ஜாதி வெறி, மதவெறி, பதவிவெறிகளுக்கு
திராவிட மண்ணில், பெரியார் மண்ணில் இடமில்லை!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தி.மு.க. வெற்றி!
ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே தேர்வு என்பதை மக்கள் ஏற்கவில்லை!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் அன்னியூர் சிவா அவர்கள், ஏறத்தாழ 67 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர்களைத் தோற்கடித்திருக்கிறார். பாயிரம் பேசியவர்களுக்கெல்லாம் டெபாசிட் போயிருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வெற்றியை இங்கே நாம் எப்படிப் பெற்றோமோ, அதேபோன்று இந்தியா கூட்டணியைச் சார்ந்த கட்சியினர், பல மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் வெற்றியைப் பெற்றிருப்பது எதைக் காட்டுகின்றது என்று சொன்னால்,
மோடியினுடைய ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி, என்.டி.ஏ. ஆட்சி என்று சொல்லப்பட்டாலும், அது மக்களுக்குச் சாதகமான ஆட்சியல்ல; மக்களின் நலத்தைப் பேணக்கூடிய ஆட்சியாக இல்லை என்பதற்கான ஒரு தீர்ப்பாகவே, பா.ஜ.க.விற்கு எதிராக அல்லது காவிகளுக்கு எதிராக, அவர்கள் சொல்லுகின்ற ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே தேர்வு என்பதையும் ஏற்கவில்லை என மெய்ப்பித்திருக்கிறார்கள்.
குறிப்பாக, விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப்பற்றி சொல்லவேண்டுமானால், ஜாதி வெறி, மதவெறி, பதவிவெறி ஆகிய மூன்று வெறிகளும் கூட்டுச் சேர்ந்த நேரத்தில், மூன்று வெறிகளுக்கும் இந்தத் திராவிட மண்ணில், பெரியார் மண்ணில் இடமில்லை என்று தீர்ப்பளித்திருக்கின்ற மக்களுக்கு மகிழ்ச்சியோடு நாங்கள் நன்றி சொல்லக் கடமைப்பட்டு இருக்கின்றோம்.
இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.
பொள்ளாச்சி, ஜூலை 15 இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது பொய்யான – ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு கற்பனையை அதிதீவிரமாக எதிர்க்கட்சிகள் பரப்புரை செய்தன! ஜாதி வெறி, மதவெறி, பதவிவெறிகளுக்கு திராவிட மண்ணில், பெரியார் மண்ணில் இடமில்லை! வாக்களித்த விக்கிரவாண்டி மக்களுக்கு நன்றி என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
கடந்த 13.7.2024 அன்று பொள்ளாச்சியில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், ‘சன் நியூஸ்’ தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்தார்.
அப்பேட்டியின் விவரம் வருமாறு:
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றிருக்கிறது; விக்கிரவாண்டி தி.மு.க. வேட்பாள ராக களம் இறங்கியவர் தற்பொழுது, விக்கிரவாண்டியின் சட்டப்பேரவைத் தொகுதியில் உறுப்பினராக ஆகியிருக்கின்றார். கிட்டத்தட்ட தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவர்களைவிட 67,785 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கின்றார்.
இந்த வெற்றி எப்படிப்பட்டது, இந்த வெற்றியின் சாராம்சம் என்ன என்பதுபற்றி பேசுவதற்காக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் ‘சன் நியூஸ்’ தொலைக்காட்சிக்காக சில கேள்விகளை முன்வைக்கின்றோம்.
தி.மு.க.வின் பிரமாண்டமான வெற்றியை
நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
கேள்வி: விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் பொறுத்தவரையில், வழக்கமாக ஆளுங்கட்சிக்கு இருக்கும் ஆதரவைவிட, கடுமையான சவால்களுக்கு மத்தியில் இந்த இடைத்தேர்தலை சந்திக்க வேண்டி இருந்தது. குறிப்பாக, கள்ளக்குறிச்சி விஷச் சாராய நிகழ்வு உள்பட.இந்த நிகழ்வுகளுக்கிடையேயும் தி.மு.க.வின் பிரமாண்டமான வெற்றியை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: எப்பொழுதுமே திராவிடர் இயக்கம், குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி, சமூகநீதி காக்கின்ற ஆட்சியாகும். அதிலும் கலைஞர் அவர்களின் மறைவிற்குப் பிறகு, தமிழ்நாட்டில் வெற்றிடம்தான் என்று சிலர் ஆரூடம் கூறியதைப் பொய்யாக்கி, இதைக் கற்றிடமாக நடத்திக் கொண்டிருக்கக் கூடிய ‘திராவிட மாடல்’ ஆட்சியினுடைய நாயகர், சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக இருந்து, பல சாதனைகளை நாள்தோறும் நடத்தி வருகின்றார். அந்தச் சாதனைகள் வரலாற்றுச் சாதனைகளாக இருக்கின்றன.
