உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் வரும் 26ஆம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவில் இருந்து 16 விளையாட்டுகளில் 113 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதில் துப்பாக்கி சுடுதலில் 21 பேர் களமிறங்குகின்றனர். துப்பாக்கி சுடுதல்அணி குறித்து ஓர் பார்வை..
ஒலிம்பிக் வரலாற்றில் துப்பாக்கி சுடுதலில் இந்தியா இதுவரை 4 பதக்கங்கள் வென்றுள்ளது. முதன்முறையாக 2004ஆம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், ஆடவருக்கான டபுள் டிராப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்பின்னர் 2008ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான 10 மீட்டர் ரைபிள் பிரிவில் அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார்.
2012ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான 25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டல் பிரிவில் விஜய் குமார் வெள்ளிப் பதக்கமும்,ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் ககன் நரங் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
இம்முறை பாரிஸ் ஒலிம்பிக்கில் முதன்முறையாக துப்பாக்கி சுடுதலில் அனைத்து பிரிவுகளிலும் இந்தியா பங்கேற்கிறது. ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக துப்பாக்கி சுடுதலில் 21 பேர் கொண்ட இந்திய அணி களமிறங்குகிறது. இதனால் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகக் கருதப்படுகிறது. கடந்த முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய துப்பாக்கி சுடுதல் அணி மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் வீரர், வீராங்கனைகளின் செயல்திறன் ஏமாற்றம் அளித்ததால் வெறும் கைகளுடன் திரும்ப நேரிட்டது.
தற்போது துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர், வீராங் கனைகள் 21 பேர் 27 பதக்கங்களுக்காக போட்டியிட உள்ளனர். இவர்களில் அய்ஸ்வரி பிரதாப் சிங் தோமர், சிப்ட்கவுர் சாம்ரா, இஷா சிங் மற்றும் அர்ஜுன் பாபுதா ஆகியோர் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.