மனு தர்மத்தைத் தள்ளி மனித தர்மம் ஏற்கப்பட்டது காமராசரால்தான்.
மக்களுக்கோ புத்தி இல்லை; தற்குறிகளாய் இருக்கும் இந்த நிலையில் எப்படி ஜனநாயகம் உருப்பட முடியும்? எனவே தான் நாட்டு மக்களின் கல்வியில் நாட்டம் செலுத்தலானார் காமராசர். (‘விடுதலை’ 23.1.1965)
திரு. காமராசர் போன்ற பற்றற்றவர்களுக்கு உதவி செய்தால் நமக்கு நன்மை ஏற்படும் என்று நினைக்கிறேன். ஏன்? ஆச்சாரியார் இருந்து நமக்குக் கொடுத்த தொல்லைகளை நீங்கள் அறிந்ததேயாகும். குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்து நம்மீது திணித்தார்.
உத்தியோகத்தில் நமக்குக் கிடைக்க வேண்டியதையெல்லாம் அவர் இனத்திற்குக் கொடுத்தார். திரு. காமராசர் வந்ததும் அதை அப்படியே மாற்றி, ஆச்சாரியார் தன் இனத்திற்குச் செய்ததுபோல இவர் நம் இனத்திற்குச் செய்கிறார் என்ற காரணத்தை வைத்துக் கொண்டு இந்தப் பார்ப்பனர்கள், அவரை எப்படியாவது ஒழித்துக்கட்டத் திட்டமிட்டு அவருக்கு எவ்வளவு தொல்லைகள் உண்டாக்க முடியுமோ அவ்வளவும் கொடுத்து வருகிறார்கள். ஆகவேதான் நாம் திரு. காமராசரை ஆதரிக்கும் நோக்கம் கொண்டிருக்கிறோமே தவிர வேறு ஒன்றும் இல்லை. நீங்கள் சிந்திக்க வேண்டும்; திரு. காமராசர் அவர்கள் தோல்வி அடைந்து மந்திரி பதவிக்கு வரமுடியவில்லையானால் அடுத்து வருபவர் யாராக இருக்க முடியும் என்பதையும், வந்தால் நமக்கும் நம் இனத்திற்கும் எவ்வளவு தீமைகள் உண்டாகுமென்பதையும் சிந்தித்துப் பாருங்கள். ஆகவே நம் இனம் முன்னேற வேண்டு மானால் நாமெல்லோரும் ஒன்று சேர்ந்து திரு. காமராசருடைய கையைப் பலப்படுத்த வேண்டும்.
(2.10.1956 அயன்புரத்தில் திரு.வி.க. நினைவு நாள் – தந்தை பெரியார் உரை ‘விடுதலை’ 9.10.1956)