மதவெறி, ஜாதி வெறியோடு கூட்டுச் சேர்ந்தது!
அவற்றையெல்லாம் வெறும் வரலாற்றுச் சூனியங்களாக ஆக்கவேண்டும் என்று திட்டமிட்டு முயற்சி செய்தவர்கள், வடக்கே இருந்தவர்கள் மட்டுமல்ல, இங்கேயும் இருக்கக் கூடியவர்கள் எல்லாம் சிலரைத் தங்கள் வயப்படுத்திக் கொண்டு, மதவெறி, ஜாதி வெறியோடு கூட்டுச் சேர்ந்தனர்.
ஜாதி வெறி, மதவெறி, பதவி வெறி, பண வெறி எல்லா வெறிகளுக்கும் விக்கிரவாண்டி மக்கள், குறிப்பாக தாய்மார்கள் நல்ல பதிலை அளித்திருக்கிறார்கள். அதனுடைய மிகப்பெரிய எதி ரொலியும் – ஆவணம் போன்ற ஒரு சான்றும்தான் இன்றைக்குக் கிடைத்திருக்கிறது.
இந்த வெற்றி இன்னொரு வகையிலும் மிக முக்கியமானதாகும்.
மதவெறி, காவி ஆட்சியாளர்களுடைய
வீழ்ச்சி தொடங்கியிருக்கிறது!
இந்தியா கூட்டணியினுடைய வெற்றி வாய்ப்புகள் எப்பொழுதும் மங்கவில்லை என்பதற்கு அடையாளமாகத்தான் இந்த வெற்றி. இதனோடு இணைந்து இந்தியாவில் உள்ள ஏழு மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் இந்தியா கூட்டணி மிகப்பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. பா.ஜ.க.விற்கு இடமில்லை என்பதை மீண்டும் உறுதி செய்திருக்கிறார்கள்.
எனவே, தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு என்று திசை களையெல்லாம் தாண்டி, இன்றைக்கு மதவெறி காவி ஆட்சியாளர்களுடைய வீழ்ச்சி தொடங்கியிருக்கிறது.
ஜாதியை மூலதனமாக ஆக்கக் கூடியவர்களுக்கு நல்ல பாடத்தை விக்கிரவாண்டி பொதுமக்கள் கற்பித்திருக்கின்றார்கள்.
கேள்வி: பொதுவாகவே இடைத்தேர்தல் என்றால், அது ஆளுங்கட்சிக்குச் சாதகமாகவே இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால், இந்த இடைத்தேர்தலைப் பொறுத்தவரையில், எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒரு குடையின்கீழ் கிட்டத்தட்ட இணைந்ததுபோன்று இருந்தன. பா.ம.க. தேர்தலில் நின்றாலும்கூட, அ.தி.மு.க. இடைத்தேர்தலில் நிற்காது என்று சொல்லி, மறைமுக ஆதரவு தருகிறார்கள் என்று பேசப்பட்டது. ஒரு வலுவான எதிர்க்கட்சியின் போட்டியோடுதான் இத்தேர்தல் நடைபெற்றது; கடுமையான சவால்கள் இருந்தன. கள்ளக்குறிச்சி போன்ற நிகழ்வுகள் விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டது. இதையெல்லாம் கடந்த, ஒரு பிரம்மாண்ட வெற்றியை மக்கள் கொடுத்திருக்கிறார்களே, அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: எப்பொழுதுமே உண்மைக்கும், போலிக்கும் இருக்கக்கூடிய வேறுபாட்டை மக்கள் தெரிந்துகொள்வார்கள். குறிப்பாக, தமிழ்நாட்டு மக்கள் எப்பொழுது, எப்படி தீர்ப்பைக் கொடுக்கவேண்டுமோ, அதைத் தவறாது கொடுப்பார்கள். எவ்வளவு மோசமான, பொய்யான அல்லது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு கற்பனையை அதிதீவிரமாகப் பரப்புரை செய்தாலும், குறிப்பாக கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்புகளுக்காக முதலமைச்சர் பதவி விலகவேண்டும் என்றெல்லாம் சொன்னார்கள். அதுமட்டுமல்லாமல், நேரிடையாக களத்திற்கு வராதவர்கள், எப்படி வாலியை மறைந்து நின்று கொன்ற ராமன் கதைபோல, இன்றைக்குப் பா.ஜ.க. செயல்பட்டது. அதை மக்கள் நன்றாகப் புரிந்துகொண்டார்கள்.
