கருநாடகா அணைகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் அளிக்க முடியாது என்பதா? கருநாடக அரசுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம்

Viduthalai
2 Min Read

சென்னை, ஜூலை 15- கருநாடகா அணைகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் அளிக்க முடியாது என கருநாடக அரசு தெரிவித்திருப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டி காவிரி நீரைப் பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது குறித்து முடிவு எடுத்திடவும் உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் அறிக்கை வருமாறு: காவிரி நடுவர் மன்றம் 5.02.2007 அன்று அளித்த இறுதி ஆணையினையும், உச்சநீதிமன்றத்தின் 16.02.2018 தேதியிட்ட தீர்ப்பினையும், செயல்படுத்த, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு (CWRC) ஆகிய அமைப்புகளை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, 2018 ஆம் ஆண்டு ஜூன் முதல் இவ்வமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தீர்ப்புகளின் படி தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய நீரை சென்ற ஆண்டில் கருநாடக அரசு விடுவிக்காததால், வேளாண் பெருமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை நாடி நீரைப் பெற்றது.

தற்போதைய தென்மேற்குப் பருவமழைக் காலத்தில், கருநாடக அணைகளின் நீர்வரத்தை கணக்கில் கொண்டு காவிரி நீர் ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஆகிய அமைப்புகள் தமிழ்நாட்டிற்கு பில்லிகுண்டுலுவில் கிடைக்க வேண்டிய நீரினை கணக்கிட்டு 12.07.2024 முதல் 31.07.2024 வரை நாளொன்றுக்கு ஒரு டிஎம்சி நீரை விடுவிக்க வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆணையிட்டுள்ளது. இந்த நிலையில், இந்த ஆணைப்படி தமிழ்நாட்டிற்கு விடுவிக்க வேண்டிய நீரை விடுவிக்க இயலாது என்று கருநாடக அரசு தெரிவித்து இருப்பது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த ஆணையை உடனடியாக செயல்படுத்திட தமிழ்நாடு அரசு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைப்பிற்கு கடிதம் எழுதியுள்ளது. இவ்வாறு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆணையின்படி நீரை விடுவிக்காத கருநாடகத்தின் செயல் உச்சநீதிமன்றத்தின் ஆணையை மீறுவதாகும்.

இன்றைய அளவில் (15.7.2024) கருநாடகாவின் 4 முக்கிய அணைகளின் நீர் இருப்பு 75.586 டி.எம்.சி. ஆகும். மேலும், IMDயின் அறிக்கையின்படி மழை சரியான அளவில் பெய்ய வாய்ப்புள்ளது. மேட்டூர் அணையில் வெறும் 13.808 டிஎம்சி அளவிற்கு மட்டுமே நீர் உள்ளது. இந்தச் சூழலில், காவிரி நீர் ஒழுங்காற்று ஆணையம் அமைப்பின் ஆணையின்படி வரையறுக்கப்பட்டுள்ள நீரை கருநாடகா நீர் தர மறுப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும்.
இவ்வாறு, தமிழ்நாட்டிற்கு நீர் வழங்க முடியாது என்று கருநாடக அரசு கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு விவசாயிகளின் நலனை பாதிக்கக்கூடிய இத்தகைய செயல்களை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. காவிரி நீரைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தை நாளை (16.07.2024) காலை 11.00 மணிக்கு தலைமைச் செயலகத்தில் கூட்டிட ஆணையிட்டுள்ளேன். இக்கூட்டத்தில் அனைவரையும் கலந்தாலோசித்து, சட்ட வல்லுநர்களின் கருத்துக்களைப் பெற்று, தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும்.
-இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *