சென்னை, ஜூலை 15- சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது கட்ட பணிகள் நகரின் 118 ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் 128 கிலோ மீட்டருக்கு வடிவமைக்கப்பட்டது.
2017ஆம் ஆண்டு சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்கான கட்டுமானம் தொடங்கிய நிலையில், 2021ஆம் ஆண்டு ஒன்றிய நிதிநிலை அறிக்கையில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது கட்ட பணிகளுக்கு 63,426 கோடி அறிவித்தார். சென்னை மெட்ரோ திட்டத்திற்கான நிதி அறிவிக்கும் போது கொச்சி, நாக்பூர், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கும் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான நிதி அறிவிப்பு வெளியானது. ஆனால், அறிவிக்கப்பட்ட நிதி அனைத்து நகரங்களுக்கும் கொடுக்கப்பட்ட நிலையில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான கோப்புகள் ஒன்றிய நிதி அமைச்சகத்தின் பல வாரியங்களில் முடங்கியுள்ளது.
இது தொடர்பாக பல ஆண்டுகளாக ஒன்றிய மாநில அரசுகளுக்கு சமூக ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன் என்பவர் ஆறுக்கும் மேற்பட்ட முறை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் (ஆர்.டி.அய்) மனு அளித்துள்ளார். அதில், கடந்த ஆறு மாதத்தில் கிடைத்த நான்கு பதில்களும் ஒன்றிய அரசு நிதி ஒதுக்காததும், கோப்புகள் முடங்கியுள்ளதும் ஆதாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கேட்கப்பட்ட கேள்விக்கு பிரதமர் அலுவலகம் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது கட்ட பணிகள் தொடர்பாக 2019 முதல் 2023 வரை பிரதமர், 12 முறை ஒன்றிய நகர்ப்புற மற்றும் வீட்டு வசதி துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
ஒன்றிய நிதி அமைச்சரின் அறிவிப்பு தொடர்பாக பொது முதலீட்டு வாரியம் சென்னை மெட்ரோ ரயில் கோப்புகளை ஒன்றிய அமைச்சரவை குழுவிற்கு அனுப்பி உள்ளதாக கூறியுள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கிடைக்கப்பட்ட மற்றொரு ஆர்டிஅய் பதிலில் சென்னை மெட்ரோ ரயில் தொடர்பான கோப்புகள் ஏதும் வரவில்லை என ஒன்றிய அமைச்சரவைக் குழு பதிலாக தெரிவித்துள்ளது. இதன்மூலம் ஒன்றிய நிதி அமைச்சகத்தின் பல்வேறு வாரியங்களில் சென்னை மெட்ரோ ரயில் நிதி அனுமதிக்கான கோப்புகள் முடங்கியுள்ளது தெரியவந்துள்ளது.
இதே காலகட்டத்தில் மற்ற நகரங்கள் மற்றும் மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய மெட்ரோ நிதியை ஒன்றிய அரசு சரிவர கொடுத்துள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளார், ஆர்.டி.அய் ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன்.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்கு இன்னமும் நிதி ஒதுக்கப்படாத நிலையில், வெவ்வேறு இடங்களில் ஆறு பகுதிகளில் சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் தனித்தனியாக ஒப்பந்த நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கான நிதியை மாநில அரசு வங்கிகளிடம் இருந்து கடன் பெற்று கட்டி வருவதாகவும், இதன் மூலம் மாநில அரசின் கடன் அளவு அதிகரிப்பதாகவும் கடந்த மாநில நிதிநிலை அறிக்கையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளிப்படையாகவே தெரிவித்தார்.
மெட்ரோ திட்டத்திற்கான நிதி ஒன்றிய அரசிடம் இருந்து வராவிட்டாலும் திட்டத்தின் பணிகள் திட்டமிட்டபடி தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர். எந்தக் காரணத்திற்காகவும் கட்டுமானப் பணிகள் நின்று விடக் கூடாது என்றும் 2028க்குள் முழுமையாக முடிப்பதற்கான அனைத்து நிதி ஆதாரங்களையும் மாநில அரசு திரட்டி வருவதாக மெட்ரோ ரயில் முக்கிய அதிகாரிகள் தெரிவித்தனர்.