காரணம், இது சமூகநீதி பூமி, பெரியார் மண், திராவிட மண்!
ஆகவேதான், இடைத்தேர்தலா? பொதுத்தேர்தலா? என்பது எங்களுக்கு முக்கியமல்ல!
எங்களுக்கு எது முக்கியம் என்றால், சமூகநீதிக் கொள்கையைத் தேர்ந்தெடுக்கக் கூடியவர்கள் நாங்கள். அந்தக் கொள்கையை யார் செயற்படுத்துவார்களோ அவர்களுடைய ஆட்சி தொடரவேண்டும் என்கிற மக்களின் உணர்ச்சியும்தான் இதன்மூலமாக வெளிப்பட்டு இருக்கிறது.
எனவே, இது ஒரு நல்ல அரசியல் பாடம் மற்றவர்களுக்கு.
கற்றுக் கொள்ளவேண்டியவர்கள் கற்றுக்கொள்ளவில்லை யானால், எதிர்காலத்தில் இன்னும் அதிகமான விலையைக் கொடுக்கவேண்டி இருக்கும்.
தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு வெற்றி முகம் தொடர்கிறதே!
கேள்வி: தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு, நடைபெற்ற தேர்தல்களில் எல்லாம் தொடர்ந்து வெற்றிமுகம் பெற்று வருகிறது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: நான் ஏற்கெனவே சொன்ன பதில்களின் தொடர்ச்சியாகத்தான் இந்தக் கேள்விக்கும் என்னுடைய பதிலை அளிக்க விரும்புகின்றேன்.
ஏற்கெனவே தேர்தல்களில் பெற்ற வெற்றி குறித்து அவர் வெற்று ஆரவாரம் செய்தோ, மற்றவற்றைக் காட்டியோ நடை பெறப் போகும் தேர்தலில் வெற்றி பெற அவர் எப்போதும் முயற்சிக்கவில்லை.
நிதர்சனமாக மக்கள் பயன்பெற்று வருகிறார்கள். மகளி ருக்கு இருந்த தொல்லைகள் எல்லாம் மாறியிருக்கின்றன. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக வெளிநாட்டு முதலீடு, உள்நாட்டு முதலீட்டிற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி, அதிலும் குறிப்பாக இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய தலைமையில், கலைஞருக்குப் பிறகு ஏற்பட்டிருக்கி்ன்ற ஆட்சியின் தொடர்ச்சி என்பது எவ்வளவு தெளிவாக சாதனைகளைச் செய்கிறது என்பதை மகளிர் உணர்ந்திருக்கிறார்கள்; மாணவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்
தன்னுடைய வியூகத்தால், தன்னுடைய உழைப்பால்…
”காலை உணவுத் திட்டம்” என்பதை இன்றைக்கும்கூட விரிவாக்கம் செய்துகொண்டிருக்கிறது தமிழ்நாடு அரசு. அதிலும் ஒரு பக்கத்தில் நிதி நெருக்கடி என்ற ஒரு செயற்கை நெருக்கடியை ஒன்றிய பா.ஜ.க. அரசு உருவாக்கிக் கொண்டிருந்தாலும், அதையும்தாண்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தன்னுடைய வியூகத்தால், தன்னுடைய உழைப்பால், தன்னுடைய திறமையால் சிறப்பாக ஆட்சியை நடத்தி வருகிறார்.
புயல் அடிக்கின்ற நேரத்தில், கப்பல் கேப்டன், அந்தக் கப்பலுக்குச் சேதம் ஏற்படாதவாறு எப்படி செலுத்துவாரோ, அதுபோன்று ஆட்சியை நடத்துகின்றார். அதனை மக்கள் நன்றாக உணர்ந்திருக்கின்றார்கள். அதுதான், இந்த வெற்றியினுடைய பிரதிபலிப்பு.
மகளிருக்கான உதவித் திட்டங்கள்!
குறிப்பாக பெண்கள் வாக்களித்திருக்கிறார்கள். காரணம், பெண்களுக்கு இதுவரை கிடைக்காத வாய்ப்புகள் எல்லாம் தற்போது கிடைத்திருக்கின்றன. கல்லூரி செல்லும் பெண் பிள்ளைகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை; குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என்று மகளிருக்கான உதவித் திட்டங்கள்.
இந்தத் திட்டங்களைக்கூட கொச்சைப்படுத்தினார்கள், பிச்சைக்காசு என்றெல்லாம்கூட சொன்னார்கள். அப்படி சொன்னவர்களுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டியுள்ளனர்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘சன் நியூஸ்’ தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்தார்.