ற ஆற்றல்மிகு ஓர்ந்து கண்ணோடாது தேர்ந்து செயல்படும் நீதிபதி மாண்புமிகு ஜஸ்டீஸ் திரு.அரங்கநாதன் மகாதேவன்அவர்களுக்கு நமது வாழ்த்துகளைத் தெரிவிக்கிறோம்.
“மனிதன் தானாகவும் பிறக்கவில்லை
தனக்காகவும் பிறக்கவில்லை
சமூகத் தொண்டே அவனது அடையாளம்‘‘
என்று கூறிய தந்தை பெரியார் அவர்களின் மூதுரையை நினைவூட்டி, அவருக்கு சமூகநீதி வாழ்த்தினைக் கூறுகிறோம். இந்தப் பரிந்துரையின் தத்துவத்தை செயலாக்கமாக, இனிவரும் உச்சநீதி மன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் பதவிகளை நிரப்பும் நியமனங்களிலும் பின்பற்றப்பட வேண்டிய ‘சமூக நீதிக்கான’ வழிகாட்டும் நெறிமுறைகளைப் பின்பற்றச் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
(கி.வீரமணி)
தலைவர்,
திராவிடர் கழகம்
17.7.2024
சென்னை